சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் கட்சி தலைவர்கள் கலக்கம்

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் கட்சி தலைவர்கள் கலக்கம்

‘அரசியல் அமைப்புச் சட்டம், நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கியுள்ள, கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின், 66 – ஏ பிரிவை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க முடியாது’ என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பா.ஜ., தலைமையிலான இப்போதைய, தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் சிக்கலாக அமைந்துள்ளது.

ஏனெனில், இந்த கடுமையான சட்டம், காங்கிரஸ் அரசில் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தை இப்போது சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது, அக்கட்சிக்கு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல, இந்தச் சட்டத்தை ஆதரித்து, இரண்டு ஆண்டுகளாக, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதிட்டு வந்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்த சட்டப் பிரிவை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது, இப்போதைய அரசுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய தகவல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: இந்த விவகாரத்தில், முந்தைய மன்மோகன் சிங் அரசுக்கும், எங்கள் அரசுக்கும் ஒரே மாதிரியான கருத்து இல்லை. காங்கிரஸ் அரசு, மக்களின் கருத்து சுதந்திரத்தை அடக்க முயன்றது. அந்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

அது போலவே, சிவசேனா கட்சியும் கலக்கம் அடைந்துள்ளது. சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணத்தின் போது, கடைகள் அடைக்கப்பட்டதை விமர்சித்து கருத்து தெரிவித்த, இரு இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பின், இந்த விவகாரம் சூடுபிடித்ததால், சிவசேனாவுக்கும் இந்த தீர்ப்பு நெத்தியடியாக மாறியுள்ளது.

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் சரத் யாதவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை ரசிக்கவில்லை. ”சுப்ரீம் கோர்ட்டை நான் மதிக்கிறேன். எனினும், இந்த உத்தரவு சரியானது தான் என்று கூற மாட்டேன். அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக இருந்த அந்த பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதில் எனக்கு மகிழ்ச்சியில்லை,” என, சரத் யாதவ் கூறினார்.

கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த தீர்ப்பை வழங்க காரணமாக இருந்த, 2012ல், பால் தாக்கரே மறைவின் போது, மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட பெண் ரினு ஸ்ரீனிவாசன் கூறுகையில், இப்போது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அந்த கைது சம்பவத்திற்கு பின், என் வாழ்க்கை மிகவும் மாறிப் போய்விட்டதை உணர்ந்தேன். நீதி கிடைத்து விட்டது என்பதை உணர்கிறேன். தொடர்ந்து என் கருத்துகளை, சமூக தொடர்பு இணையதளங்களில் வெளியிடுவேன் என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை வரவேற்கிறேன். எங்கள் ஆட்சி காலத்தில், 2008ல் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தின், 66 – ஏ பிரிவு, சரியாக வரையப்படவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அந்தப் பிரிவு, தவறாக பயன்படுத்தக் கூடியது; தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

எழுத்தாளர் பாமரன் கூறுகையில். 66 – ஏ சட்டம் செல்லாது என, அறிவித்துள்ளது, வரவேற்கத்தக்கது. இது இடைவேளை தான். தனிப்பட்ட நபரின் அந்தரங்கம் என, எந்த விஷயமும் வலைதளங்களில் இல்லை. அமெரிக்கா போன்ற நாடுகள், கணினி வன்பொருளை வேவு பார்க்கும் மென்பொருளை வைத்துள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, முழு சுதந்திரத்தை அளிக்காது என்றார்.

கார்ட்டூனிஸ்ட் பாலா கூறுகையில், சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அரசுகளும் சரி, தனி மனிதர்களும் சரி, எதிர் கருத்துக்களைக் கண்டு எரிச்சல் அடைகின்றனர். சமூக வலைதளங்களில் எழுதுபவர்களும், தனிப் பக்கங்களை வைத்திருப்பவர்களும், அதை ஓர் ஊடகமாகக் கருதி பயன்படுத்த வேண்டும். அப்போது தான், அதற்கு தடை சட்டமும் வராது, அச்சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்தும் செய்யாது என கூறினார்.

திரைப்பட இயக்குனர் கீரா கூறுகையில்,சாதாரண பொதுமக்கள் கருத்து சொல்லும் தளமாக, சமூக வலைதளங்கள் உள்ளன. சாமான்யர்களின் கருத்து தான், சமூகத்தின் உண்மையான கருத்தாக இருக்கும். பிற ஊடகங்கள் சொல்ல முடியாத கருத்தை, சமூக வலைதளங்கள் தான், பிரதிபலிக்கின்றன. இந்நிலையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 – ஏ, ரத்து செய்யப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது என கூறினார்.