எபோலா நோய் குறித்து அரசின் விளக்க அறிக்கை

எபோலா நோய் குறித்து அரசின் விளக்க அறிக்கை

எபோலா வைரஸ் அதிவேகமாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் நிலையில், இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதன் விவரம்:

இந்தியாவிற்கு எபோலாவின் தாக்குதல் பரவிக்கொண்டிருக்கிறது என்று ஒருபுறம் ஊடகங்கள் தெரிவித்தாலும் இதுவரை இந்தியாவில் எபோலா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

எபோலா வைரஸ் நோய் என்பது ஒரு கொடிய நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவீதம் பேர் தங்கள் உயிரையே இழக்கின்றனர். இந்த வைரஸ் மனிதர்கள், குரங்குகள், மனித குரங்குகளை பாதிக்கும்.

இந்த நோய் முதன் முதலாக 1976 ஆம் ஆண்டு காங்கோவில் உள்ள எபோலா நதியின் அருகே உள்ள ஒரு கிராமத்திலும் சூடான் பகுதியில் உள்ள ஒரு சிறிய ஊரிலும் கண்டறியப்பட்டது.
இது காயங்கள், சளி, இரத்தம் அல்லது உடலில் இருந்து வெளியேறும் திரவங்கள் (மலம், சிறுநீர், எச்சில், விந்து) மூலம் பரவுகிறது. எபோலா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பயன்படுத்திய துணி, படுக்கை விரிப்பு, பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மூலமும் இந்த நோய் பரவுகிறது.

திடீர் காய்ச்சல், தீவிர பலவீனம், தசை வலி, தலைவலி, வறண்ட தொண்டை ஆகியவை எபோலா நோயின் அறிகுறிகளாகும். இதற்கு பிறகு வாந்தி, பேதி, தோல் தடித்தல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு, உட்புறம் மற்றும் வெளிபுறம் ரத்த கசிவு ஏற்படலாம். குறைந்த வெள்ளை அணுக்கள், இரத்ததட்டு எண்ணிக்கை மற்றும் அதிக அளவிளான கல்லீரல் சுரப்பிகள் உற்பத்தி பரிசோதனை முடிவில் தெரியும். பாதிப்பிலிருந்து அறிகுறிகள் தெரிவதற்கான காலம் 2 முதல் 21 நாட்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் தென்படும்போது அவரால் பிறருக்கு இந்த நோய் பரவக்கூடும்.

குடும்ப நபர்களோ அல்லது சுகாதாரா மையங்களோ எபோலாவால் பாதிக்கப்பட்டவர்கள் / அறிகுறிகளுடன் தென்படுபவர்களுக்கு தாமாகவே சிகிச்சை அளிக்கக் கூடாது. எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தகுந்த மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட மருத்துவமனையை அணுகவேண்டும்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அவர்கள் அதிக அளவில் உடல் உள்ள நீரை இழப்பதால் அவர்களுக்கு சத்துள்ள திரவங்கள் கொடுக்க வேண்டும். தற்போது இந்த நோய்யை குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லை. ஆனாலும், சில நோயாளிகள் தகுந்த மருத்துவ சிகிச்சையால் மீண்டு வரலாம். எபோலா நோய்க்கு அங்கீகரிக்கப்பட்ட மருந்தோ, தடுப்பூசியோ இல்லை.

இந்த நோய் அதிகமாக சுகாதார ஊழியர்கள், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர் இறந்த பின், இறுதி சடங்கின் பொழுது அவர்களின் சடலத்தை தொடும் நபர்களுக்கு பரவுகிறது. வீடுகளில், பொதுக்கூட்டங்களில், மருத்துவமனைகளில் சில மருத்துவ நடவடிக்கைகள் மூலம் இந்த எபோலா வைரஸை கட்டுப்படுத்தலாம்.

எபோலா நோயிலிருந்து உங்களை காத்துக் கொள்ள சுகாதார அமைச்சகம் வெளியிடும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். உங்கள் அருகில் உள்ளவர்களுக்கு இந்த நோய் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தால் உடனே தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு ஊக்குவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட உங்கள் குடும்ப நபரை நீங்களே வீட்டில் பார்த்துக் கொள்ள முடிவு செய்தால் உள்ளூர் சுகாதார அதிகாரியிடம் தெரிவித்து தகுந்த பயிற்சி மற்றும் நோயாளியை கையாள வேண்டிய பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியையோ அல்லது வீட்டில் பார்த்துக்கொள்ளும் பாதிக்கப்பட்ட நோயாளியை தொட்டாலோ, நோயாளியின் உடலில் இருந்து வெளியேறும் திரவங்களை தொட்டாலோ உடனே உங்கள் கைகளை சோப்பை பயன்படுத்தி சுத்தமாக கழுவவும். எபோலா நோயால் உயிர் இழந்தவர்களின் சடலங்களை தகுந்த பாதுகாப்பு பொருட்களை கொண்ட பொது சுகாதார நிபுணர்களைக் கொண்டு பாதுகாப்பாக புதைக்க வேண்டும். தனி நபர்கள் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் பழகுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் (பழம் தின்னி வவ்வால், குரங்குகள், மனிதக் குரங்குகள்). விலங்கு பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தால் நீங்கள் அதைக் கையாளக்கூடாது. இறைச்சி உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பு நன்கு சமைத்திருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனி அறையில் வைப்பது உகந்தது. தனி அறைக்குள் போகும்போது, கையுறை அணிவது அவசியம். கைகளின் சுகாதாரம் தற்காப்பிற்கு மிகவும் அவசியமாகும்.

பாதிக்கப்பட்ட நான்கு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் இந்தியர்கள் மூலம் இந்த கொடிய வைரஸ் நம் நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 45,000 இந்தியர்கள் வாழும் பகுதிகளான கினியா, லைபிரியா, சியாரா லீயோன் மற்றும் நைஜீரியாவில் 932 மக்கள் இந்நோயினால் உயிர் இழந்துள்ளனர். எபோலா வைரஸ் இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நான்கு நாடுகளுக்கும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்தோ அல்லது பாதிக்கப்பட்ட வழியாகவோ வரும் அனைத்து பயணிகளையும் அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

எல்லா சர்வதேச விமான நிலையங்களிலும் பரிசோதனைக்காக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இங்கு வந்து சேர்ந்த பயணிகள் ஆரோக்கியமாகவே உள்ளனர். எல்லா மாநில அரசுக்கும் மருத்துவமனைகளில் சிறப்புத் தனி பிரிவுகள், தனி நபர் பாதுகாப்பு கருவிகளையும் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எபோலா வைரஸ் பற்றி மக்கள் தங்களது சந்தேகங்களை தீர்த்து கொள்ள மாநில சுகாதார துறை சார்பில் கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 044-23450496, 24334811 ஆகிய தொலைபேசி எண்களில் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *