ஐக்கிய நாடுகள் சபை ( United Nations Organizations)

ஐக்கிய நாடுகள் சபை ( United Nations Organizations)

இரண்டாம் உலகப் போர் விளைவித்த நாசத்தால், பயங்கர விளைவுகளின் எதிரொலியாக எழுந்ததே ஐ.நா.சபை. (U.N.O). போரை ஒழிக்க, பன்னாட்டுக் கூட்டுறவை வளர்க்க, உலக மக்களின் முன்னேற்றத்திற்கும், நல்வாழ்விற்கும் உதவ ஓர் உலக அமைப்பு உருவாக்கப்பட வேண்டிய அவசியம் உணரப்பட்டது. உலக நாடுகளின் அரசியல் அறிஞர்கள் இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் 1945, ஏப்ரலில் சான்பிரான்சிஸ்கோ மாநாட்டைக் கூட்டினர். 51 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இம்மாநாடே ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை சாசனத்தை வரைந்தது. இது 1945, அக்டோபர் 24-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.  ஜூலை 2011-இல் தெற்கு சூடான் இதன் உறுப்பினராகச் சேர்ந்ததையடுத்து தற்போது ஐ.நா. சபை 193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. இதன் கொடியில் வெளிர் நீல நிறப் பின்னணியில் வெண்மை நிறத்தில் ஐ.நா. சபையின் சின்னமான ஆலிவ் இலைகளுடன் கூடிய உலகப்படம் அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24, ஐ.நா. தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷியன், ஸ்பானிஷ், சீன, அராபிய மொழிகள் இச்சபையின் அலுவலக மொழிகளாகும்.

ஐ.நா. உறுப்பு நாடுகளின் பட்டியல்

1945 அர்ஜென்டினா, பெலாரஸ், பிரேசில், சிலி, சீனா, கியூபா, டென்மார்க், டொமினிகன் குடியரசு, எகிப்து,  எல்சால்வடார், பிரான்ஸ், ஹைதி, இரான், லெபனான், லக்ஸம்பர்க், நியூசிலாந்து, நிகராகுவா, பராகுவே, பிலிப்பைன்ஸ், போலந்து, ருஷ்யா, சௌதி அரேபியா, சிரியா, துருக்கி, உக்ரைன், பிரிட்டன், அமெரிக்கா, யூகோஸ்லாவியா, கிரீஸ், இந்தியா, பெரு, ஆஸ்திரேலியா, கோஸ்டாரிகா, லைபீரியா, கொலம்பியா, மெக்ஸிகோ, தென் ஆப்பிரிக்கா, கனடா, எத்தியோப்பியா, பனாமா, பொலிவியா, வெனிசுலா, கௌதமாலா, நார்வே, நெதர்லாந்து, ஹோண்டுராஸ், உருகுவே, ஈக்வடார், இராக், பெல்ஜியம்
1946 ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன், தாய்லாந்து.
1947 பாகிஸ்தான், ஏமன்.
1948 பர்மா (மியான்மர்)
1949 இஸ்ரேல்
1950 இந்தோனேசியா
1955 அல்பேனியா, ஆஸ்திரியா, பல்கேரியா, கம்போடியா, பின்லாந்து, ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, ஜோர்டான், லாவோஸ், லிபியா, நேபாளம், போர்ச்சுக்கல், ருமேனியா, ஸ்பெயின், இலங்கை.
1956 மொராக்கோ, சூடான், துனீஷியா, ஜப்பான்
1957 கானா, மலேஷியா
1958 கினியா
1960 பெனின், அப்பர் வோல்ட்டா (புர்கினா ஃபாஸோ), காமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், காங்கோ (முன்னாள் சாயிர்), ஐவரி கோஸ்ட், சைப்ரஸ், காபோன், மடகாஸ்கர், நைஜர், சோமாலியா, டோகோ, மாலி, செனகல், நைஜீரியா.
1961 சியர்ரா லியோன், மாரிடானியா, மங்கோலியா, தான்சானியா.
1962 புருண்டி, ஜமைக்கா, ருவாண்டா, டிரினிடாட் & டொபாகோ, அல்ஜீரியா, உகாண்டா.
1963 குவைத், கென்யா
1964 மலாவி, மால்டா, ஜாம்பியா
1965 காம்பியா, மாலத்தீவுகள், சிங்கப்பூர்
1966 கயானா, போட்ஸ்வானா, லெசோதோ, பார்படோஸ்
1968 மொரீஷியஸ், சுவாசிலாந்து, ஈக்வடோரியல் கினியா
1970 ஃபிஜி
1971 பஹ்ரைன், பூடான், கத்தார், ஒமன், ஐக்கிய அரபுக் குடியரசுகள்
1973 பஹாமாஸ், ஜெர்மனி
1974 பங்களாதேசம், கிரெனடா, கினியா-பிஸ்ஸௌ
1975 கேப்வெர்ட், மொஸாம்பிக், சாவோடோம், – பிரின்சிப், பாப்புவா நியூகினியா, காமரோஸ், சுரினாம்
1976 சேஷெல்ஸ், அங்கோலா, சாமோவா
1977 ஜிபூடி, வியட்நாம்
1978 சாலமன் தீவுகள், டொமினிகா
1979 செயின்ட் லூசியா
1980 ஜிம்பாப்வே, செயின்ட் வின்சென்ட்
1981 வனாட்டு, பெலிஸ், ஆன்டிகுவா மற்றும் பார்படா
1983 செயின்ட் கிட்ஸ்-நெவிஸ்
1984 புருனே
1990 நமீபியா, லிச்டென்ஸ்டெயின்
1991 எஸ்தோனியா, வட கொரியா, தென் கொரியா, லாட்வியா, லிதுவேனியா, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா
1992 அர்மீனியா, கஸக்ஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, சான்மரினோ, தஜிகிஸ்தான், துர்க்மீனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், அசர்பெய்ஜான், போஸ்னியா, ஹெர்சேகோவினா, குரோஷியா, ஸ்லோவேனியா, ஜார்ஜியா
1993 செக் குடியரசு, ஸ்லோவாகியா, மாஸிடோனியா, எரித்ரியா, மொனாக்கோ, அன்டோரா
1994 பலாவ்
1999 கிரிபாடி, நௌரு, டோங்கா
2000 தூவலு
2002 சுவிட்சர்லாந்து, கிழக்கு திமோர்
2006 மாண்டெனிக்ரோ
2011 தெற்கு சூடான்

