டிசம்பர் 10

டிசம்பர் 10
  • 1901 – முதன் முதலாக நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.
  • மனித உரிமைகள் நாள் (1948 டிச. 10)
  • 1878 – சுதந்திர இந்தியாவின் முதலாவது இந்திய கவர்னர் ஜெனரல் ராஜாஜி பிறந்தார்.

நோபல் பரிசுகள் :

வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபல் என்பவரால் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 இல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும்.

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபல் அவர்களின் உயில்படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும்.

பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 இல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.

1888-இல் ஒரு பிரெஞ்சு செய்தித்தாளில் “மரணத்தின் வியாபாரி இறப்பு” என்ற தனது இறப்புச் செய்தி கண்டு அதிர்ந்தார். ஆனால் அப்போது இறந்தவர் ஆல்ஃபிரடின் சகோதரரான லுட்விக் ஆவார். தான் இறந்தபிறகு எவ்வாறு நினைவில் வைக்கப்படுவோம் என்று தீவிரமான சிந்தனைக்கு இவர் ஆளானார். டிசம்பர் 10, 1895 அன்று இத்தாலியின் சான் ரெமோ மாளிகையில் ஆல்ஃபிரட் நோபல் காலமானார் (வயது 63).

நோபலின் கடைசி உயிலில், தனது சொத்தின் பெரும்பகுதி ‘மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு’ பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பரிசாக வழங்க பயன்படுத்தப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்.

நோபலின் குறிப்புகளின்படி, அமைதிக்கான நோபல் பரிசை வழங்க நார்வே நோபல் குழு அமைக்கப்பட்டது.

முதல் முறை வழங்கப்பட்ட பரிசுகள் :

அமைதி : ஃபிரடெரிக் பாசி மற்றும் ஹென்றி டூனான்ட் (உலகளாவிய செஞ்சிலுவைக் கழக நிறுவனர்).

இயற்பியல் : எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்த வில்லியம் கொன்றாட் ரான்ட்ஜன்.

வேதியியல்: யாகோபஸ் வான்ட் கோஃப்-க்கு வெப்ப இயக்கவியலில் நோபல் பரிசு தரப்பட்டது.

இலக்கியம் : இலக்கியப்பரிசுக்கு சல்லி புருதோம்- ஐ, சுவீடன் கழகம் தேர்ந்தெடுத்தது.

மருத்துவம்: மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஜெர்மானிய உடலியங்கியல் மற்றும் நுண்ணியிரியியலாளரான எமில் வோன் பெரிங்-குக்கு வழங்கப்பட்டது.

பொருளாதாரம்: 1968-ஆம் ஆண்டு முதன் முதலாக பொருளாதாரத்துக்கான பரிசினைப் பெற்றவர்கள் யான் டின்பெர்கன் மற்றும் ராக்னர் ஃபிரிச் ஆவர்.

மனித உரிமைகள் நாள் :

1948 டிசம்பர் 10-ஆம் நாள் ஒன்றுகூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.