182 அரங்குகள் – ஒரு கோடி நூல்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியை சனிக்கிழமை தொடங்கி வைத்து, அரங்கை பார்வையிடுகிறார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்.

இரண்டு லட்சம் தலைப்புகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள், 182 அரங்குகளுடன் சென்னை புத்தகக் காட்சி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

தமிழ் நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் இந்த புத்தகக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 27-ஆம் தேதி வரை தொடர்ந்து புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு9 மணி வரையிலும், பிற நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9மணி வரையிலும் பார்வையிடலாம்.

1 கோடி நூல்கள்: 182 அரங்குகளில் 2 லட்சம் தலைப்புகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட நூல்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. வாசகர்கள் வாங்கும் அனைத்து நூல்களுக்கும் மொத்த விலையில் 10சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடத்தப்படுவதால், சுமார் ஒரு லட்சம் மாணவர்களைப் புத்தகக் காட்சிக்கு அழைத்து வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்புக் குழு அமைப்பு: ஒவ்வொரு நாளும் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கருத்தரங்குகளிலும் எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், பேச்சாளர்கள், அரசியல் ஆளுமைகள், ஊடகவியலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், காவல் துறையினர் என வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்கின்றனர். வாசகர்கள் தேடும் புத்தகம் எந்த அரங்கில் கிடைக்கும் என்ற தகவல்களை அளிப்பதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்புக் குழுவினரின் உதவியுடன் வாசகர்கள் தேடும் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதைச் சில நிமிஷங்களில் தெரிந்து கொள்ளலாம்.

சிறந்த நூல்களுக்கு விருது: 27-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் 2017-2018-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த 10 நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, வரலாறு, மொழிபெயர்ப்பு, பெண்ணியம், சிறுவர் இலக்கியம், கல்வி, சுற்றுச்சூழல் என 10பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்து அரங்குகளைப் பார்வையிட்டார். அப்போது புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வழங்கப்படும் சலுகைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன், தமிழ் நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x