ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை; தமிழக அரசின் உத்தரவு ரத்து

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை; தமிழக அரசின் உத்தரவு ரத்து

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்டோருக்கு 60க்கு பதில் 55 சதவீதமாக குறைத்து மதிப்பெண் சலுகை அளித்த தமிழக அரசின் உத்தரவை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.

மதுரை வக்கீல் கே.கே.ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: ஆசிரியர்கள் நியமனத்திற்கு குறைந்தபட்ச தகுதி நிர்ணயித்து, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) 2010 ல் உத்தரவிட்டது. அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருவர் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற முடியும்.

’ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மதிப்பெண் சலுகை அளிக்கலாம்’ என என்.சி.டி.இ., தெரிவித்தது. இதன்படி தமிழக பள்ளிக் கல்விக் கல்வி முதன்மைச் செயலர், டி.ஆர்.பி., தலைவர் உத்தரவில், ’2012 வரை நடந்த தகுதித் தேர்வில் பங்கேற்றவர்கள் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்’ என தெரிவித்தனர்.

தகுதித்தேர்வுகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு 60 க்கு பதிலாக 55 சதவீதமாக குறைத்து 2014 பிப்., 6ல் அரசு உத்தரவிட்டது. சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அந்தந்த மாநிலங்கள் மதிப்பெண் சலுகை வழங்கலாம் எனக்கூற என்.சி.டி.இ.,க்கு அதிகாரம் இல்லை; மத்திய அரசிற்குத்தான் உள்ளது.

’என்.சி.டி.இ., தெரிவித்தபடி தகுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் போதும்’ என தமிழக பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

மதுரை வின்சென்ட் தாக்கல் செய்த மனுவில், ’மதிப்பெண் சலுகை வழங்கி உத்தரவு பிறப்பிப்பதற்கு முந்தைய தகுதித் தேர்வுகளில் பங்கேற்றோருக்கும் சலுகை வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டார்.

இதில், நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி பெஞ்ச் உத்தரவு:

பல்வேறு கோரிக்கைகள் அடிப்படையில், மதிப்பெண் சலுகை வழங்கியதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க முடியாது. யார் கோரிக்கை வைத்தார்கள் என்பதை ஐகோர்ட்டிற்கு அரசு தெரிவிக்கவில்லை. அரசு உத்தரவு பிறப்பிப்பதற்கு ஓராண்டிற்கு முன், 60 சதவீத மதிப்பெண் நிர்ணயித்து விட்டு, தற்போது 5 சதவீத சலுகை வழங்கியது முரண்பாடு.

ஆசிரியர் தகுதித் தேர்வு போட்டித் தேர்வு அல்ல. இந்த தகுதித் தேர்வு காரணமாக தேர்ச்சி சதவீதம் குறைந்தது எனவும், அதனால் சலுகை என்பதையும் அரசு கூறுவதை ஏற்க முடியாது. தகுதித் தேர்வை போட்டித் தேர்வு போல், அரசு ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளது.

சமூக நீதி என்பதை இதில் கருத்தில் கொள்ள முடியாது. தகுதி தேர்வில் சலுகை வழங்கினால், குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்காது.சலுகை மதிப்பெண் வழங்கி அரசு உத்தரவு பிறப்பிப்பதற்கு முதல்நாள் (2014 பிப்.,5), இதுபோன்ற ஒரு வழக்கு ஐகோர்ட்டில் வந்தது.

அரசுத் தரப்பில் ’ஆசிரியர் தகுதித் தேர்வில் எவ்வித சமரசமும் கிடையாது’ என உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, ஐகோர்ட் பெஞ்ச் அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக உத்தரவிட்டது.

நீதிபதிகள் உத்தரவில் இட்ட கையெழுத்தின் மை உலர்வதற்கு முன், அரசு இதுபோன்ற ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கோர்ட்டை ஒரு ’ரப்பர் ஸ்டாம்’பாக கருதும் நிலை, இது. எப்படி மாணவர்கள் 100 க்கு குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்து, தேர்ச்சி பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ, அதே நிலை ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.

மதிப்பெண் சலுகை வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இதனடிப்படையில் நியமனம் மேற்கொண்டிருந்தால் தகுதி நீக்கம் செய்ய அவசியமில்லை. வின்சென்ட் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.