முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் : 4 – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் : 4 – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

எதிரியைத் தெரிவு செய்

போர் தந்திரம் 3

எதிர்ப்புகளும், சிரமங்களும் போராட்டமும் நிறைந்ததுதான் வாழ்க்கை. பல்கலைக்கழக மதிப்பெண், போட்டித் தேர்வில் வெற்றி, உடல் நலம் பேணப் பயிற்சி, பதவி உயர்வில் போட்டி, ஈட்டிய பொருளைக் காப்பாற்றிக் கொள்ள முயற்ச்சி; திருமணம் என்று ஒவ்வொரு சாதனைகளுக்கும் போர் புரிய வேண்டியிருக்கிறது. நம்மை வீழ்த்த நினைப்பவர்கள், முதுகில் குத்த இருப்பவர்கள், வெறுப்பவர்கள், அவதூறு பேசுபவர்கள், என்று மலிந்து கிடக்கும் எதிரிகளிடம் போர்புரிவது என்பதும் முடிவில்லாத தொடர்கதைதான். இந்தச் சூழ்நிலையில் எல்லா எதிரிகளிடமும் ஒரே நேரத்தில் போரிட முடியாது. அது நல்ல வீரனின் போர் தந்திரமும் ஆகாது. எதிரிகள் யார் என்பதைக் கண்டறிய வேண்டும்! போர்க்களம் எது என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.

பல போர்களை ஒரே நேரத்தில் செய்பவன் படைகள் சிதறிப்போய் எல்லாப் போர்களிலும் தோல்வி அடைவான். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் (Hitler) செய்த இமாலயத் தவறும் அதுதான். பல நாடுகளில் போரிட்டு, படைகள் சிதறிப் போனபோது; மிக விசாலமான ரஷ்யா மீது படையெடுத்தால் பெரிய படுதோல்வியைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. Operation Barbarossa என்ற இந்த படையெடுப்பு 22 ஜூன் 1941-இல் துவங்கியது, இந்த போரில் 43 லட்சம் ஜெர்மன் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். ஜெர்மன் நாடு வீழ்ந்தது ஒரு படைத் தளபதியால். உனது குடும்பம் உன்னால் வளர வேண்டும் அல்லவா? எனவே பல தேவையில்லாத வேலைகளை கை விட்டு விடு.

கிரிக்கெட்டில் பிரபலமாக இருக்கும் ஒருவர் அதோடு கால்பந்தும் விளையாட ஆரம்பித்தால் அவருக்கு இரண்டிலும் வெற்றி பெற முடியாமல் போய்விடும். போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் (Focus) ஒருமித்த கவனம் மிகவும் அதிகமாகத் தேவைப்படுகிறது. எனவே ஒரு வேளையில் பெரிய ஒரு போரை மட்டும் மேற்கொண்டு வெற்றி பெறுவது நல்ல வீரனின் போர்த் தந்திரம். பல போர்களை ஒரே நேரத்தில் புரியும் போது பணம் செலவாகும், நேரம் விரயமாகும், படை சிதறிப்போகும், தளபதி பலவீனமாகிவிடுகிறான். எதிரி நம்மை எளிதில் வென்று விடுகிறான்.

ஒரு IAS அதிகாரியாகத் துடிக்கும் இளைஞன் ஒரு போர்த் தந்திரம் மிக்க போர்த் தளபதியினைப் போல், IAS போட்டித் தேர்வில் மட்டும் முழு வீச்சில் ஈடுபடவேண்டும். வெளிநாட்டில் MBA படிக்க இருக்கும் போது போட்டித்தேர்விற்கோ அல்லது எதிர்ப்புக்களை மீறி ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் பகீரத முயற்சியில் ஈடுபடுவதாகவோ இருந்தால், அவனது கவனம் சிதறி, எடுத்த காரியத்தில் சாதிக்க முடியாமல் போய்விடுகிறது. இப்படியாக IAS தேர்வெழுத சென்னைக்கு வந்து திருமணமாகி, கிராமங்களுக்குத் திரும்பி, பின்னர் கவலைப்படும் இளைஞர்கள் பலரையும் பார்த்து விட்டேன். இவர்கள் போர்க்களத்தைச் சரியாகத் தெரிவு செய்யாதவர்கள். பல எதிரிகளை ஒரே நேரத்தில் எதிர்க்கத் துணிந்தவர்கள், இதனால் தோல்வியுற்று வீடு திரும்பியவர்கள். கவனசிதறல் என்பது பெருங்குற்றம் எனலாம்.