 

உறுப்பு நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள்:

செக்கோஸ்லேவியா 1945 முதலே உறுப்பினர். செக் குடியரசும், ஸ்லோவக் குடியரசும் 1993-இல் தனித்தனி உறுப்பினர்களாயின.

கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகள் 1973-இல் தனித்தனி உறுப்பினர்களாக இருந்தன. 1990-இல் இரண்டும் ஒன்றிணைந்தன.

1945 முதல் உறுப்பினராக இருந்த சோவியத் யூனியனின் உறுப்பினர் பதவி 1991-இல் ரஷ்யாவிற்கு வழங்கப்பட்டது.

மாஸிடோனியா ஐ,நாவில் முன்னாள் யூகோஸ்லேவிய மாஸிடோனியக் குடியரசு” என அடையாளம் காணப்படுகிறது.

1961-இலிருந்து உறுப்பினராக இருந்த டங்கனிகா,1963 முதல் உறுப்பினராக இருந்த சான்சிபாருடன் 1964-இல் இணைந்தது. புதிய நாட்டின் பெயர் தான்சானியா.

1971ஆம் ஆண்டுவரை சீனா, ஐ.நா.வின் உறுப்பு நாடாக இல்லை சீனக் குடியரசு என்ற பெயரில் தற்போதைய தைவானே சீனாவாக அறியப்பட்டது. ஆனால் 1971 அக்டோபர் 25 அன்று தைவான் சீனாவின் ஒரு மாகாணம் எனக் கருதப்பட்டு சீனா அதிகாரப்பூர்வ உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1947-இலிருந்து உறுப்பினராக இருந்த வட ஏமன் 1967-இலிருந்து உறுப்பினராக இருக்கும் தென் ஏமனுடன் 1990-இல் ஒன்றிணைந்தது.

ஐ.நாவின் 190, 191-ஆவது உறுப்பினர்களாக சுவிட்சர்லாந்தும், கிழக்கு திமோரும் செப்டம்பர் 2002-இல் இணைந்தன.

ஐ.நா.வின் 192-ஆவது நாடாக மாண்டெனிக்ரோ செப்டம்பர் 2006-இல் இணைந்தது.

ஐ.நா.வின் 193-ஆவது நாடாக தெற்கு சூடான் ஜூலை 9, 2011-இல் இணைந்தது.

ஐ.நா.வின் விதிமுறைகள்

அனைத்து உறுப்பு நாடுகளும், கோட்பாடுகளின் கடமைகளை நம்பிக்கையுடன் சாசனத்தின்படி நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள்.

தங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

எந்த உறுப்பு நாடும் மற்ற உறுப்பு நாடுகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடக்கூடாது.

உறுப்பு நாடுகளின் உள்நாட்டு விஷயங்களில் ஐ.நா.சபை தலையிடாது.

ஐ.நா.வின் 6 முக்கிய அங்கங்கள்

ஐ.நா. சபை ஆறு முக்கிய அங்கங்களைக் கொண்டு செயல்படுகிறது. அவை:

பொதுச் சபை (General Assembly)

பாதுகாப்பு அவை (Security Council)

பொருளாதார மற்றும் சமூகக் குழு (The Economic & Social Council)

அறங்காவலர் குழு (Trusteeship Council)

ஐ.நா. செயலகம் (The Secretariat)

பன்னாட்டு நீதிமன்றம் (The International Court of Justice)

  1. 1. பொதுப் பேரவை

ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் அனைத்தின் பிரதிநிதிகளின் பேரவை இது. இது நியூயார்க்கில் உள்ளது. ஒவ்வொரு நாடும் 5 பிரதிநிதிகள் வரை அனுப்பலாம். ஆனால் ஒரு நாடு ஒரே ஒரு வாக்குதான் அளிக்க முடியும். ஆண்டுக்கு ஒருமுறை செப்டம்பர் மாதத்தில் கூடும். ஆனால் பாதுகாப்பு அவையின் வேண்டுகோளின்படி அவசரக் கூட்டங்களையும் கூட்டலாம். தலைவர்: மொஜின்ஸ் லைக்கெட்டாஃப், பெல்ஜியம்.

இப்பேரவையால் பன்னாட்டுச் சட்டங்களை உருவாக்கவும், பேரவையின் சாசனத்தில் திருத்தங்கள் செய்யவும் முடியும்.

ஆண்டறிக்கை ஆய்வு, பிற அங்கங்களில் ஆய்வுகளை நடத்தும்.

பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினர்கள், பொருளாதார மற்றும் சமூகக் குழு உறுப்பினர்கள், அறங்காவல் அவை உறுப்பினர்கள், பன்னாட்டு நீதிமன்ற நீதிபதிகள், இவர்களை பாதுகாப்பு அவையுடன் கூடித் தேர்ந்தெடுக்கும்.

முக்கிய பிரச்சினைகளில் முடிவெடுக்க 2/3 பேர் ஆதரவு தேவை.

  1. 2. பாதுகாப்பு அவை

பன்னாட்டு அமைதியையும், பாதுகாப்பையும் பேணிக்காப்பது இதன் கடமை. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா முதலிய 5 நிரந்தர உறுப்பினர்களையும் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் கொண்டது. தற்காலிக உறுப்பினர்கள் 2 ஆண்டுகளுக்கு பணிபுரிய பொதுப்பேரவையால் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒரு நாட்டுக்கு ஒரு வாக்கு மட்டுமே உண்டு. நிரந்தர நாடுகளுக்கு தடுப்புரிமை ஆணை (Veto Power) உண்டு. நடைமுறை செயல்பாடுகளுக்கு 9 வாக்குகள் போதுமானவை. முக்கிய விவகாரங்களுக்கு 5 நிரந்தர உறுப்பினர்களின் வாக்குகளையும் பெற்றாக வேண்டும். ஒரு உறுப்பு நாடு ஆதரவாக வாக்களிக்காவிட்டாலும் தீர்மானம் முடங்கிப்போகும். ஒரு நிரந்தர உறுப்பு நாடு எந்த ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாமல் செய்யமுடியும். இவ்வவை சில செயற்குழுக்களை அமைக்கும் அதிகாரமும் உடையது.

  1. 3. பொருளாதார மற்றும் சமூகக் குழு

இதில் 54 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவை பொதுப் பேரவையின் 2/3 உறுப்பினர்களின் வாக்கைப் பெற்று தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பதவிக் காலம் 3 ஆண்டுகள். மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வோர் ஆண்டும் பதவி விலகுவர். இக்குழு பொருளாதார, சமூக, கலாச்சார, கல்வி மற்றும் உலக நாடுகளின் சுகாதார நிலையை தெளிவுற ஆய்ந்து தன் அறிக்கைகளைக் கொடுக்கும். இது 3 ஆண்டுக்கு ஒருமுறை பிரான்சின் தலைநகரான பாரீஸில் கூடும். இது, ஐரோப்பிய பொருளாதாரக் குழு (ECE), ஆசியா, பசிபிக் பகுதிகளுக்கான பொருளாதார சமூகக்குழு (ESCAP), இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான பொருளாதாரக் குழு (ECLA), ஆப்பிரிக்கா பொருளாதாரக்குழு (ECA), மேற்கு ஆசிய நாடுகளுக்கான பொருளாதாரக் குழு (ECWA) முதலிய வட்டார குழுக்களாகப் பிரிந்து செயல்படும். இக்குழு பொதுப் பேரவையின்கீழ் இயங்குகிறது.

  1. 4. அறங்காவலர் குழு

இரண்டாம் உலகப் போரில் தோல்வியுற்ற நாடுகளின் காலனி நாடுகளை (Territories) நிர்வகிக்கும் உறுப்பு நாடுகளை மேற்பார்வை செய்யும் நோக்குடன் இக்குழு ஏற்படுத்தப்பட்டது. இதன் உறுப்பினர்கள் பொதுப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்படுவர். பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுப்படி அலுவல்கள் நடக்கும்.  இக்குழுவில் ஒப்படைக்கப்பட்ட 11 நாடுகள் 7 உறுப்பு நாடுகளின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன. ஒப்படைக்கப்பட்ட காலனி நாடுகளின் எல்லைகளை வகுத்து அவற்றின் சுயாட்சி மற்றும் சுதந்திரத்துக்கு தக்க நடவடிக்கைகள் எடுப்பதே இக்குழுவின் நோக்கம்.

1994-ஆம் ஆண்டுக்குள் இந்த 11 ஒப்படைப்பு நாடுகள் அனைத்தும் சுயாட்சி/சுதந்திரம் பெற்றதால் இக்குழுவின் செயல்பாடு முடிவுக்கு வந்தது. தேவைப்படும்போது இக்குழு மீண்டும் கூடுவது என்று இதன் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  1. 5. பன்னாட்டு நீதிமன்றம்

இது நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகரில் அமைந்துள்ளது. 15 நீதிபதிகள் இருப்பார்கள். இவர்களைப் பொதுப் பேரவையும், பாதுகாப்பு அவையும் தேர்ந்தெடுக்கும். பதவிக்காலம் 9 ஆண்டுகள். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். உறுப்பு நாடுகளுக்கு இடையே எழும் சட்டப்பிரச்சினைகளை இந்நீதிமன்றம் தீர்த்து வைக்கும். மொழிகள்: ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ், அராபிக், சீன மொழிகள். இவற்றோடு கூட 18 தன்னுரிமை பெற்ற சிறப்பு அமைப்புகளும், 14 முக்கிய ஐ.நா. திட்டங்களும் நிதிகளும், வளரும் நாடுகளின் பொருளாதார சமூக முன்னேற்றத்திற்காக உள்ளன. தற்போதைய தலைவர்: ரோன்னி ஆப்பிரஹாம்.

  1. 6. செயலகம்

ஐ.நா.சபையின் முக்கிய உறுப்பு, இதுதான் ஐ.நா.வை நிர்வாகம் செய்கிறது. இதன் அலுவலகம் நியூயார்க் நகரில் உள்ளது. ஐ.நா. சபையின் பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகளை இணைப்பதுடன் அவற்றை மேற்பார்வையிடுவதும் இதுவே. இதன் தலைமை நிர்வாக அலுவலர் ஐ.நா.வின் தலைமைச் செயலர் (Secretary General) ஆவார். இவர் ஐ.நா. பாதுகாப்பு அவையின் பரிந்துரைப்படி பொதுப் பேரவையால் நியமிக்கப்படுகிறார். இவரின பதவிக் காலம் 5 ஆண்டுகள்.

