முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் : 2 – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் : 2 – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

சாதனையை அடிப்படைத் தேவையாக்கு

போர் தந்திரம் 1

சாதனை படைக்க வேண்டும் என்று சொன்னேன். ஏன் சாதனை படைக்கவேண்டும்? உங்களை இந்த உலகம் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றால் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும். படிப்பில், கல்வியில், தொழிலில், கலையில், விளையாட்டில், தொழில் நுட்பத்தில் அல்லது பொருளாதாரத்தில். ஒரு சிலர் மற்றவர்களைக் கவர வினோதமான சாதனைகளில்கூட ஈடுபடுகிறார்கள். லிம்கா புக் அல்லது கின்னஸ் புக் போன்றவற்றில் இடம்பெற இம்முயற்சிகள் நடக்கின்றன. காலால் நடப்பதற்கு பதில் கைகளால் நடந்துகாட்டி சாதனை படைக்கிறார்களே, ஏன்? மற்றவர்கள் கவனம் இவர்கள் பக்கம் திரும்ப வேண்டும்! அவர்களது பெயர் பேசப்பட வேண்டும்! அதாவது மக்கள் மத்தியில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். ஒருவர் தனது விசிட்டிங் கார்டைத் தந்து, தான் ஒரு ‘விளம்பர சினிமா இயக்குநர்Ad Film Director) என்றும், பல விருதுகளைப் பெற்றவர் என்றும், அடுக்கடுக்காக தனது விருதுகளைப் பற்றிச் சொன்னார். தனது குறும்பட தயாரிப்பு சாதனைகளை சொல்லிக் கொண்டே போனார். எனக்கு இவரைத் தெரியாது. கேள்விப்படவும் இல்லை. ஆனால் இவரைப் போல பலரைப் பார்த்திருக்கிறேன். இவர்கள் தங்களது சாதனைகளைச் சொல்லி மரியாதை தேடுகிறார்கள்.

இவர்கள் மட்டுமல்ல, நாம் அனைவரும்தான். ஏனென்றால் அங்கீகாரம் என்பது மனிதனுக்கு மிகவும் தேவைப்படுகிறது. உணவு, தண்ணீர், பாலியல் (Sex) போன்ற தேவைகளுக்கு அடுத்தபடியாக மனிதனுக்கு ஓர் அங்கீகாரம் தேவைப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை.

ஒரு சிலர் மற்றவர்களைக் குறைகள் கூறியோ அல்லது குற்றம் சாட்டியோ அதில் பெயர் தேட முயல்கிறார்கள். ‘சுய விளம்பரம் கூடாது என்ற நூல் எழுதிய ஆசிரியர் தனது பெயரை கொட்டை எழுத்தில் அந்த நூலில் எழுதி இருக்கிறார். இவர் மாதிரியில்லாமல், உண்மையை ஒப்புக்கொண்டு வரவேற்போம். மரியாதை என்பது வேண்டும். அவ்வளவு தான்.

ஏதேனும் ஒரு வகையில் சமூகம் தன்னை அங்கீகரிக்க வேண்டுமே என்று மனிதனுக்கு ஒரு அச்சம் உண்டு. இல்லாவிட்டால் மற்றவர்கள் தன்னை உதாசீனப்படுத்தி விடுவார்களோ என்ற பய உணர்வுதான் அதற்கு காரணம்.

ஒருவேளை எவருமே நம்மிடம் பேசவில்லை என்றால்…? அனைவருமே நம்மைத் தவிர்க்கிறார்கள் என்றால்…? அது மிகவும் வருத்தத்தை தரும் சூழ்நிலையாகும். சிலர் தற்கொலை செய்து கொள்ள முக்கியக் காரணம் தாங்கள் நேசித்த நபர்கள் தங்களிடம் பேச மறுத்து விட்டார்கள் என்பதுதான். இதில் சில நபர்கள் மிகவும் பலவீனமாக உள்ளார்கள். நான் விசாரித்த ஒரு வழக்கில் தான் நேசித்த நண்பன் தன்னிடம் பேசவில்லை என்பதற்காக ஒரு மருத்துவக் கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.

உனது அடிப்படைத் தேவை ’அங்கீகாரம்உனது அடிப்படை பயம், உதாசீனப்படுத்தப்படல். ஆகவே இரண்டையும் தவிர்க்க வேண்டுமென்றால் ஒரே ஒரு வழிதான் உண்டு. ஒரு சாதனையை படைத்துவிட்டு சாதனை மனிதனாக மாறு. சராசரி மனிதர்கள் உன்னைப் போற்றுவார்கள்! நேசிப்பார்கள்! உன்னால் பயனடைவார்கள். எல்லாவற்றிற்கும் மேல் உன் பெற்றோருக்கும் உன்னால் பெருமை ஏற்படும்.