சிலர் போர்க்களத்தில் திறம்பட போரிட்டு வெற்றியைக் கண்டு கொண்டனர். ஆனால் இவர்களை உலகம் வெற்றிச் செல்வராக மதிப்பது இல்லை. ஏனென்றால் இவர்கள் புரிந்த போர் தேவையில்லாத வெற்றுப்போர்! விமானப் பணிப்பெண் ஆகப்போகிறேன் என்று உடலை அழகுபடுத்தி, சிங்காரித்து, பல அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டு பல ஆண்டுகள் தீவிர பணவிரயம் செய்து, விமானப்பணிப்பெண்ணாகிவிட்ட உடல் அழகு உள்ள ஒரு பெண்மணிக்கு என்னதான் அங்கீகாரம் கிடைக்கப் போகிறது? அதற்குப் பதிலாக அதே விமானத்தை ஓட்ட பயிற்சி எடுத்து ஒரு விமானஓட்டி ஆகியிருந்தால் நல்ல மரியாதையும் கிட்டியிருக்கும். செய்யும் தொழில் மூலம் ஒரு மன திருப்தியும் கிடைத்திருக்கும். 250 பேரை சுமந்து பறக்கும் விமானத்தை பல ஆயிரம் மைல்கள் ஓட்டிச் செல்வது ஒரு சாதனை பணிதானே!

மேடைகளில் தோன்றி சினிமாப் பாடல்களைப் பாடும் நூற்றுக்கணக்கான பாடகர்கள் உள்ளனர். தங்களது இலட்சியத்தை அடைய எவ்வளவோ முயற்சிகளையும், போராட்டங்களையும் இவர்கள் சந்தித்து இருக்கக்கூடும். நல்ல குரல்வளம், ஞாபக சக்தி, இசை ஞானம், பயிற்சி, ஆயிரக்கணக்கான பாடல்களின் ஸ்வரம், பல்லவி, சரணங்கள் ஆகியவற்றை மனதில் வைத்து பாட எடுத்த முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல! ஆனால் இவர்கள் மேடையில் பாடும் சினிமாப்பாடல்களை ஒரிஜினலாகப் பாடிய சினிமா பின்னணி பாடகர்களுடன் இவர்களைச் சமமாக யாராவது பார்ப்பார்களா? அப்படி உயர்ந்த இடத்திற்குக் செல்ல இவர்கள் திரைப்பட பின்னணி பாடகர்களாக வந்திருக்க வேண்டும். தெரிவு செய்த போர்களுக்கிடையே பெரிய வேற்றுமை இருக்கிறது.
எந்த வேலை வாய்ப்பும் இல்லாத ஒரு பொறியியல் பிரிவில் சேர்ந்து, தீவிரமாகப் படித்து பட்டம் பெற்றால் என்ன பயன்? வேலை கிடைக்காமல் திண்டாட வேண்டியது தான், போரில் வெற்றி பெற்றாலும் அது தோல்விதானே? போர் வீரன் நல்லவன்தான், ஆனால் போர்க்களம் சரி இல்லை!

ஒரு சிலர் சிரமப்பட்டு பல லட்ச ரூபாய்களை திரட்டி ஒரு நெடுஞ்சாலை மீதே ஒரு ஆலயத்தைக் கட்டினார்கள் என்று வைத்துக் கொள்வோம். இது மிகப்பெரிய ஒரு முயற்சி, குறுகிய காலத்தில் பல லட்ச ரூபாய்கள் வசூல், நல்ல சிறந்த ஆலயம், என்றெல்லாம் இலக்கை அடைந்தாலும் இந்த ஆலயத்தால் சாலையின் பாதி இடம் அடைக்கப்படுகிறது என்கிறபோது இந்த சிலரின் அசாதாரண வெற்றியில் சமுதாயத்திற்கு நன்மையா, தீமையா? எடுத்த காரியத்தில் பூரண வெற்றி, ஆனால் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு தோல்வி! Operation success, Patient died என்ற கதைதானே!

தன் வாழ்க்கைப் போராட்டத்திலும் எதிரிகளைக் கண்டுபிடிப்பது அரிய காரியமாகும். அவர்கள் நண்பர்களோடு மறைந்து தென்படுவார்கள். தருணம் பார்த்து நம்மைத் தாக்குவார்கள். எனவே போர்வீரனே! சரியான எதிரியை அடையாளம் காண்; போர்க்களத்தைத் தெரிவு செய்; பின்னர் போர் தொடு.

எதிரியைக் கண்டுபிடி என்றபோது வெளியில் உள்ள மற்றவர்கள் மட்டும்தான் எதிரி என்று எண்ணிவிடக் கூடாது! உலகின் பிரசனைகளும், எதிர்ப்புகளையும், தாக்குதல்களையும் சமாளிக்கும் தருவாயில் உலகின் பிரச்சனைகளோ, ஆறோ, சூரியனோ, வெயிலோ, புயலோ, மழையோ என ஏதேதோ கூட உங்களுக்கு எதிராக இருக்கலாம். ஆகவே, எதிராளியை மட்டுமே எதிரி என்று நினைத்துவிடுபவன் நல்ல தளபதி அல்ல. சில வேளைகளில் உனக்கு தடைக்கல்லாக நிற்பது யாரெனில், அது நீயே தான்.

நீ யார் என்று உனக்குத் தெரியாத போது, எதிரி யார், நண்பன் யார், என்று பிரித்தறிய முடியாத போது, எதிரியைக் கண்டு மலைத்து நிற்கும் போது, உனது படைகளை நீ திரட்டாத போது, உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லாத போது, நீயே உனக்கு எதிரி ஆகிவிடுகிறாய். அந்த எதிரி மீதும் போரிடப்போகும் தளபதி நீயேதான் என்பதை மனதில் நிறுத்து. போரில் வெற்றி தோல்வி உன்னைப் பொறுத்தே அமையும் என்பதைத் தெரிந்து கொள். உனது வீரமும் விவேகமும், எல்லாவற்றிற்கும் மேலான மனப்பான்மையும்தான் போரின் போக்கை மாற்றி, கோழையாக நீ இருக்கும் பட்சத்தில் உன்னை ஒரு உத்வேகமுள்ள, போர்த் தந்திரம் கொண்ட வீர மகனாக உருவாக்கும் என்பதை முழுமையாக நம்பிவிடு.

பள்ளியிலும், கல்லூரியிலும், வேலை செய்யும் இடத்திலும், திருமண வாழ்விலும் போட்டித் தேர்வு மைதானத்திலும் போர் வீரன் தோன்றுகிறான். அவன் தனது உடலையும், ஆன்மாவையும் படைபலத்தையும் பெரிய இலட்சியத்துக்காகத்தான் அர்ப்பணிக்கிறான். தனது படைகளையும் நேரத்தையும், பணத்தையும் அவன் வீணடிக்க மாட்டான். அதற்கு அவனின் போர்த் தந்திரம், தான் போரிடப் போகும் எதிரியை அவன் தேர்வு செய்வதில் அடங்கியிருக்கும்.

– அடுத்த இதழில் சந்திப்போம்…

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x