ஐ.நா. சபையின் தலைமைச் செயலாளர்கள்

பதவிக்காலம் தலைமைச் செயலர்
1946-53 டிரிக்வீ லை (நார்வே)
1953-61 டேக் ஹேமர்ஷோல்டு (ஸ்வீடன்)
1961-71 ஊ தாண்ட் (பர்மா)
1972-81 குர்ட் வால்தீம் (ஆஸ்திரியா)
1982-91 ஜேவியர் பெரஸ் டி கொய்லர் (பெரு)
1992-97 புட்ரோஸ் புட்ரோஸ் காலி (எகிப்து)
1997-02 கோஃபி அன்னான் (கானா)
2002-07 கோஃபி அன்னான் (கானா)
2007-12 பான் கீ-மூன் (தென் கொரியா)
2012- 2016 டிசம்பர் 31 வரை பான் கீ-மூன் (தென் கொரியா) (இரண்டாவது முறையாக)
2017 ஜனவரி 1 முதல் அந்தோணியோ குத்தெரஸ் (போர்ச்சுகல்)

 

ஐ.நா. சபையின் முகமைகள்

உணவு மற்றும் வேளாண் அமைப்பு
(FAO – Food and Agricultural Organisation):

உணவு மற்றும் வேளாண் அமைப்பு 1945, அக்டோபரில் நிறுவப்பட்டது. 194 உறுப்பு நாடுகளைக் கொண்டது. உலக உணவு நிலைமையை இவ்வமைப்பு மேற்பார்வையிடுகிறது. உணவு உற்பத்திப் பெருக்கத்திற்குத் தேவையான சில வழிமுறைகளையும் உறுப்பு நாடுகளின் அரசுகளுக்குப் பரிந்துரை செய்கிறது. இதனைத் தனிக்குழு நிர்வாகம் செய்கிறது. இவ்வமைப்பு ஒரு பொது இயக்குநரின் தலைமையின்கீழ் செயல்படுகிறது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜோஸ் க்ராஸியானோ டா சில்வா பொது இயக்குநராவார். இத்தாலியில் உள்ள ரோம் நகரில் இதன் தலைமையிடம் உள்ளது.

உலக சுகாதார நிறுவனம் (WHO – World Health Organisation):

உலக சுகாதார நிறுவனம் 1947, ஏப்ரல் 7-இல் ஏற்படுத்தப்பட்டது. உலக மக்களுக்கு நோய்த் தடுப்பையும், உடல் நலமிக்க வாழ்க்கை அமையவும் இவ்வமைப்பு சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்படுகிறது. தற்போதைய பொது இயக்குனர்: டாக்டர் மார்க்ரெட் சான் ஆவார்.

பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு
(ILO – International Labour Organisation):

1919 ஏப்ரல் 11-இல் உருவானது. இவ்வமைபில் உறுப்பு நாடுகளின் நான்கு பிரதிநிதிகள்  பங்கேற்பர். உலகத் தொழிலாளர்களின் நலனைக்காத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஒரு பொது இயக்குனரின் தலைமையின்கீழ் செயல்படும் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் தற்போதைய பொது இயக்குநர்: கே ரைடர் (பிரிட்டன்). தலைமையகம்: சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா.

ஐ.நா. கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு
(UNESCO – United Nations Educational, Scientific and Cultural Organisation):

உலக நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு முதலியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும், ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு அக்கறை செலுத்தவும் நீதி, சட்டம், மனித உரிமை இவற்றுக்கு உலகம் தழுவிய மதிப்பைப் பெற்றுத் தரவும், உலகின் பல நாடுகளிடையே எழுத்தறிவின்மையைப் போக்கவும், வளர்ச்சியுறாத நாடுகளுக்கு தொழில் நுட்ப அறிவை அளிக்கவும், தொழில்நுட்ப வல்லுநர்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் யுனெஸ்கோ 1946, நவம்பர் 4-இல் ஏற்படுத்தப்பட்டது. தலைமையிடம் பிரான்சில் உள்ள பாரீஸ் நகரில் உள்ளது. பொது இயக்குநர்: ஐரினா பொகோவா (பல்கேரியா).

ஐ.நா. பன்னாட்டுக் குழந்தைகள் அவசர நலநிதி
(UNICEF – United Nations International Children’s Emergency Fund):

1946, டிசம்பர் 11-இல் அமைக்கப்பட்டது. உலகக் குழந்தைகளின் உடல்நலம், சத்துணவு, சமூகநலம், கல்வி, தொழிற்பயிற்சி முதலிய துறைகளில் அனைத்து நாடுகளுக்கும் இது உதவுகிறது. பன்னாட்டு அரசுகள் தங்கள் நாட்டுக் குழந்தைகளின் முக்கியத் தேவைகளை மதிப்பீடு செய்யவும், அவற்றை நிறைவேற்றவும் விரிவான திட்டங்களைத் தயாரிக்க இவ்வமைப்பு உதவுகிறது. தலைமையிடம்: அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உள்ளது. தற்போதைய செயல் இயக்குநர்: அந்தோனி லேக் (UK).

ஐ.நா. வளர்ச்சி திட்டம் (UNDP – United Nations Development Programme):

உலகின் பல்வகைத் தொழில்நுட்ப மற்றும் முன்முதலீட்டுக் கூட்டுறவின் மிகப்பெரிய அமைப்பு. இது பல்வேறு தொழில்நுட்ப உதவித் திட்டங்களுக்கு நிதி உதவும் அமைப்பாகும். தற்போதைய நிர்வாகி மற்றும் பொது இயக்குநர்: நியூசிலாந்தைச் சேர்ந்த ஹெலன் கிளார்க். தலைமையகம்: நியூயார்க்.

ஐ.நா. மக்கள் தொகை செயற்பாட்டு நிதி
(UNFPA – The U.N. Fund for Population Activities):

தனது திட்டத்தை 130 நாடுகளிலும், பிரதேசங்களிலும் நிறைவேற்றுகிறது. குடும்ப நலத்திட்டம் மற்றும் மக்கள் தேவைக்கேற்பச் செயல்புரிவதே இதன் நோக்கம். மக்கள் தொகைப் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் இதைத் தீர்க்க வழிமுறைகளைக் கண்டறிதல், இதன் பணி. உலகில் 25% மேற்பட்ட பன்னாட்டு மக்கள் தொகை உதவி இதன் மூலம் வளர்ந்துவரும் நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. செயல் இயக்குநர்: நைஜீரியாவைச் சேர்ந்த பாபாடுன்டே ஓஸோடிமெஹின். தலைமையகம்: நியூயார்க்.

பன்னாட்டு அணுசக்தி நிறுவனம்
(IAEA – International Atomic Energy Agency):

1957, ஜூலை 29-இல் ஏற்படுத்தப்பட்டது. உறுப்பு நாடுகள் 150. சர்வதேச அளவில் அணுசக்திக் குறித்த வரைமுறைகளை வரையறுத்து நெறிமுறைப்படுத்துகிறது தலைமையகம்: வியன்னா. பொது இயக்குநர்: யூகியா அமனோ (ஜப்பான்). கடந்த 2005-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. தொழில் வளர்ச்சி அமைப்பு
(UNIDO – United Nations Industrial Development Organisation):

வளரும் மற்றும் வளரா நாடுகளுக்கு இடையே தொழில் வளர்ச்சிக்கு, தொழிற்கொள்கைக்கு வேண்டிய பரிந்துரைகள் செய்யப் பயன்படுகின்றது.
1985-இல் இது ஐ.நாவின் ஒரு சிறப்பு அமைப்பாக்கப்பட்டது. தலைமையிடம் : வியன்னா. பொது இயக்குநர்: லீ யாங் (சீனா).

பன்னாட்டு நிதியம் (IMF – International Monetary Fund):

தன்னுரிமை பெற்ற பன்னாட்டு நிறுவனமாக இது 1945, டிசம்பர் 27-இல் தொடங்கப்பட்டது. உலக பொருளாதாரத்தினையும் கரன்சி மதிப்புகளையும் ஸ்திரத்தன்மையுடையாதாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நெருக்கடி காலங்களில் உலக நாடுகளுக்கு கடன் உதவி அளிக்கிறது. தலைமையிடம்: வாஷிங்டன்; பாரீசிலும், ஜெனிவாவிலும் கிளைகள் உள்ளன. தலைமை இயக்குநர்: திருமதி கிறிஸ்டினா லகார்ட் (பிரான்ஸ்).

பன்னாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு
(ICAO – International Civil Aviation Organisation):

1944-இல் சிகாகோ நகரில் நடைபெற்ற பன்னாட்டு சிவில் விமானப் போக்குவரத்து மாநாட்டில் நிறுவப்பட்டது. இதன் தலைமையிடம் கனடா நாட்டின் மாண்ட்ரீலில் உள்ளது. தலைவர்: ராபர்டோ கோபே கான்ஸலஸ் ; பொதுச்செயலர்: ரேமண்ட் பெஞ்ஜமின் (பிரான்ஸ்).

பன்னாட்டு தபால் ஒன்றியம் (UPU – Universal Postal Union):

ஜூலை 1, 1875-ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு தபால் மாநாட்டில் நிறுவப்பட்டது. தலைமையிடம் சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் (Berne). பொது இயக்குநர்: பிஷார் ஏ. உசைன் (கென்யா)

பன்னாட்டு தொலைச் செய்தித் தொடர்பு ஒன்றியம்
(ITU – International Telecommunication Union):

1865-இல் பாரீஸ் நகரில் பன்னாட்டுத் தந்தி ஒன்றியம் நிறுவப்பட்டது.
1906-இல் பன்னாட்டு ரேடியோ தந்தி ஒன்றியம் பெர்லினில் நிறுவப்பட்டது.
1932, மாட்ரிட் மாநாட்டில் இவை இரண்டும் இணைந்து இந்நிறுவனம் உண்டாயிற்று. தலைமையிடம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா. தற்போதைய பொதுச் செயலர்: ஹமடவுன் தூரி (Hamadoun Toure) (மாலி).

உலக வர்த்தக நிறுவனம்

1995 ஆம் ஆண்டில் GATT அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட மராக்கேஷ் ஒப்பந்தத்தின்படி GATT ஒப்பந்தத்தின் பொறுப்புகள் புதிதாகத் துவங்கப்பட்ட உலக வர்த்தக நிறுவனத்திற்கு மாற்றப்பட்டன. இவ்வமைப்பின் நோக்கம் சர்வதேச அளவிலான வர்த்தகத்திற்கு தடையாக விளங்கும் வரி மற்றும் இறக்குமதிக் கொள்கைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் சரிசெய்வதாகும். இவ்வமைப்பில் தற்பொழுது 163 நாடுகள் உள்ளன.

வர்த்தகம் மற்றும் வரிக்கான பொது ஒப்பந்தம்
(GATT – General Agreement on Tariffs and Trade):

1947-இல் நடைபெற்ற சர்வதேசப் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1948-இல் அமல்படுத்தப்பட்டது.

வீதப்பட்டியினால் ஏற்படும் வர்த்தகத் தடைகளைத் தவிர்த்து, முறையான சர்வதேச நடைமுறை சட்டங்களையும், விதிமுறைகளையும் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தியது, ஆனால் வீதப்பட்டி சாராத வேறு சில தடைகளைத் தவிர்க்க இயலவில்லை. இந்த ஒப்பந்தம் ஜெனீவாவில் தொடங்கப்பட்டது. 1994-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 125 உறுப்பினர்கள் இதில் சேர்ந்திருந்தனர். 1995-ஆம் ஆண்டு உலக வாணிபக் கழகம் (WTO) இதன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டது.

