ஆசிரியர் பணி நியமனம் – வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி

ஆசிரியர் பணி நியமனம் – வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி

தகுதித்தேர்வு நடத்தி ஆசிரியர்களை நியமிப்பதில், வெயிட்டேஜ் முறையை ரத்துசெய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

கடந்த 2013ம் ஆண்டு TNTET தகுதித்தேர்வு எழுதிய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, அரசுப் பணிக்கென தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தேவைக்கும் அதிகமான ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதால், அவர்களை பணி நியமனம் செய்ய, அவர்கள் பள்ளி அரசுத் தேர்வுகள் மற்றும் பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களோடு, TNTET மதிப்பெண்களையும் சேர்த்து, மொத்தம் 100க்கு மதிப்பிட்டு, அதன்மூலம் வெயிட்டேஜ் வழங்கப்பட்டு, அரசுப் பணிக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கும், இன்று பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களுக்கு நிறைய வித்தியாசம் உள்ளது என்பதால், அரசு கொண்டுவந்த புதிய வெயிட்டேஜ் முறையை ரத்துசெய்ய வேண்டுமென, TNTET தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும், அரசு பணி வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், ஆசிரியர் பணி நியமனத்திற்கு தற்காலிக தடை விதித்தது. இதனையடுத்து அரசு தரப்பில், தடையை நீக்கக்கோரி வாதிடப்பட்டது. கடந்த சில வாரங்களாக இந்த வழக்கு நடந்து வந்தது.

இதனையடுத்து, இந்த வழக்கில் செப்டம்பர் 22ம் தேதி நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு தகுதித்தேர்வு எழுதிவிட்டு, தற்போது எதிர்ப்பு தெரிவித்தால் எப்படி ஏற்றுக்கொள்வது? எனவே, இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 45க்கும் மேற்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதன் மூலம், 14,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் அரசு பணி நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியுள்ளது. அவர்கள் அனைவரும் வெகு விரைவில் பணி நியமனம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.