சாதனை என்றால் என்ன? எதையும் சாதனையாக்க முடியும். மூச்சு விடுவதே ஒரு சாதனைதான், மூச்சு விட முடியாத போது! பக்கவாதம் (Stroke) வந்தபோது, நடப்பதே ஒரு சாதனைதான்! 8 மாத குழந்தை நடப்பது சாதனை அல்லவா! அந்தச் சுற்றுசூழலில் சாதனையை அளவிடலாம்.

நீ ஒரு இளைஞன். உனது சாதனை உயர்ந்ததாக இருக்க வேண்டுமல்லவா? இந்திய அளவில் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்தால் அது ஒரு சாதனை! பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பெற்றால் அது ஒரு சாதனை. IIT சென்னையில் முதலாமாண்டு படிக்க ஒரு இடம் கிடைத்தால் அதுவும் சாதனைதான்! ஒரு பெரிய வேலையில் சேர்ந்து விட்டாலும் அது சாதனைதான். இப்படியாக, சாதனைப்பட்டியலில் ஒரு IAS அல்லது IPS அதிகாரி ஆவதும் ஒரு சாதனையல்லவா? ஏனென்றால் அப்பணிகளின்
மூலமாக பல ஆயிரம் மக்களின் வாழ்க்கையில் விளக்கேற்ற முடியும். ஒரு நல்ல தலைமையை அரசு துறைக்குத் தர முடியும். மக்களுக்கு வழிகாட்ட முடியும்! ஒரு முன்மாதிரியாக செயல்பட முடியும். நமக்கும் அரசுக்கும் ஒரு நற்பெயர் கிடைக்கச் செய்யமுடியும். ஒரு ‘Good Governance’ என்பது என்ன என்று காட்ட முடியும்.

சாதனை படைக்க நினைப்பதுதான் நல்ல வாழ்க்கை. சாதனை படைக்க நினைப்பதுதான் முதல் போர் தந்திரமாக இருக்க முடியும். முடிவு எடுத்தவனால் மட்டுமே முடித்துக் காட்ட முடியும்.
சிந்தித்துப் பாருங்கள்! சாதனையாளர்களை யாராவது உதாசீனப்படுத்த முடியுமா? ஒதுக்கி வைக்க முடியுமா? யாருக்கேனும் அவர்களைப் பிடிக்காமல் போகுமா?

இவர்கள் அனைவருக்கும் உணவும், நீரும், பாலியல் உணர்வு மட்டும் அடிப்படைத் தேவையாக இருக்கவில்லை. சாதனை செய்ய வேண்டும் என்ற உணர்வும் ஒர் அடிப்படைத் தேவையாக இருந்திருக்கிறது. அப்படி ஓர் உணர்வின்றி இம்மாபெரும் சாதனைகளை இவர்கள் படைத்திருக்க முடியாது.
உன்னிடத்தில் சாதனைப் பசி இல்லையேல் ஒரு சாதனைப்பசியை ஏற்படுத்து! வெற்றியின் முதல் கொள்கை சாதனை படைக்க வேண்டும் என்ற உணர்வுதான்.

வாழ்வில் பல தோல்விகளா? அதைப்பற்றிய கவலையை விட்டுவிட்டு மறுபடியும் ஒரு பெரிய சாதனை படைக்க துணிந்தால் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். IAS அல்லது IPS தேர்வு என்பதும் மீண்டும் ஒரு வாய்ப்புதான். பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறாத பலரும் IAS தேர்வில் முதலிடம் பிடித்துள்ளனர். எப்போதுமே ‘இன்னும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். தோல்வி என்பது விழுந்து விடுவது அல்ல… அது வீழ்ந்தே கிடப்பதாகும்.

வாழ்க்கையின் முடிவு என்று நாம் நினைத்து விட்டது ஒருவேளை வாழ்க்கையின் வளைவுதான்” என்றார் மேரி பிக்போடு என்பவர். தளர்ந்த மனதிற்கு தெம்பூட்டும் அவரது வரிகளை இங்கே தருகிறேன்.

பலருக்கு தங்களது வாழ்க்கையை புதிதாக அமைக்க இவ்வரிகள் உதவின. உங்களுக்கும் அது உதவட்டும்.
இது வரையிலான தோல்விகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னும் ஒரு சாதனை வேண்டும். அதுதான் உங்களது மூச்சாக இருக்கவேண்டும். இப்படி ஒரு தேடல்தான் வெற்றியின் முதல் போர் தந்திரம்.
– அடுத்த இதழில் சந்திப்போம்…

0 0 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments