நோபல் பரிசு – 2019 – Nobel Prize 2019

நோபல் பரிசு – 2019 – Nobel Prize 2019

நோபல் பரிசு – 2019

நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல், ஸ்வீடனைச் சேர்ந்தவர். 1833-ஆம் ஆண்டு பிறந்த இவர், வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார். டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்ததுடன், பெரிய வெடிபொருள் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். தனது கடைசி உயில் மூலம், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார். அவரது நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம் ஆகிய மற்ற பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடனிலும் வழங்கப்படுகின்றன. நடப்பாண்டுக்கான நோபல் பரிசுக்கு 223 தனிநபர்கள், 78 அமைப்புகள் உள்பட 301 பரிந்துரை விண்ணப்பங்கள் வந்திருந்தன.

அமைதிக்கான நோபல் பரிசு :

அமைதியை நிலைநாட்டவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை எடுத்ததற்காக அபி அஹமத் அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை பெறும் 100-ஆவது நபர் / அமைப்பு எனும் பெருமையை அபி அஹ்மத் பெற்றுள்ளார். 2019 டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள விழாவில், அவருக்கு நோபல் பரிசுடன் இந்திய மதிப்பில் சுமார் ஆறரை கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

மிகவும் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட நாடாக இருந்து வந்த எத்தியோப்பியாவின் பிரதமராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்ற அபி அஹமத், அந்நாட்டில் தாராளவாத சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்களை சிறையில் இருந்து விடுவித்ததுடன், நாடுகடத்தப்பட்ட அதிருப்தியாளர்களை நாடு திரும்புவதற்கு அனுமதி அளித்தார். மிகவும் முக்கியமாக, 1998-2000 இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற எல்லைப் போரைத் தொடர்ந்து, ஏரிட்ரேயாவுடன் 20 ஆண்டுகாலமாக எத்தியோப்பியாவுக்கு நிலவி வந்த ராணுவ ரீதியிலான சிக்கலை கடந்த ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் இவர் முடிவுக்கு கொண்டுவந்தார்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு :

போலந்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக் மற்றும் ஆஸ்திரியாவின் பீட்டர் ஹேண்ட்கே ஆகியோருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும், நோபல் அமைப்பில் பரிசுக்குரியவர்களை தேர்வும் செய்யும் குழுவில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததால், சென்ற ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை. எனவே, இந்த ஆண்டு இலக்கியத்துறையில் இரண்டு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, புக்கர் பரிசு வென்ற எழுத்தாளரான ஓல்கா டோகார்ஸுக்கு

2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசும், பீட்டர் ஹேண்ட்கேவுக்கு 2019-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரிய நாடக ஆசிரியரும் நாவலாசிரியருமான பீட்டர் ஹேண்ட்கேவுக்கு, மொழியியல் புத்தி கூர்மையின் மூலம் மனித அனுபவத்தின் தனித்துவத்தை ஆராய்ந்த ஒரு சிறப்புமிக்க படைப்புக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அந்த அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலந்து நாவலாசிரியரான டோகார்ஸுக்கின் எழுத்து நடைக்கும், கோணத்துக்கும் இந்த அங்கீகாரம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, 2018-ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசுக்குரியவரை 2019-ஆம் ஆண்டு பரிசுக்குரியவரோடு சேர்த்து தேர்வு செய்யப்போவதாக அகாடமி அறிவித்தது. உலகப் போர்கள் நடந்துவந்த காலங்களில் ஆறு ஆண்டுகள் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இது தவிர, 1935-ஆம் ஆண்டும் தகுதியான நபர்கள் யாரும் இல்லை என்பதால் பரிசு அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.