முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் : 8 – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் : 8 – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

அத்துமீறு எல்லை தாண்டிப் போரிடு

போர் தந்திரம் 7

சட்ட திட்டங்களுக்குட்பட்டு நடந்து கொள்வது ஒவ்வொரு பிரஜையின் கடமையாகும். அது போல நமது மனசாட்சிக்கு விரோதமில்லாமலும் நடந்து கொள்ள வேண்டும். இவை நாகரிக உலகின் அடிப்படைத் தேவை என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். இங்கே அத்துமீறலும், எல்லை தாண்டுவதும் தவறானது; ஆபத்தானது. ஆனால் பல வேளைகளில் நமது எல்லைகளை நாமே நிர்ணயித்து விடுகிறோம். நம்மால் ஒரு பாடத்தில் 100 க்கு 100 வாங்க முடியாது, 80 மதிப்பெண்கள் தான் பெற முடியும் என்பதெல்லாம் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட ஒரு வரம்பு (limit). இது தான் உண்மையான, இயற்கையான வரம்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை.

ஒரு மனிதனால் 100 மீட்டர் தூரத்தை 10 விநாடிக்குள் கடக்க முடியாது என்று மனிதகுலம் நிர்ணயித்திருந்தது, அல்லது நம்பியிருந்தது! ஆனால் 1964 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்த தூரத்தை 9.9 விநாடியில் ஓடி, அந்த 10 விநாடி தடையை (barrier) முறியடித்தார் அமெரிக்க வீரர் பாப் ஹெயஸ்.

கல்வியில், கலையில், பொருளாதாரத்தில், விஞ்ஞானத்தில், அரசியலில் எல்லை கடந்து போர் தொடுத்தவர்களுக்கு மட்டுமே வெற்றி கிட்டியிருக்கிறது. பெண்கள் படிக்க வேண்டியதில்லை, வீட்டில் முடங்கிக் கிடந்தால் போதும் என்றிருந்த காலத்தில் எல்லை தாண்டி மருத்துவக் கல்வி பயின்ற முத்துலட்சுமி ரெட்டி பிற்காலத்தில் இந்தியாவின் (தமிழகத்தின்) தலைசிறந்த மருத்துவராகவில்லையா? இசை என்பது ஒரு சில மேல்தட்டு இசைஞான குடும்பத்தில் பிறந்தவர்களுக்கே உரியது என்றிருந்த போது, அவ்வகை போலியான நியதிகளையெல்லாம் பொருட்படுத்தாமல், அந்தப் போர்க்களத்துக்கு அத்துமீறிக் களமிறங்கிய இளையராஜா, ஒரு இசைஞானியாகவில்லையா? இதயத்தை உருக்கும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைத் தரவில்லையா?

கடல்கடந்து செல்வது மகாபாவம் என்ற கட்டுப்பாட்டுக்குள் அடங்கி இங்கிலாந்திற்கு படிக்கச்செல்லாமலோ, அல்லது ஒரு இஸ்லாமியக் கம்பெனிக்கு சட்டபிரதிநிதியாக பணியாற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு செல்லாமலோ, இருந்திருந்தால், மகாத்மா காந்தி அவர்கள் போர்பந்தரில் ஒரு வியாபாரியாக மட்டும்தானே இருந்திருக்க முடியும்? எல்லை தாண்டி, கடல்தாண்டி சிகாகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில் பேசிய பிறகு தானே சுவாமி விவேகானந்தருக்கு இந்திய நாட்டின் பெருமைகளை, இந்து மதத்தின் மகிமைகளை உலகத்திற்கு எடுத்துச் செல்ல (சொல்ல) முடிந்தது? எல்லை தாண்டி அத்துமீறுவதில் இங்கு என்ன தவறு இருக்கிறது?

