துணைநிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு – ஒரு பார்வை

துணைநிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு – ஒரு பார்வை

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையேயான பிரச்சனை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மிகவும் தெளிவான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் அதிகாரம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இல்லை என தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து உள்ளது.

அரசியல் சாசனத்தின் உணர்வை முழுமையாகப் பிரதிபலிக்கும் தீர்ப்பாக அமைந்திருப்பதால், இனி வருங்காலத்தில் இந்தியாவில் ஆளுநர் முதல்வர் அதிகாரப் பகிர்வு குறித்த பிரச்சனைகள் எழும்போதெல்லாம் இந்தத் தீர்ப்பு மேற்கோள் காட்டப்படும்.

ஆளுநர் நியமனம் பற்றி

ஆளுநர்கள் நியமனம் குறித்து அரசியல் சாசன சபை மிகவும் விரிவாகவே விவாதித்தது. ஜவஹர்லால் நேரு, கே.எம். முன்ஷி, பி.எஸ். தேஷ்முக் உள்ளிட்ட பலர், தனது அரசியல் சாசனக் கடமைகளை நிறைவேற்றும் அளவிலான அதிகாரங்களுடன் ஆளுநர்கள் மாநில நிர்வாகத் தலைவர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று கருதினர். அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தும் அதிகாரம் அவர்களுக்கு தரப்பட வேண்டுமென்றும், மாநில அரசின் அன்றாட ஆணைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டால்தான், நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பது குறித்த ஆளுநர்களுக்குத் தெரியும் என்றும் பி.எஸ். தேஷ்முக் ஜூன் 2,

1949-இல் இது குறித்த விவாதத்தின்போது கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

1967 தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சி அமைந்தபோதுதான் இந்தியக் கூட்டாட்சித் தத்துவம் குறித்த பல கேள்விகள் எழும்பின. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், பல மாநிலங்களில் எதிர்க்கட்சி ஆட்சிகளும் ஏற்பட்ட நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மூத்த காங்கிரஸ் தலைவர்களாகவும் இருந்ததால், பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கியதில் வியப்பில்லை. இப்படியொரு சூழல் ஏற்படும் என்பதை அரசியல் சாசன சபை உணர்ந்து விவாதித்திருக்கிறது என்பதுதான் ஆச்சரியம். 1949 மே 31-ஆம் தேதி அரசியல் சாசன சபை விவாதத்தின்போது வெவ்வேறு கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைக்கும்போது, ஆளுநர்களுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்வியை விஸ்வநாத தாஸ் எழுப்பியிருக்கிறார்.