கடல்சார் செயல்பாடுகளுக்கான பன்னாட்டு அமைப்பு
(IMO – International Maritime Organisation):

ஜெனீவாவில் நடந்த சர்வதேச மாநாட்டையொட்டி, 1958-ஆம் ஆண்டு மார்ச் மாதம், இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் நோக்கம், கப்பல் பயணிகளின் உயிர் பாதுகாப்பு, வெவ்வேறு அரசாங்கங்களுக்கிடையே ஒத்துழைப்பு, மேலும் கடல் சார்ந்த முறையான செயல்பாடுகளுக்கு இடையூறாக உள்ள தேவையற்ற சட்டதிட்டங்களை அகற்றுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை இவ்வமைப்பு கூடுகிறது. இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது. 1983-இல் உலக கடல்சார் பல்கலைக்கழகம் ஸ்வீடனில் துவங்கப்பட்டது.

வேளாண்மை வளர்ச்சிக்கான பன்னாட்டு நிதியம்
(IFAD – International Fund for Agricultural Development):

1974 உலக உணவு மாநாட்டில் இதற்கு ஆணை வெளியிடப்பட்டது. 1977-இல் இத்தாலியில் உள்ள ரோம் நகரில் தொடங்கப்பட்டது. தற்போதைய தலைவர்: கனாயோ கு. நவான்ஸி (நைஜீரியா).

பிரெட்டன் வுட்ஸ் நிறுவனங்கள் (Brettenwoods Institutions)

உலகப் போரினால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் சர்வதேச நாணயப் பரிமாற்ற விகித குழப்பத்தினால் அப்போது பயன்பாட்டிலிருந்த தங்கத்துடன் சர்வதேச கரன்சிகளை ஒப்பிடும் முறை நம்பிக்கையற்றதாக மாறியது. இந்நிலையை மாற்ற 1944 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பிரெட்டன்வுட்ஸ் எனுமிடத்தில் 44 நாடுகளைச் சார்ந்த பொருளாதார அறிஞர்கள் கலந்து ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தின் முடிவில் சர்வதேச நாணய மதிப்பு நிர்ணய முறையில் உலக நாடுகளின் கரன்சிகள் நேரடியாகத் தங்கத்துடன் ஒப்பிடப்படுவது தவிர்க்கப்பட்டு அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் முறை அமலுக்கு வந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு தங்கத்துடன் ஒப்பிடப்பட்டு நிர்ணயிக்கப்பட்டது. இம்முறையை செயல்படுத்தவும் நிர்வகிக்கவும் சர்வதேச செலாவணி நிதியம் (IMF)  மற்றும் சர்வதேச மறு சீரமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கி (IBRD) ஆகிய அமைப்புகள் துவங்கப்பட்டன.

உலக வங்கி (World Bank):

மறு சீரமைப்புக்கும் வளர்ச்சிக்குமான பன்னாட்டு வங்கி (IBRD), பன்னாட்டு நிதியுதவி நிறுவனம் (IFC), பன்னாட்டு வளர்ச்சிக் கழகம் (IDA), பன்முனை முதலீட்டு உத்தரவாதச் செயலகம் (MIGA) ஆகியவற்றை உள்ளடக்கியதே உலக வங்கியாகும். இருப்பினும், இவை நான்கினுள் முதலில் நிறுவப்பட்ட IBRD பொதுவாக உலக வங்கி என அழைக்கப்படுகிறது. IBRD 1945-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி நிறுவப்பெற்று 25, ஜூன் 1946-இல் தன் அலுவல்களைத் தொடங்கியது. பின்னர் 20, ஜூலை 1956-இல் IFC-யும், 24, செப்டம்பர் 1960-இல் IDAவும், 1988-ஆம் ஆண்டு ஏப்ரலில் MIGAவும் அமைக்கப்பெற்றன. இப்போது இதில் 188 உறுப்பு நாடுகள் உள்ளன. தற்போதைய தலைவர்: ஜிம் யாங் கிம் (கொரிய அமெரிக்கர்).

மறு சீரமைப்புக்கும் வளர்ச்சிக்குமான பன்னாட்டு வங்கி (IBRD – International Bank for Reconstruction and Development): ஜூலை 1944-இல் தீர்மானிக்கப்பட்டு 1946-இல் இருந்து செயல்படத் தொடங்கியது. உலக வங்கியின் ஓர் உறுப்பாக உள்ளது. தலைமையகம்: வாஷிங்டன், தலைவர்: ஜிம் யாங் கிம் (கொரிய அமெரிக்கர்).

பன்னாட்டு வளர்ச்சிக் கழகம் (IDA – International Development Association): உலக வங்கியால் நிர்வகிக்கப்படும் முக்கிய அமைப்பு. 1960, செப்டம்பர் 24-இல் ஏற்பட்டது. வங்கி உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவானது. தலைவர்: ஜிம் யாங் கிம் (கொரிய அமெரிக்கர்).

பன்னாட்டு நிதி நிறுவனம் (IFC – International Finance Corporation): உலக வங்கியின் ஓர் உறுப்பாக 1956-இல் நிறுவப்பட்டது. தலைமையகம்: வாஷிங்டன். தலைவர்: ஜிம் யாங் கிம் (கொரிய அமெரிக்கர்).

பன்முனை முதலீட்டு உத்தரவாதச் செயலகம்
(MIGA – Multilateral Investment Guarantee Agency):

ஐ.நா. சபையின் இச்செயலகம் 1988-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுவப்பெற்றது. இது உலக வங்கியின் ஓர் உறுப்பாகும். தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் வளரும் நாடுகளுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும். வளரும் நாடுகளில் முதலீடு செய்வோருக்கு இது காப்புறுதி அளிக்கிறது; இதன் மூலம் முதலீட்டை அதிகரிக்க உதவுகிறது. போர், கலவரம் போன்றவற்றால் தன் செயல்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முயல்கிறது. தற்போது 179 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.

