813 வி.ஏ.ஓ. காலி இடங்களை நிரப்ப எழுத்து தேர்வு: அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

813 வி.ஏ.ஓ. காலி இடங்களை நிரப்ப எழுத்து தேர்வு: அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

2014–15–ம் ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவி காலிப்பணியிடங்கள் 813 உள்ளன.

இதனை நிரப்ப நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. எழுத்து தேர்வு 14.02.2016 அன்று நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 1 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும்.

எழுத்து தேர்விற்கு ஆன் லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பாதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தர பதிவு மூலமாக கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

டிசம்பர் 14–ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 16.12.2015 ஆகும்.

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் அனைத்து வகுப்புகளை சார்ந்த ஆதரவற்ற விதவைகள் குறைந்த பட்சம் 21 வயது முழுமை அடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 40 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மற்றவர்களுக்கு குறைந்த பட்சம் 21 வயதும் அதிகபட்சம் 30 வயதும் நிரம்பி இருக்க வேண்டும்.

10–ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வி தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளி கல்வி அல்லது கல்லூரி கல்வி படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்று இருக்க வேண்டும்.

வி.ஏ.ஓ. தேர்வு எழுத தேர்வு கட்டணமாக ரூ.75 செலுத்த வேண்டும். மேலும் விவரங்கள் www.tnpsc.gov.in மற்றும் www.exams.net-ல் பார்க்கலாம்.