எனது உறவினர் குடியிருக்கும் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் ஓர் உதவி கேட்டார். டிப்ளமோ (Diploma in Mech.Engg.) படித்த தனது மகனுக்கு வேலை வாங்கித் தர வேண்டும் என்றார். அவனுக்கு கோவையில் வேலை பெற முயற்சிக்கலாம் என்றேன். அது வேண்டாம், மிக தூரம் என்றார். சென்னையில் முயற்சிக்கலாமே என்றேன். அதுவும் வேண்டாம் என்றார். இதே ஊரில் ஒரு தொழிற்சாலையில் வேலை வேண்டும், வாங்கித் தாருங்கள் என்றார். ஏன் அப்படி ஒரு நிபந்தனை என்றால், பெற்றோரை கவனிக்க வேண்டுமாம்! மிகவும் நடுத்தர குடும்பம். (ஆனால் வீட்டு வேலைக்கு சில வேலைக்காரர்கள்.) அவருக்கு என்ன வயது என்று கேட்டேன். தனக்கு 56 வயது என்றார். 56 வயதானவரை கவனிக்க 22 வயது மகன் அங்கே இருக்க வேண்டுமாம். 80 வயது ஆனவர்கள் கூட அவர்களது வேலைகளை அவர்களாகவே கவனித்துக் கொள்கின்றனர். 86 வயதாகும் எனது தாயார் வீட்டையும் விவசாயத்தையும் கவனிக்கிறார்கள். நான் சென்றபோது எல்லாம் உணவு சமைத்து தருகிறார்கள். ஆனால் இங்கு 56 வயதான பெற்றோரை கவனிக்க மகன் வீட்டிலே வேண்டுமாம். இந்த மகன் ஏற்கனவே ஒரு சோம்பேறி. இவரை யார் கவனிப்பது? இப்படி, குடும்பம் என்றால் நம்மை கவனிக்க மற்றவர்கள் இருக்க வேண்டும் என்றும் குடும்பத்தில் எல்லோரும் ஒட்டி உறவாடி ஒன்றாக இருக்கவேண்டும் என்றும் பலர் தமக்குத்தாமே ஒரு விதியை நிர்ணயித்து வாழுகிறார்கள். வீட்டை விட்டு வெளியேறி வெளி உலகினை பார்க்க இவர்கள் தயாரில்லை. பக்கத்து மாவட்ட இடமாற்றம் (transfer) என்றாலே உடனே அவஸ்தை. யாரையாவது சிபாரிசு பிடித்து வீட்டிற்கு அருகிலேயே உத்தியோகத்தில் இருந்து விட வேண்டும் என்ற எண்ணம் ஓங்குகிறது. இன்னும் சொல்லப் போனால் இவ்வாறு வாழும் மக்கள் தான் இந்தியாவின் குறைந்த செயல்திறனுக்கு (low productivity) காரணமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த எல்லையை மீறி போர்புரிந்த வீரர்கள், பலர் நம்முன் நிற்கின்றனர்.

விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற 90 வயது நிரம்பிய தளபதி Air Marshal Hari என்பவர் என்னைக் காண கோவை கமிஷனர் பங்களாவிற்கு வந்தார். தனது அம்பாசிடர் காரை அவரே ஓட்டி வந்தார். 90 வயதை தாண்டிய பிறகும் M.F. ஹுசைன் என்ற இந்திய ஓவியர் பல ஒப்பற்ற ஓவியங்களை வரைந்தார். 2008-இல் அவரது “Battle of Ganga and Jamuna : Mahabharata 12” என்ற படைப்பு லண்டன் மாநகரில் உள்ள க்ரிஸ்டிஸ் (Christies) என்ற ஏல (auction) கம்பெனியில், 1.6 மில்லியன் டாலர் (சுமார் 9.64 கோடி ரூபாய்) க்கு விற்கப்பட்டது. ‘வயதாகி விட்டது, எனவே என்னால் எதையும் செய்ய முடியாது என்று பலரைப் போல் முடங்கிக் கிடந்து, ‘என்னை கவனியுங்கள் என்று பெற்ற பிள்ளைகளை வற்புறுத்தவில்லை அவர். மற்றவர்களுக்கு பாரமாகவும் இருக்கவில்லை.

இங்கிலாந்தில் இன்று 25,076 இந்திய வம்சாவளி மருத்துவர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவின் நாசா (NASA) விஞ்ஞானிகள் 36% இந்திய வம்சாவளியினர். இவர்கள் அனைவரும் அத்துமீறியவர்கள். வெளிநாடுகளுக்குச் சென்று வாய்ப்பு தேடியவர்கள் மட்டுமல்லாமல் வளர்ந்த நாடுகளின் மருத்துவர்களாகவும் விண்வெளி விஞ்ஞானி (Astronaut) களாகவும் போரிட்டவர்கள். அவர்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. நமக்கு அவர்களால் பெருமை ஏற்பட்டிருக்கிறது.

