268 உதவி புள்ளியியல் ஆய்வாளர்: போட்டித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

268 உதவி புள்ளியியல் ஆய்வாளர்: போட்டித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் காலியாகவுள்ள 268 உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 3 -ஆம் தேதி கடைசியாகும்.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்ட தேர்வு அறிவிக்கை விவரம்:

புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு மொத்தம் 268 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணிகளுக்கு இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய தேர்வுகளின் கீழ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்தப் பணிகளுக்கு மாதம் ரூ.5,000 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800 என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.

தேர்வுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தின் (www.tnpscexams.net) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 3-ஆம் தேதி ஆகும்.

வங்கி, அஞ்சலகங்கள் மூலமாக விண்ணப்பக் கட்டணம்-தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த ஜூன் 5 கடைசி நாள்.

கல்வித் தகுதி: எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது.

முதல் தாள் தேர்வானது ஜூலை 1 ஆம் தேதி காலை 10 மணிக்கும், இரண்டாம் தாள் மதியம் 2.30 தொடங்கி நடைபெறும்.

இந்தத் தேர்வு என்பது கொள்குறி வகை என்ற அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வினை எதிர்கொள்ள கணிதம், கணினி அறிவியல், பொருளாதாரம், அல்லது ஏதாவது ஒரு இளநிலைப் பட்டத்துடன் பொருளாதாரம், கணித பொருளாதாரம் போன்ற சிறப்பு பாடங்களுடன் முதுநிலையில் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.50 ஆகும். தேர்வுக் கட்டணம் ரூ.100. எழுத்துத் தேர்வின் போது பொருளாதாரம், பொது அறிவுடன், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இந்தத் தேர்வானது சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மையங்களில் நடைபெறவுள்ளன.

எழுத்துத் தேர்வுக்கான பாடத் திட்டம்-தேர்வுத் திட்டம் ஆகியன தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த சந்தேகங்கள் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.