வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் நியமனத்துக்கு தடை மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் நியமனத்துக்கு தடை மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை, செப். 4& வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதற்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. புதுக்கோட்டையை சேர்ந்த தமிழரசன், திருச்சுழியைச் சேர்ந்த ராமக்கண்ணன் உள்ளிட்ட 18 பேர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டோம். ஆனால் வெயிட்டேஜ் மதிப்பெண் எங்களுக்கு குறைத்து வழங்கப்படுவதால் எங்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்காமல் போனது. கடந்த 2000ம் ஆண்டுக்கு முன்னர் பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு பாடத்திட்டங்கள் மிகவும் கடினமாக இருந்ததால் ஆயிரத்திற்கும் குறைவான மதிப்பெண்களே பெற முடிந்தது. தற்போது உள்ள பாடத்திட்டம் சுலபமாக இருப்பதால் ஆயிரத்து 100க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறமுடிகிறது. எனவே வெயிட்டேஜ் மதிப்பெண் முறை சரியானதாக இல்லை. இதனை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர். மனுதாரர் தரப்பில் வக்கீல் லஜபதிராய், வீரகதிரவன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், கவுன்சிலிங் முடிந்திருந்தாலும் நிறுத்திவைக்கவேண்டும் என நீதிபதி கே.கே.சசிதரன் உத்தரவிட்டார்.