“கியூபாவின் விடிவெள்ளி” ஃபிடல் காஸ்ட்ரோ

“கியூபாவின் விடிவெள்ளி” ஃபிடல் காஸ்ட்ரோ

அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சர்வாதிகாரியான படிஸ்டாவின் பிடியிலிருந்து கியூபாவை விடுவித்து அமெரிக்காவின் எதிர்ப்பையும் சதிகளையும் தாண்டி பொதுவுடைமைப் பாதையில் கியூபாவை பல்வேறு துறைகளிலும் முன்னேற்றிய ஃபிடல் காஸ்ட்ரோ, 2016 நவம்பர் 25, அன்று தனது 90-ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து 100 கி.மீ.க்கும் குறைவான தொலைவில் அமைந்துள்ள கியூபாவில் அமெரிக்க ஆதரவுடன் கொடுங்கோலாட்சி புரிந்து வந்த சர்வாதிகாரியான படிஸ்டாவை தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோ மற்றும் ஆருயிர் தோழர் சேகுவேரா ஆகியோரின் துணையுடன் கொரில்லா போர் புரிந்து
1959-இல் வீழ்த்திய ஃபிடல், கியூபாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். துவக்கத்தில் அமெரிக்காவைத் தனது எதிரியாக கருதாத ஃபிடல், நாளடைவில் அமெரிக்காவும் அந்நாட்டு நிறுவனங்களும் கியூபாவை சுரண்டி வருகின்றன என்பதையறிந்து அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தார்.குறிப்பாக ஏழைகளைச் சுரண்டிய அமெரிக்கத் தொழில் நிறுவனங்களை நாட்டுடைமையாக்கினார். இதனால் இரு நாடுகளிடையே பிணக்கு ஏற்பட்டு
1961-இல் இருநாடுகளும் தங்களின் தூதரக உறவினை முறித்துக் கொள்ளுமளவுக்கு பகையாக வளரத் துவங்கியது. அப்போது முதல் கியூபாவைச் சீர்குலைக்க அமெரிக்கா பல்வேறு நாசவேலைகளைப் புரியத் துவங்கியது. ஆனால் திறன்மிக்கத் தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோ அவற்றினைத் தவிடுபொடியாக்கி கியூபாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றார். இவருக்கு சோவியத் யூனியனின் பரிபூரண ஆதரவு இருந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின்படி நிலச்சீர்திருத்தத்தினை மேற்கொண்டு நிலங்களை அனைவருக்கும் சமமாகப்  பங்கிட்டளித்த இவரின் அரசு, கல்வி, மருத்துவ சேவைகள், வீடு என மக்களின் அடிப்படைத் தேவைகளை விலை குறைவாகவோ அல்லது இலவசமாகவோ வழங்கி மனிதவளக் குறியீட்டெண்ணில் கியூபாவை பல்வேறு வளர்ந்த நாடுகளைவிட முன்னணியில் இடம்பெறச் செய்தது. அமெரிக்காவின் ஏகாதிபத்திய சித்தாந்தத்திற்கு நேரெதிர் சித்தாந்தத்தைக் கொண்டு நல்லாட்சி புரிந்து வந்த ஃபிடலைக் கவிழ்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்த அமெரிக்கா ஏற்கனவே கியூபாவின் மீது கடுமையானப் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. அவற்றையும் மீறி கியூபாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்ற
ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல அமெரிக்காவின் உளவுப்படைகள் 638 முறை முயற்சி செய்தன. இந்த அனைத்து முயற்சிகளையும் தவிடுபொடியாக்கி சிறந்த பொதுவுடைமைவாத நாடாக கியூபாவை மாற்றிய இவர், பனிப்போர்க் காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக விளங்கிய அணிசேரா நாடுகளின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மூன்றாம் உலக நாடுகளுக்கு கியூபாவை ஒரு முன்னுதாரண நாடாக்கிய இவர் மூன்றாம் உலக நாடுகளுக்குத் தேர்ந்த வழிகாட்டியாகவும் விளங்கினார். தனது வாழ்நாள் முழுவதும் ஏகாதிபத்தியத்திற்கெதிராக தீரமுடன் போராடி வந்த இவர் உலக நாடுகளில் ஏகாதிபத்தியத்தால் எங்கெல்லாம் ஏழை எளியவர்கள் பாதிக்கப்பட்டனரோ அங்கெல்லாம் தனது ஆதரவுக் கரத்தினை நீட்டி அவர்களின் துயரைத் துடைத்தார். 1992-இல் சோவியத் யூனியன் சிதைந்த பிறகு அமெரிக்காவின் நெருக்கடியால் தீவிர இன்னலுக்குள்ளாகிய கியூபாவை பல்வேறு வழிகளிலும் அனைத்து துறைகளிலும் முன்னேற்றினார். 1959 முதல் 2006 வரை கியூபாவை  மிக நீண்ட காலம் வழி நடத்திய அவர், அதன் பிறகு அதிகாரங்களை தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்துவிட்டு
2008-ஆம் ஆண்டில் பதவி விலகினார். அதன் பிறகு முதுமை காரணமாக அவ்வப்போது உடல்நலக் குறைவிற்குள்ளான ஃபிடல் 2016 நவம்பர் 25-இல் மறைந்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதித் திட்டங்களையும் பொருளாதாரத் தடைகளையும் முறியடித்து கியூபாவில் சோஷலிசத்தினை நிர்மாணிப்பதில் வெற்றி கண்ட காஸ்ட்ரோ, உலக அளவில் பொதுவுடைமைவாதிகளுக்கு உற்சாகமளிக்கக் கூடியவராக விளங்கினார். விடிவெள்ளியான அவரின் மறைவு பொதுவுடைமைவாதிகளுக்கும், சோஷலிசத்திற்கும், அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *