G.A.T.E தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசித்தேதி அக்டோபர் 14 வரை நீட்டிப்பு

G.A.T.E தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசித்தேதி அக்டோபர் 14 வரை நீட்டிப்பு

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் முதுகலை படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் சில உயர்கல்வி நிறுவனங்களில் முதுகலை படிப்புகளான எம்.இ., எம்.எடக் மற்றும் நேரடி பி.எச்டி., படிப்புகளில் சேர, கேட்(GATE) எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

மேலும், மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் உயர்கல்விக்கான நிதி உதவி பெறவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி வாய்ப்பின் போதும், கேட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்தாண்டு, இந்த கேட் நுழைவுத்தேர்வை, ஐ.ஐ.டி., கான்பூர் நடத்துகிறது.

இதற்கு விண்ணப்பிக்க இன்று (30ம் தேதி) இறுதி நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் காரணமாக அந்த மாநில மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கோரிக்கைகள் சென்றன. தொடர்ந்து, கேட் தேர்வுக் குழுவிற்கு அமைச்சகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து விவாதித்த கேட் தேர்வுக் குழு, இரண்டு வாரத்திற்கு விண்ணப்ப தேதியை நீட்டிக்க முடிவெடுத்தது. இதன்படி, அக்., 14ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.