உலக மதிநுட்ப சொத்து சார்ந்த அமைப்பு
(WIPO – World Intellectual Property Organisation):

1967-இல் 51 நாடுகள் சேர்ந்து, ஸ்டாக்ஹோமில் இவ்வமைப்பை ஏற்படுத்தின. 1970-இல் இவ்வமைப்பு செயல்படத் தொடங்கியது. பின்னர் 1974-இல் ஐ.நா. சபையின் சிறப்புச் செயலகங்களில் (specialised agency) ஒன்றாக அங்கீகாரம் பெற்றது. உலகெங்கும் உள்ள மதிநுட்பச் சொத்துக்களைப் (intellectual properties) பாதுகாப்பதும், அதற்காக பன்னாட்டு ஒத்துழைப்பைப் பெறுவதும் இதன் முக்கிய நோக்கங்களாகும். இவ்வமைப்பு சட்ட அடிப்படையிலான உதவியும், தொழில்நுட்ப உதவியும் அளிக்கிறது. ஐ.நா. சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இவ்வமைப்பிலும் உறுப்பினராகும் உரிமை உண்டு. மேலும் ஐ.நா. சபை பொதுப் பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படும். 184 உறுப்பினர்களைக் கொண்ட WIPO ஒரு பொது இயக்குனரின்கீழ் செயலாற்றுகிறது. ஜெனீவாவில் தன் தலைமையகத்தைக் கொண்ட இவ்வமைப்பின் தற்போதைய பொது இயக்குநர்: ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ் குரி.

ஐக்கிய நாடுகள் சுற்றுப்புறச் செயல்முறைத் திட்டம்
(UNEP – United Nations Environment Programme):

இத்திட்டம் 1972-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்துவதேயாகும். சுகாதாரமான, திறன்மிக்க சுற்றுப்புறச்சூழலுக்கான கோட்பாடுகளை வலியுறுத்துவதுடன், மனித சுற்றுப்புறம் சம்பந்தப்பட்ட அலுவல்களில் பன்னாட்டு ஒத்துழைப்பையும் இத்திட்டம் நாடுகிறது. இதன் தலைமையகம்: கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் உள்ளது. தற்போதைய செயல் இயக்குநர்: அகீம் ஸ்டீனர் (ஜெர்மனி).

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் மேலாணையர்
(UNHCR – United Nations High Commissioner for Refugees):

இப்பதவி 1951-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கப்பட்டது. முதலில் மூன்றாண்டுகளுக்காக மட்டுமே இயற்றப்பெற்ற இந்த ஆணையர் அலுவலகத்தின் காலம் பின்னர் ஐந்து ஆண்டுகளாக மாற்றப் பெற்றது. இவ்வாணையர் பல்வேறு நாடுகளில் உள்ள அகதிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆலோசனைகளை முன் வைப்பார். அகதிகளுக்கு இவ்வாணையர் அலுவலகம் ஆற்றிய சேவையை முன்னிட்டு முதலில் 1954 மற்றும் 1981-ஆம் ஆண்டுகளில் நோபல் பரிசு கிட்டியுள்ளது. தலைமையகம்: ஜெனீவா (சுவிட்சர்லாந்து). தற்போதைய உயர் ஆணையர்: அன்டோனியா கட்ரஸ். (போர்சுகல் – ஐரோப்பிய யூனியன்)

ஆசிய, பசிபிக் பகுதிகளுக்கான பொருளாதார சமூகக்குழு
(UN-ESCAP – Economic and Social Commission for Asia and the Pacific):

இது ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூகக் குழுவைச் சேர்ந்த ஒரு வட்டார அமைப்பாகும். ஆசிய மற்றும் கீழை நாடுகளின் பொருளாதார நிலை, கல்வித்தரம், சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதன் பொன்விழா மாநாடு, 1994-ஆம் ஆண்டில் இந்திய தலைநகர் டில்லியில் நடைபெற்றது. தலைமையகம்: பாங்காக் (தாய்லாந்து). தற்போதைய நிர்வாகச் செயலாளர்: ஷம்ஷத் அக்தர் (பாகிஸ்தான்).

வர்த்தகம், முன்னேற்றம் மீதான ஐக்கிய நாடுகளின் மாநாடு
(UNCTAD – United Nations Conference on Trade and Development):

முதல் மாநாடு 1964-ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்றது. ஐ.நா.வின் பொதுப் பேரவை நடத்திய இம்மாநாட்டில் 100 நாடுகள் பங்கேற்றன. பன்னாட்டு வர்த்தகத்தை வளர்த்தல், உறுப்பு நாடுகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல் (குறிப்பாக வளரும் நாடுகள்) போன்றவை இம்மாநாட்டின் குறிக்கோளாகும். தேவைக்கு ஏற்ப ஆலோசனைக் கூட்டங்கள் கூட்டப்படும். இந்திய தலைநகரில் நடந்த மாநாட்டில் 146 நாடுகள் பங்கேற்றன. இம்மாநாட்டு வரிசையின் 10-ஆவது மாநாடு தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் தலைவராக இருந்தவர் டாக்டர் சப்பாச்சாய் பனிட்பக்டி. ஆனால் இந்த 10-ஆவது மாநாடு, வளரும் நாடுகளுக்குப் போதிய முன்னேற்றத்திற்கான வாய்ப்பினைத் தர தவறிவிட்டதாக வல்லுனர்களால் கருதப்பட்டது. தற்போதைய பொதுச் செயலர்: முகிஸா கிடூயி (கென்யா).