ஆளுநர்கள் மத்திய ஆட்சியில் இருக்கும் கட்சியின் பிரதிநிதியாகச் செயல்படமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்று அவர் அப்போது எழுப்பிய கேள்வி தொலைநோக்குப் பார்வையுடன் கூடியது என்பதை கடந்த அரை நூற்றாண்டு கால அரசியல் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மாநில ஆளுநர்கள் பற்றியும், அவர்களின் அதிகார வரம்புகள் பற்றியும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் குடியரசுத்தலைவர் மூலம் நியமனம் செய்யப்படுவர். ஆளுநர் நியமனம் பற்றி அரசியலமைப்பு விதி 155-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநரின் தகுதிகள் பற்றி அரசியலமைப்பு விதி 158 கூறுகிறது. ஒரே ஆளுநர் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலத்திற்கு ஆளுநராகவும் இருக்க முடியும். பொதுவாக, நடுவண் அரசு எடுக்கும் முடிவின்படி இந்தியக் குடியரசுத்தலைவரால் பணியமர்த்தப்படும் ஆளுநரே அந்தந்த மாநிலங்களின் அரசுத் தலைவர் ஆவார். பொதுவாக ஆளுநருக்கு, அவர் பதவி ஏற்கும் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பொறுப்பு செய்து வைப்பார். அவர் இல்லாதபோது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அல்லது மாநிலத்தில் உள்ள மூத்த நீதிபதி பதவிப் பொறுப்பு செய்து வைப்பார். இந்தியாவின் மாநிலங்களில் ஆளுநர்களும், இந்தியாவின் ஆட்சிப்பகுதிகளில் துணை ஆளுநர்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றுகின்றனர். ஆளுநருக்கு உதவ, மாநில அளவில் முதல் அமைச்சர் மற்றும் முதல் அமைச்சரின் கீழ் இயங்கும் அமைச்சரவை உள்ளது. ஆளுநரின் பதவிகள் பெயரளவிலான அதிகாரத்தையே கொண்டுள்ளன. தன்னிச்சையாக முடிவெடுத்தல் மற்றும் அதை நடைமுறைப்படுத்துதல் ஆகிய அதிகாரங்கள் முதல்வரிடமே உள்ளது. ஆட்சியில் ஆளுநரோ, துணை ஆளுநரோ பங்கெடுப்பதில்லை. ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்களிடமே கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே இந்த அதிகார பயன்பாட்டின் அடிப்படையிலயே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. புதுச்சேரி இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதி ஆகும். ஆனால் அது தனிமாநிலம் அல்ல. புதுடெல்லியின் நேரடி குடியரசுத்தலைவரின் ஆளுமைக்குட்பட்டதாகும். புதுடெல்லியை போன்று இங்கும் சிறப்பு திருத்த அரசியலமைப்பின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை, முதல்வர் மற்றும் அமைச்சரவை போன்ற அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. குடியரசுத்தலைவரின் பிரதிநிதியாக புதுச்சேரி ஆட்சிப்பகுதிகள் மேற்பார்வையாளர்களாக செயல்படுவர் துணைநிலை ஆளுநர் ஆவார். அந்த வகையில்

2016-ஆம் ஆண்டு மே 29 முதல் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவி வகித்து வருகிறார். இவரே ஆட்சிப் பகுதியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர். இந்திய அரசின் ஆட்சிப் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் துணைநிலை ஆளுநர்கள் பதவி வகித்து  வருகின்றனர். துணை ஆளுநர்கள் மாநில ஆளுநர்களைப் போன்ற படிநிலையை கொண்டவர்கள். மேலும் இந்தியாவிலுள்ள ஆட்சிப் பிரதேசங்களில் டெல்லி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் புதுச்சேரி தவிர பிற இடங்களில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் ஆட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ’’புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும் அரசு ஆவணங்களை கோருவதற்கும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசு கடந்த 2017 ஜனவரி 27 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் புதுச்சேரி துணைநிலை ஆளுநரான கிரண்பேடி, அரசின் அன்றாட செயல்பாடுகளில் தேவையில்லாமல் தலையீடு செய்து வருகிறார். அரசு நிர்வாகத்தில் குறுக்கீடு செய்கிறார். அரசை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ஆளுநரே உத்தரவுகளை பிறப்பிக்கிறார். மாநில அரசின் அதிகாரங்களை துணைநிலை ஆளுநர் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுகிறார். அவரது ஒட்டு மொத்த செயல்பாடும் அரசுக்கு எதிராக உள்ளது. எனவே அரசின் அன்றாட நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் ஆளுநருக்கு அதிகாரம் அளித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.

தீர்ப்பின் விவரம்

புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அந்த முடிவுக்கு ஏற்பத்தான் யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியான துணைநிலை ஆளுநரால் செயல்பட முடியும். அவருக்கென தனியாக பிரத்யேக சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை. அதற்கு யூனியன் பிரதேச சட்டத்திலும் இடமில்லை. தேவைப்படும் நேரங்களில் அமைச்சரவை வழங்கும் அறிவுறுத்தல்படியே ஆளுநரால் செயல்பட முடியும். மாநில அளவில் சட்டமியற்றும் அதிகாரம் சட்டப்பேரவைக்குத்தான் உள்ளது. சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரத்தை விட அதிகமான அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை. மாநில அமைச்சரவைக்கும் ஆளுநருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் சூழலில் சட்டப்பேரவையில் எடுக்கப்படும் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிக்க முடியாது.

அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த விஷயத்தில் குடியரசுத் தலைவர் மட்டுமே தக்க முடிவினை எடுக்க முடியும். அதேபோல துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவருமே முதல்வர் மற்றும் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டவர்களே. யூனியன் பிரதேச சட்டப்பிரிவு 44-இன் கீழ் ஆளுநருக்கு குறிப்பிட்ட சில விஷயங்களுக்காக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்காக அவர் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடவோ அல்லது தலையீடு செய்யவோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுக்கு இணையாக மற்றொரு அரசாங்கத்தை நடத்தவோ அவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.

எனவே, மாநில சட்டப்பேரவையின் அதிகாரத்தை குறைத்து மதிப்பீடு செய்து, ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை குறைத்து மதிப்பீடு செய்து, ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை உயர்த்தி ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி மத்திய அரசு கடந்த 2017 ஜனவரி 27 மற்றும் 2017 ஜூன் 16 ஆகிய தேதிகளில் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்கிறேன். அமைச்சரவை எடுக்கும் முடிவை அவர் பின்பற்றவேண்டும். அதேபோல அரசு அதிகாரிகள் அரசின் நிர்வாக முடிவினை தனக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் ஆளுநர் உத்தரவிட முடியாது. மாநில அமைச்சரவைக்கும் ஆளுநருக்குமிடையே இந்த மோதல் போக்கு நீடித்தால் அது ஜனநாயகத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கி விடும். எனவே, அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மற்றும் அமைச்சரவை அதிகாரத்துக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநரின் கருத்து

இத்தீர்ப்பு குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறும்போது, ’’உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஜனநாயகமும், நீதியும் வென்றுள்ளது. துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. அவர் அமைச்சரவையின் முடிவை ஏற்றே செயல்பட வேண்டும். புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் அமைச்சரவையின் முடிவுதான் இறுதியானது என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிரண்பேடி உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறினால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வேன் என்று குறிப்பிட்டார்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறுகையில் ’’நீதிமன்ற தீர்ப்பை ஆராய்ந்து வருகிறோம். அதன் பின்னரே தெளிவான கருத்தை தெரிவிக்க முடியும். வழக்கம்போல் ஆளுநர் மாளிகைக்கு வரும் கோப்புகளை ஆய்வு செய்து அனுமதி தரப்படுகிறது. புதுச்சேரி நன்றாக இருக்க வாழ்த்துகிறேன். இங்குள்ள மக்கள் சிறந்தவர்கள். புதுச்சேரி மக்கள் விரைவான முடிவுகளை எடுக்கும் ஆளுமை கொண்டவர்கள் என்று தெரிவித்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஆளுநர் கிரண்பேடி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வர் வே. நாராயணசாமி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கென தனிப்பட்ட சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்றும், முதல்வர், அமைச்சர்கள் எடுக்கும் முடிவின்படிதான் அவர் செயல்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து துணைநிலை ஆளுநர் மேல்முறையீடு செய்வதற்கு, புதுச்சேரி அமைச்சரவை அனுமதிக்காது. தனிப்பட்ட முறையில் அவர் மேல்முறையீடு செய்யலாம். அதற்கான செலவை அவரே தான் ஏற்க வேண்டும். உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் முதல்வர், அமைச்சர்களின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளோம். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் கிரண்பேடி, புதுவை மாநில வளர்ச்சிக்கு இடையூறு செய்து பெரும் தடையாக இருந்தார். எனவே, இவற்றுக்குப் பொறுப்பேற்று அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி யார் செயல்பட்டாலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியாகிய துணைநிலை ஆளுநர், புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில்தான் செயல்பட முடியும் என்றும், துணைநிலை ஆளுநருக்கு என்று தனியாக சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின், அமைச்சரவையின் அதிகாரத்தைவிட அதிகமான அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை என்றும் வழங்கப்பட்டிருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது. ஜனநாயகத்தில் ஆளுநர்தான் முடிவெடுப்பார் என்றால், தேர்தலும், சட்டப்பேரவையும் அமைச்சரவையும் எதற்காக?

