தேசிய வரைவு கல்விக் கொள்கை 2019 – National Education Policy 2019

தேசிய வரைவு கல்விக் கொள்கை 2019 – National Education Policy 2019

தேசிய வரைவு கல்விக் கொள்கை 2019

தேசிய கல்விக் கொள்கை என்பது இந்தியாவின் மக்களிடையே கல்வியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசால் வடிவமைக்கப்பட்டதாகும். முதல் தேசிய கல்விக் கொள்கை 1968-ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் அரசாலும் மற்றும் இரண்டாவது தேசிய கல்விக் கொள்கை 1986-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் அரசாலும் வெளியிடப்பட்டது. 1947-ஆம் ஆண்டில் சுதந்திரத்திற்குப் பின் இந்திய அரசாங்கம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கல்வியறிவு சம்பந்தமான பிரச்சனைகளைத் தீர்க்க பல்வேறு திட்டங்களை வகுத்தது. மேலும் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மவுலானா அபுல்கலாம் ஆசாத் நாடு முழுவதும் கல்வியை ஒன்றிய அரசு கட்டுப்பாட்டின் கீழ் ஒரு சீரான கல்விமுறையுடன் கொண்டுவர திட்டமிட்டார். இதனைத் தொடர்ந்து இந்தியாவின் கல்வி முறையை நவீனமயமாக்க பல்கலைக்கழக கல்வி குழு (1948-1949), இடைநிலை கல்வி குழு (1952-1953) மற்றும் கோதாரி கல்வி குழு (1964-66) ஆ கியவை ஏற்படுத்தப்பட்டது. மேலும் 1961-ஆம் ஆண்டு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு (NCERT–National Council of Educational Research and Training) தன்னாட்சி அமைப்பாக ஏற்படுத்தப்பட்டது. இது கல்விக் கொள்கைகளை உருவாக் கி அதை நடைமுறைப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

எழுத்தறிவின்மையை ஒழிப்பதற்கான அரசின் நடவடிக்கைகள்

  • பல்கலைக்கழக மானிய குழு ((UGC–University Grants Commission) 1948-49 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. மேலும் இது தாய்மொழி மூலம் கல்வி பயில்வதை ஊக்குவித்தது.
  • கோதாரி தலைமையிலான கல்விக் குழு 1968-இல் அறிமுகம் செய்யப்பட்டது.
  • மீண்டும் தேசிய கல்விக் கொள்கை 1986-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இக்கொள்கை ஆரம்ப கல்வி அனைவருக்கும் அவசியம் என்பதை வலியுறுத்தியது. மேலும் இக்கொள்கை மூலம் முறைசாரா கல்வி முறையும் அறிமுகம் செய்யப்பட்டது.
  • அடுத்தப்படியாக 1992-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. இதில் கரும்பலகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
  • அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) 2001-02 இல் அறிமுகம் செய்யப்பட்டது.
  • அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் (RMSA) 2009-இல் கொண்டுவரப்பட்டது.

கஸ்தூரிரங்கன் குழு

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் புதிய கல்விக் கொள்கையை வகுப்பது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் கணிதவியல் நிபுணர் மஞ்சுல் பார்கவா உள்ளிட்ட 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்டது. அப்போது அக்குழுவிடம், புதிய கல்விக் கொள்கை வகுப்பது தொடர்பாக முன்னாள் கேபினட் செயலர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்ககையில் இருக்கும் அம்சங்களையும் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, கஸ்தூரிரங்கன் தலைமையிலான நிபுணர்கள் குழு கல்வி தொடர்பான பல்வேறு அம்சங்களையும் ஆராய்ந்து வரைவு அறிக்கையை உருவாக்கியது. அந்த வரைவு அறிக்கை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக அண்மையில் பதவியேற்ற ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கிடம் வழங்கப்பட்டது. அந்த அறிக்கை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அதன்மீது கருத்து தெரிவிக்கும் படி நாட்டு மக்களை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டது.

மும்மொழி கொள்கை

மொத்தம் 484 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில், இந்தியாவில் மும்மொழி கொள்கை நீடிக்க வேண்டும் என்றும் மேலும் அதை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஹிந்தி, ஆங்ம்லத்துடன் நாட்டின் பிற பகுதிகளில் பேசப்படும் தற்கால இந்திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை கட்டாயம் கற்க வேண்டும் எனவும், ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் மாநில மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் சேர்த்து ஹிந்தியை கட்டாயம் கற்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த நடைமுறையானது 6-ஆம் வகுப்பில் இருந்த தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பான பரிந்துரைகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.

வரைவு அறிக்கையில் திருத்தம்

ஹிந்தி மொழி திணிக்கப்படுவதற்கு எதிராக தமிழகத்தில் கடந்த 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதை கவனத்தில் கொண்ட மத்திய அரசு, ஹிந்தி மொழி கட்டாயமாகத் திணிக்கப்படாது என்று அப்போது அறிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில், தற்போது 6-ஆம் வகுப்பு முதல் ஹிந்தி கட்டாயமாக கற்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கு தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து, அது வெறும் வரைவு அறிக்கைதான், இறுதி முடிவு அல்ல என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் 3-ஆவது மொழியாக ஹிந்தி மொழியை கட்டாயம் கற்க வேண்டும் என்ற புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய ஷரத்தை மத்திய அரசு நீக்கியுள்ளது. அதற்குப் பதிலாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை மாணவர்களே தங்களது விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் திருத்தப்பட்ட புதிய கல்விக்கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

3 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியையோ அல்லது அதற்கும் மேற்பட்ட மொழிகளையோ மாற்றி கற்க விரும்பும் மாணவர்கள், அதை 6-ஆம் வகுப்பு அல்லது 7-ஆம் வகுப்பில் செய்யலாம். அப்படி செய்வதாலேயே, உயர்நிலை பள்ளிப்படிப்பின்போது நடத்தப்படும் மொழித்திறன் தொடர்பான தேர்வில் 3 மொழிகளிலும் தங்களுக்கு இருக்கும் திறமையை நிரூபிக்க இயலும். 6-ஆம் வகுப்பில் 3-ஆவது மொழியை தேர்வு செய்வது என்பது சம்பந்தப்பட்ட மாணவர்களின் விருப்பம், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி கல்விமுறை ஆகியவற்றின் ஆதரவு ஆகியவை இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் அடிப்படை திறனை பரிசோதிக்கும் வகையிலேயே, மொழித்திறன் தொடர்பான தேர்வுகள் நடத்தப்படும்.

மேற்கூறிய அனைத்தும் வரைவு அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டிருப்பது தமிழகம் மட்டுமில்லாமல் மேலும் சில மாநிலங்களிலும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹிந்தி மொழியை திணிப்பதன் மூலம் தமிழகத்தில் பேசப்படும் ஆதி மொழியாகிய தமிழ் மொழி கொஞ்சம் கொஞ்சமாக மறையக்கூடும் என்பது பல மொழியியல் வல்லுநர்களின் கருத்தாக இருந்து வந்தது. ’’எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை’’ என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் தெரிவித்திருப்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்விக்கொள்கையானது, கடந்த 1986-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, பின்னர் 1992-ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. கஸ்தூரிரங்கன் தலைமையிலான நிபுணர்கள் குழுவானது, முன்பு ஸ்மிருதி இரானி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது, முன்னாள் அமைச்சரவைச் செயலர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் உருவாக்கப்பட்ட குழுவின் அறிக்கையையும் கவனத்தில் கொண்டு வரைவு அறிக்கையை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.