மனித உரிமைகள்

1945-இல் மனித உரிமைகள் பற்றிய ஐ.நா. சபை ஆணையம் ஒன்று நிறுவப்பட்டது. மனித உரிமைகள் மண்மூடிப் போகாமல் தழைத்து வேரூன்றவே இது அமைக்கப்பட்டது. உயர்ந்தவன், தாழ்ந்தவன், தீண்டத்தகாதவன், பாவப்பட்டவன், பழிகாரன், தண்டிக்கப்பட வேண்டியவன், அடிமையாக இருக்க வேண்டியவன் என்று பிற, மத, இன, வண்ண பேதமற்ற சமுதாயத்தை சகல உரிமைகளுடன் ஏற்படுத்துவதே இதன் குறிக்கோள். 1976-இல் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் அனைத்து மக்களுக்கும் அவரவருடைய உரிமைகளை அளிக்க உறுதி கூறியது.

வாழ உரிமை

சித்திரவதையிலிருந்தும் கொடிய மனிதாபிமானமற்ற இழிவு படுத்தி நடத்துவதினின்று பாதுகாப்புக்கு உரிமை

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

தனிமனித சுதந்திரத்திற்கும் பாதுகாப்புக்கும் உரிமை. ஒரு தலைப்பட்சமாக கைது செய்து காவலில் வைப்பதிலிருந்து பாதுகாப்பு உரிமை

நியாயமான நீதி விசாரணைக்கு உரிமை

சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை.

தனிமைக்கு எதிராக பாரபட்சமான குறுக்கீட்டிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை.

எங்கும் செல்லும் உரிமை

தேசிய உரிமை

மணம் புரிந்து குடும்பத்தைப் பேணும் உரிமை

சிந்தனை சுதந்திரம், மனச்சான்றுபடி செயல்பட சுதந்திரம், மத சுதந்திரம்

அமைதியான முறையில் கூடும் உரிமை

சங்கம் வைக்கும் உரிமை மற்றும் சங்கத்தில் உறுப்பினராகச் சேரும் உரிமை

வாக்களிக்கும் மற்றும் அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் உரிைம.

ஐ.நா. சபை அறிவித்த முக்கிய ஆண்டுகள்

1967 பன்னாட்டுச் சுற்றுலா (International Tourism)
1968 பன்னாட்டு மனித உரிமை (International Human Rights)
1970 பன்னாட்டு கல்வி ஆண்டு (International Education Year)
1972 பன்னாட்டு புத்தக ஆண்டு (International Book Year)
1973 கோபர்னிகஸ் ஆண்டு (Copernicus Year)
1974 உலக மக்கள் தொகை ஆண்டு (World Population Year)
1975 பன்னாட்டு மகளிர் ஆண்டு (International Women’s Year)
1979 பன்னாட்டுக் குழந்தைகள் ஆண்டு (International Year of Children)
1980-89 பன்னாட்டுத் தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் சுகாதாரத் திற்கென அறிவிக்கப்பட்ட பத்தாண்டு காலம் (International Water Supply & Sanitation Decade)
1981 பன்னாட்டு ஊனமுற்றோர் ஆண்டு (International Year of the Disabled)
1983 பன்னாட்டு தகவல் தொடர்பு ஆண்டு (World Communication Year)
1985 பன்னாட்டு இளைஞர் ஆண்டு (International Youth Year)
1986 பன்னாட்டு சமாதான ஆண்டு (International Year of Peace)
1987 உறைவிடமற்றவர்களுக்கான பாதுகாப்பு ஆண்டு (International Year of Shelter for the Homeless)
1990 பன்னாட்டு எழுத்தறிவு ஆண்டு (International Literacy Year)
1992 பன்னாட்டு விண்வெளி ஆண்டு (International Space Year)
1993 உள்நாட்டு மக்கள் தொகை ஆண்டு (International Year for the Indigenous Populations)
1994 பன்னாட்டுக் குடும்பநல ஆண்டு (International Year of the Family)
1995 பன்னாட்டு சகிப்புத்தன்மை ஆண்டு (International Year of Tolerance)
1998 பன்னாட்டு பெருங்கடல் ஆண்டு (International Year of Ocean)
1999 பன்னாட்டு முதியோர் ஆண்டு (International Year of Older Persons)
1991-2000 வளர்ச்சிக்கென அறிவிக்கப்பட்ட பத்தாண்டு காலம் (Development Decade)
2001 பன்னாட்டு மகளிர் அதிகார ஆண்டு (International Year of Women’s Empowerment)
2002 பன்னாட்டு சுற்றுச்சூழல் சுற்றுலா ஆண்டு (International Year of Ecotourism)
2003 பன்னாட்டு தூய தண்ணீர் ஆண்டு (International Year of Fresh Water)
2004 பன்னாட்டு அரிசி ஆண்டு (International Year of Rice)
2005 பன்னாட்டு இயற்பியல் ஆண்டு (International Year of Physics)
2007 பன்னாட்டு துருவ ஆண்டு (International Polar Year)
2008 பன்னாட்டு உருளைக்கிழங்கு ஆண்டு (International Year of Potato)
2009 பன்னாட்டு நல்லிணக்க ஆண்டு (International Year of Reconciliation)
2010 பன்னாட்டு பல்லுயிரிகள் ஆண்டு (International Year of Biodiversity)
2011 பன்னாட்டு காடுகள் ஆண்டு (International Year of Forests)
2012 பன்னாட்டு கூட்டுறவு ஆண்டு (International Year of  Co-operatives)
2013 பன்னாட்டு தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டு (International Year of Water Co-operation)
2014 பன்னாட்டு குடும்பப் பண்ணை ஆண்டு (International Year of Family Farming)
2015 பன்னாட்டு நிலம் ஆண்டு (International Year of Soils)
பன்னாட்டு ஒளி மற்றும் ஒளி சார்ந்த தொழில்நுட்பங்கள் ஆண்டு (International Year of Light and Light based Technologies)
2016 சர்வதேச பருப்பு வகைகள் ஆண்டு (International Year of Pulses)
2017 வளர்ச்சிக்கான நீடித்த சுற்றுலா ஆண்டு (International Year of Sustainable Tourism for Development)

 

 

4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x