நீதிபதிகளை நியமிக்கப் புதிய முறை: மக்களவையில் ஒருமனதாக மசோதா நிறைவேறியது

நீதிபதிகளை நியமிக்கப் புதிய முறை: மக்களவையில் ஒருமனதாக மசோதா நிறைவேறியது

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, நீதிபதிகள் தேர்வுக் குழுவே (கொலீஜியம்) நீதிபதிகளைத் தேர்வு செய்யும் தற்போதைய நடைமுறைக்குப் பதிலாக, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அந்தப் பணியை மேற்கொள்ளும்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவை, மத்தியில் புதிதாக ஆட்சிக்கு வந்த பாஜக அரசு திரும்பப் பெற்றது.

அதற்குப் பதிலாக “தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் -2014′ என்ற புதிய மசோதாவை கூடுதல் அம்சங்களுடன் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. இதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவையும் மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த இரு மசோதாக்கள் மீது மக்களவையில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. அதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் புதன்கிழமை பதிலளித்துப் பேசியதாவது:

மத்திய அரசு கொண்டு வரும் இந்தச் சட்டம் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை பாதிக்காது. நீதிபதிகள் நியமனத்தில் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ள இந்தச் சட்டம் வழிவகை செய்யும்.

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வு மற்றும் அவர்களின் பதவி உயர்வு என்பது இனி அவர்களின் மூப்பு, திறமை, தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.

திருத்தம்: “நீதிபதிகள் நியமன ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 6 பேரும் “ஒருமனதாக’ ஒப்புதல் தெரிவித்தால்தான், ஒருவர் நீதிபதியாக நியமனமோ, பதவி உயர்வோ பெறுவார்’ என்று புதிய மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஷரத்தில் “ஒருமனதாக’ என்ற வார்த்தை நீக்கம் செய்யப்படுகிறது.

இதன் மூலம், ஆணைய உறுப்பினர்களின் ஒருமனதான ஒப்புதலின்றி பரிந்துரைக்கப்படும் பெயர்களையும், குடியரசுத் தலைவர் பரிசீலித்து, நீதிபதியாக தேர்வு செய்யலாம். உயர் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்ய, மாநில அளவிலான நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள இயலாது.

ஏனென்றால், உச்ச நீதிமன்றம் தவிர நாட்டில் உள்ள 24 உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை குடியரசுத் தலைவரால் மட்டும்தான் நியமிக்க முடியும் என்பதால், உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக்கான பரிசீலனையில் இது பிரச்னையை ஏற்படுத்தும் என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

நிறைவேற்றம்: இதையடுத்து, “தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் -2014′ மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது. அதேபோல், இந்த மசோதாவுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

அதற்கு ஆதரவாக 367 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக ஓர் உறுப்பினர் கூட வாக்களிக்கவில்லை. இதையடுத்து, அந்தச் சட்டத் திருத்தமும் நிறைவேறியது.

காங்கிரஸ் கோரிக்கை ஏற்பு: முன்னதாக, இந்த மசோதாவில் இருந்து “ஒருமனதாக’ என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் வீரப்ப மொய்லி கோரிக்கை விடுத்திருந்தார். அதை ஏற்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இதேபோல், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசுகளின் கருத்தைக் கேட்க மாநில அளவிலான நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்க வேண்டும் என்று அதிமுக மக்களவை குழுத் தலைவர் தம்பிதுரை விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

மாநிலங்களவை: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால்தான் சட்டமாகும். மாநிலங்களவையில் ஆளும் பாஜகவுக்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாத காரணத்தால், எதிர்க்கட்சிகளின் ஆதரவை பாஜக நாடியுள்ளது.

புதிய முறை என்ன?: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்பட 5 நீதிபதிகள் கொண்ட தேர்வுக் குழு (கொலீஜியம்) தற்போது தேர்வு செய்து வருகிறது.

இதற்கு பதிலாக, மத்திய அரசு கொண்டு வரும் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அந்தப் பணியை மேற்கொள்ளும். இந்த ஆணையத்தில் 6 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். அதில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர், மத்திய சட்ட அமைச்சர், இரு நிபுணர்கள் ஆகியோர் இடம் பெறுவர்.

மக்களவையில் வாக்களித்த பிரதமர்: 10 ஆண்டுகளில் முதல் முறை

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமராக உள்ள ஒருவர், மக்களவையில் முதல் முறையாக புதன்கிழமை வாக்களித்துள்ளார். நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு, மக்களவையில் புதன்கிழமை நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கைப் பதிவு செய்தார். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இரு முறை பிரதமராகப் பதவி வகித்த மன்மோகன் சிங், மாநிலங்களவையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால், மக்களவையில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவரால் வாக்களிக்க முடியாமல் போனது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x