டெல்லிக்குத் திசை காட்டும் புதுவை வழக்கு தீர்ப்பு

புதுச்சேரி மாநில அரசின் அன்றாட நிர்வாகத்தில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அனாவசியமாகத் தலையிடக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்புக்குரியது மட்டுமல்ல; இந்த விவகாரத்தை எப்படி அணுக வேண்டும் என்ற பார்வையையும் இந்திய அரசுக்குக் கொடுக்கிறது. ’ஒன்றியப் பிரதேசம் என்றால் டெல்லியின் நேரடி ஆட்சிக்கு, அதுவும் துணைநிலை ஆளுநர் மூலமாக நிர்வகிக்கப்படுவதற்காக மட்டுமே உருவானது என்ற தோற்றம் தரும் வகையில் துணைநிலை ஆளுநர் செயல்படுகிறார் என்று பல முறை குற்றஞ்சாட்டியிருந்தார் முதல்வர் வி.நாராயணசாமி. இதே பிரச்சினை டெல்லியிலும் பல முறை தலைதூக்கியிருந்தது.

முதல்வர் நாராயணசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ’’முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை எடுக்கும் முடிவுகள்தான் அரசுத் துறைச் செயலாளர்கள், பிற அதிகாரிகள் அனைவரையும் கட்டுப்படுத்தும் என்று தெளிவாகக் கூறியிருக்கிறது. ’’ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப மத்திய அரசும், அவர் சார்பில் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநரும் நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், அரசியல் சட்டத்தின் அடிப்படையிலான ஜனநாயக நடைமுறைகளும் குடியரசுத்துவமும் தோல்விகாணும் என்று அது சுட்டிக்காட்டியுள்ளது.

டெல்லி சந்தித்த இதே வழக்கு

டெல்லியில் முதல்வருக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பை அடியொற்றியே இந்தத் தீர்ப்பும் அமைந்திருக்கிறது. ’’சட்டமன்றம் தீர்மானிக்கும் விஷயங்களில் அமைச்சரவை அளிக்கும் ஆலோசனைகளை ஏற்று துணைநிலை ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெளிவுபடுத்தியிருக்கிறார். அமைச்சரவை எடுக்கும் முடிவுகளில் தனக்கு உடன்பாடு இல்லாதவற்றை மட்டும் குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பலாம் என்று அரசியல் சட்டம் அளிக்கும் அதிகாரத்தை, குடியரசுத்தலைவரின் முடிவுக்கு விட்டுவிடலாம் என்பதாகக் கருதி ஆளுநர் செயல்படக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

வெறுமனே இந்தத் திர்ப்பை இப்போதைய பிரச்சினைக்கான தீர்வாக மட்டும் கருதாமல், ஒன்றியப் பிரதேசங்களுக்கான நிர்வாக முறையை மறுவரையறுப்பதற்கான தக்க சமயம் இது என்று இந்திய அரசு கருத வேண்டும். அரசமைப்புச் சட்டத்தை அந்தந்தக் காலகட்டத் தேவைக்கேற்ப பல விஷயங்களிலும் திருத்திவந்திருக்கிறோம். ’மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை மிஞ்சியது அல்ல ஆளுநரின் அதிகாரம் என்ற பார்வையை நாம் பெறவும் அதற்கேற்ற மாற்றங்களை மேற்கொள்ளவும் இத்தீர்ப்பு வழிவகுக்க வேண்டும்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், ’’புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.