முப்படைத்தளபதி – புதிய பதவி உருவாக்கம்

முப்படைத்தளபதி – புதிய பதவி உருவாக்கம்

– வீ.வீ.கே. சுப்புராஜ்

குடியரசுத்தலைவர் தன் பதவியின் பொருட்டு பெயரளவில் முப்படைகளுக்கும் தலைவர் (Supreme Commander of the Armed Forces) என நமது அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால் சமீபத்தில் முப்படைத்தளபதியாக (செயல் தளபதியாக) விபின் ராவத் பொறுப்பேற்றுள்ளார். இது இதுவரை இல்லாத ஒரு புதிய பதவி. ஆனால் சில நாடுகளில் ஏற்கனவே முப்படைகளை ஒருங்கிணைத்து வழிநடத்த, இது போன்ற பதவிகள் உள்ளன. தற்போது போர் மேகங்களே காணாத நிலையில், இந்தப்பதவி உருவாக்கம் ஏன் என கேள்வி எழலாம். ஆனால், இந்த எண்ணம், 1999-ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரில் உணரப்பட்டது. மூன்று படைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த ஒரு படைத்தளபதி இல்லை என்ற வெற்றிடம் உணரப்பட்டது.

எனவே முப்படைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றும் நடைமுறையை ஆராய, கே. சுப்ரமணியம் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு 2000-ஆம் ஆண்டு இந்தப்பதவியை உருவாக்க சிபாரிசு செய்தது. இதைத் தொடர்ந்து, 2000-ஆம் ஆண்டு அன்றைய உள்துறை அமைச்சர் L.K. அத்வானி தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவைக்குழுவும் இந்தச் சிபாரிசினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றது. ஆனால் உடனே எந்த முடிவும் எடுக்கப்பட முடியவில்லை. மொத்த ராணுவமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வரும் போது, பல சமயம் பல நாடுகளில் ஜனநாயகம் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொண்டதும் உண்டு. சுதந்திர இந்தியா தனது 73-ஆண்டுகால வரலாற்றில் 17 பொதுத் தேர்தல்கள் நடைபெற்று ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றங்கள் நடைபெற்றதை தன்னகத்தே கொண்டுள்ளது. காந்தியின் இந்தியா எப்பொழுதும் அமைதியையே விரும்பியுள்ளது. எனினும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, முப்படைத் தளபதியின் பதவிகள், அதிகாரங்கள் குறித்து அறிக்கை சமர்பித்தபின், அதன் அடிப்படையில் விபின் ராவத் டிசம்பர் 30, 2019 அன்று முப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து புதிய ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே (28 ஆவது ராணுவ தலைமை தளபதி) டிசம்பர் 31 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

தற்போது நடைமுறையில் இருக்கும் ராணுவ சட்டங்களின்படி, மூன்று படைகளின் தலைமைத் தளபதிகள் 3 ஆண்டுகள் அல்லது 62 வயது, இதில் எது முன்னதாக வருகிறதோ, அதுவரை அவர்கள் பதவி வகிக்கலாம். எனினும் இப்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள முப்படைத் தளபதியின் பதவிக்காலம் நிர்ணயம் செய்யப்படவில்லை. 65 வயதை எட்டும் வரை அவர் பதவி வகிக்கலாம் என சட்டம் இயற்றப்படலாம்.

முப்படைத் தளபதியின் பணிகள் : இவர் பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை ஆலோசகராகச் செயலாற்றுவார். மூன்று படைகளின் தளபதிகளுடன் கலந்தாலோசித்து பாதுகாப்பு அமைச்சருக்கு பரிந்துரைகளை அளிப்பார். வீரர்களின் தேர்வு, பயிற்சி, தளவாடங்கள் கொள்முதல் முதலியவை சம்பந்தமாக ஒருங்கிணைந்த பணிகளை ஆற்றுவார். முப்படைகளை நிர்வகிக்கும் பணிகளில் முப்படைத்தளபதி ஈடுபடமாட்டார். ஆனால் அவைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதில் ஈடுபடுவார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஒரு புதிய பிரிவாக உருவாக்கப்பட்டுள்ள ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராக இவர் செயல்படுவார். பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஏற்கனவே (1) பாதுகாப்புத்துறை (2) பாதுகாப்பு உற்பத்தித்துறை (3) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை (4) முன்னாள் ராணுவத்தினரின் நலத்துறை ஆகியவை ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில், இது புதிதாக ஐந்தாவது துறையாக அமையும்.

தற்போது நாட்டிற்கு மிக அச்சுறுத்தலாக விளங்கும் இணையவழி, விண்வெளி தாக்குதல்கள் இவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இது சார்ந்த பாதுகாப்புத்துறை அம்சங்களின் தலைவராக இவர் செயல்படுவார். அணு ஆயுத செயல்பாடு தொடர்பாகவும் ஆலோசகராக செயல்படுவார். பிரதமர் தலைமையில் நடைபெறும் போர்த்தளவாடங்கள் கொள்முதல் செய்யும் கூட்டங்கள் மற்றும் பாதுகாப்பு திட்டக்குழு கூட்டங்களிலும் கலந்து கொள்வார்.

மகாராஸ்டிரத்தில் செயல்படும் தேசிய பாதுகாப்பு பயிற்சியகம் (National Defence Academy), ஹைதராபாத்தில் செயல்படும் பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரி (Defence Administrative Staff College), டெல்லியிலுள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரி (National Defence College) முதலியவற்றிற்கு இவர் தலைவராக இருப்பார்.

மூன்று படைகளின் தலைமைத் தளபதிகள் அடங்கிய குழுவின் நிரந்தரத் தலைவராக இருப்பார். இதுவரை மூன்று படைகளின் தளபதிகளில் யார் மூத்தவரோ அவர் தலைவராக இருந்தார். முப்படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி மேலாண்மையிலும் கவனம் செலுத்துவார். நாட்டின் ஒரே கூட்டுப் படைத்தளம் அந்தமான் மற்றும் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் செயல்படுகிறது. அந்தக் கூட்டுப்படைத்தளத்தின் தலைவராகவும் இவர் செயல்படுவார்.

புதிய முப்படைத்தளபதிக்கான ஆடை, தொப்பி, பெல்ட், இலச்சினைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இவருக்கென தனிக்கொடி உண்டு. அந்தக்கொடி அவர் வீட்டில், வாகனத்தில், அலுவலகத்தில் பறக்கவிடப்படும். அவரது ஊதியம் தலைமைத் தளபதிகளின் ஊதியத்திற்கு நிகராக இருக்கும். முப்படைத்தளபதியாக பதவி வகித்த ஒருவர், அவருடைய பணி ஓய்விற்குப்பின் எந்தவித அரசுப் பதவியையும் வகிக்க முடியாது.