வாழ்க்கைப் போராட்டம் எப்போதுமே எளியதாகவும், மென்மையாகவும், சாதகமாகவும் இருந்து விடாது. பல கசப்பான சம்பவங்கள், ஆபத்தான நிகழ்ச்சிகள், மோசமான விளைவுகள் நித்தமும் நேரிடுகிறது. ஒரு வீட்டை கட்டித் தருவதாக பல லட்ச ரூபாய் வாங்கிவிட்டு, வீட்டையோ, பணத்தையோ தராமல் யாராவது ஏமாற்றிவிட்டால் என்ன செய்வது? அத்தகைய மோசடி பேர்வழிகள் மீது புகார் தெரிவிக்க வேண்டியது தான். எப்படியாவது அந்தப் பணத்தைத் திருப்பி வாங்க, வேண்டுமே! யாரிடமாவது சொல்லி வாங்க வேண்டுமே? மற்றவர்களுக்குச் சிரமம் தரக்கூடாது என்று அமைதியாக இருந்து விட முடியுமா? அத்துமீறிப் போரிட வேண்டியது தான்.

தனது தாயை கொல்ல முயன்ற தந்தையை கல்லூரி மாணவன் ஒருவன் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றுவிட்டான். இன்னொரு நிகழ்ச்சியில் ஒரு கல்லூரி மாணவியே தனது குடிகாரத் தந்தையை அடித்து கொன்றாள். இந்த மாணவர்களை காவல் துறையினர் கைது செய்யவில்லை. கொலைகாரத் திருடன் தனது மனைவியின் கழுத்தை நெரிக்கும் போது, ஒரு கணவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? அவன் அந்தத் திருடனை அடித்துக் கொன்றாலும் கூட அது ஒரு குற்றமாகாது என்று சட்டம் சொல்கிறது. Rights of Private Defence என்ற ஒரு உரிமை இந்திய தண்டனை சட்டத்தில் பிரிவு 96 முதல் 106 வரை வரையறுக்கப்பட்டுள்ளது. இது போன்ற நேரங்களில் உயிரைக் காத்துக் கொள்ளவும் மானத்தைக் காத்துக் கொள்ளவும் அத்துமீறி செயல்பட சட்டம் பாதுகாப்பு தருகிறது. அப்படி தைரியத்துடன் போராடிய சிதம்பரத்தைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் கல்பனா சாவ்லா விருது பெறுவதற்காக அவர்களுக்கு பரிந்துரை செய்து அவ்விருதினை பெற்றுத் தந்தேன்.

தங்களது நாட்டு மக்களை பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த உகாண்டா நாட்டின் மீது அத்துமீறி நுழைந்து தம் மக்களை இஸ்ரேல் நாட்டு சிறப்புப் படையினர் காப்பாற்றியதைப் பற்றி முன்னர் தெரிவித்திருந்தேன். இது நல்ல அத்துமீறல்தானே.

ஒசாமா பின்லேடன் அல்கொய்தா இயக்கத்தின் தலைவன். இவன் தான் அமெரிக்க இரட்டை கோபுரத்தை 11 செப்டம்பர் 2001 அன்று தகர்த்தான். இத்தாக்குதலில் 2,996 பேர் உயிரிழந்தனர். இதனால் நேரடி பாதிப்பு 90 பில்லியன் டாலர்கள், மறைமுக பாதிப்பு 21 பில்லியன் டாலர்கள். இந்தத் தாக்குதல் நடந்த இரண்டு நாட்கள் கழித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ‘ஒசாமா பின்லேடனை கண்டுபிடிப்பது எங்களது முக்கிய வேலை, இதுதான் எங்களது முதல் வேலை, அவனைக் கண்டுபிடிக்கும் வரை ஓயமாட்டோம் என்று கூறினார். பல ஆண்டுகள் ஆகியும் அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் 10 ஆண்டுகள் கழித்து CIA ஏஜென்டுகள் அவன் பாகிஸ்தானில் அபோட்டாபாத் (Abbottabad) என்ற ஊரில் இருப்பதை உறுதி செய்தனர்.

ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பியர் (Operation Neptune Spear) என்ற இந்த அதிரடித் தாக்குதலில் சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் ஏஜென்ஸி (CIA), கடற்படை சிறப்புப்பிரிவு (US Naval Special Warfare Development Group), 160th Special Operations Aviation Regiment (Airborne) ஆகியவை கலந்து கொண்டன. The Mission was to capture or to kill Bin Laden. இந்த அதிரடி நடவடிக்கையின் (operation) தலைவராக Joint Special Operations Command Vice Admiral Willam H.McRaven என்பவர் இருந்தார். இந்த அதிரடி நடவடிக்கை சிகப்பு அணி (Red squadron)-யிலிருந்த, கடற்படை சீல் (US Navy SEALs) 24 அதிரடி வீரர்களை உள்ளடக்கிய, மொத்தம் 79 கமாண்டோக்கள் கொண்ட ஒரு படையால் நடத்தத் திட்டமிடப்பட்டது. 2 ஹெலிகாப்டர்களில் படைவீரர்கள் இரண்டு குழுக்களாகச் சென்று தாக்குவது என்ற திட்டப்படி கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் என்ற இடத்திலிருந்து 90 நிமிடங்கள் பறந்து சென்று, பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் நுழைந்தது இந்த அதிரடிப்படை. இரவு நேரத்தில், அதுவும் மங்கிய நிலா ஒளியில் தாக்குதல் நடத்தினர். அந்த நேரத்தில்தான், பிறர் காணாதபடி ஹெலிகாப்டர் கீழாகப் பறந்து தரை இறங்க முடியும்.

இந்த அதிரடி தாக்குதலில் பின்லேடன், மற்ற மூன்று எதிரிகள், ஒரு பெண் ஆகியோர் கொல்லப்பட்டனர். 13 குழந்தைகளை சீல் (Seal) அதிரடிப்படையினர் விட்டு விட்டனர். ஒசாமா பின்லேடனின் உடல் North Arabian கடலில் போடப்படுவதற்கு முன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. வெற்றிக்கரமாக இந்த நடவடிக்கையை முடித்துவிட்டு திரும்பினர் அமெரிக்க சீல் அதிரடிபடையினர். அத்துமீறிச் சென்ற அதுவும் இன்னொரு நாட்டிற்கு சென்ற சீல் வீரர்களுக்குத் தானே வெற்றி கிடைத்தது? அத்துமீறிவில்லை என்றால் இவர்களுக்கு வெற்றி உண்டா?

வாழ்வில் போராடும் போது அத்துமீறவேண்டியிருக்கும், அதிரடிப்படையாக மாற வேண்டியதிருக்கும். நாம் செய்யும் தொழிலுக்கு ஏற்ப நமது எல்லையை விரிவு படுத்த வேண்டியிருக்கும். இன்று இரண்டு சட்டைகள் தைக்கும் ஒரு தையல்காரன் நாளை 3 சட்டைகள் தைக்க முடியும். அதற்கு அவன் எல்லையை மீற வேண்டும். செயலை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு ‘Process Design’ என்று மேலாண்மைத் துறையில் கூறுகிறார்கள். இன்று ஒரு செயலை 5 பேர் சேர்ந்து செய்தால், நாளை அதை 3 பேரை வைத்தே, அதே வேலை நேரத்தில், செய்து முடிக்க வேண்டும். அப்போது தான் தனிமனதின் செயல் திறன் (Production Ability) அதிகமாகும். அவரது மதிப்பு பெருகும்; வருமானமும் கூடும்.

Microsoft கம்பெனி CEO சத்ய நாதெள்ளா, Pepsico நிறுவனத்தின் CEO இந்திரா நூயி, Adobe கம்பெனியின் CEO சாந்தனு நாராயண் இவர்கள் அனைவரும் இந்தியர்கள். இவர்கள் சின்ன வட்டத்திற்குள், அவரது பெற்றோர்கள் விரும்பிய படி உள்ளூருக்குள்ளேயே தொழில் செய்திருந்தால், இந்த அளவுக்கு உயர்ந்திருக்க முடியுமா? அவர்கள் உயரபறந்திருக்க முடியுமா?

பாரதியார் சொன்ன வரிகளை சொல்கிறேன்
ஏறு ஏறு ஏறு! மேலே மேலே மேலே
உனக்குள் சிறகுகள் தோன்றுக…
பறந்து போ!
வானத்திற்கு எல்லை இல்லை!
போராளியாகிய உனக்கு எதற்கு?

-அடுத்த இதழில் சந்திப்போம்…

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x