பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: மதுரையில் 463 பள்ளிகளில் வெளியிட ஏற்பாடு

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: மதுரையில் 463 பள்ளிகளில் வெளியிட ஏற்பாடு

மதுரையில், ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் 463 பள்ளிகளில் புதன்கிழமை வெளியிடப்படுகின்றன.

இதுகுறித்து மதுரை மாவட்ட முதன்மைக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மே 25) காலை வெளியிடப்படுகின்றன. இத்தேர்வெழுதிய மாணவ, மாணவியர் மதிப்பெண் பட்டியல் சீலிடப்பட்ட உறையில் பள்ளிகள் வாரியாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். அந்த உறையை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது அவரது பிரதிநிதி காலை 8 மணிக்கு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வந்து பெற்றுச் செல்ல வேண்டும். பின்னர் காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் மதிப்பெண் பட்டியலை அந்தந்தப் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் ஒட்டி தேர்வு முடிவு வெளியிடப்படும். மேலும், மாநில மற்றும் மாவட்ட வாரியாக சிறப்பிடம் பெற்றவர்கள் விவரத்தை அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி வெளியிடுவார்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பம்:பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான மதிப்பெண்கள் சான்று ஜூன் முதல் அந்தந்தப் பள்ளிகளில் வழங்கப்படவுள்ளன. மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் மதிப்பெண் சான்றுக்காக காத்திராமல், கல்வித்துறை இணையதளத்தில் மதிப்பெண் நகல் பட்டியலை பதிவிறக்கம் செய்து புதன்கிழமையே அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.