ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து மட்டுமே பட்டியல் பெற்று, பணியில் நியமிக்க வகை செய்யும் பணி விதியை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி வகுப்பை முடித்த விமல்ராஜ், ஜோசப் தாமஸ் ரிச்சர்டு உள்ளிட்ட ஐந்து பேர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:

சீனியாரிட்டி

நாங்கள் 2006 – 08ல், இடைநிலை ஆசிரியர் பயிற்சி வகுப்பு முடித்தோம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட, சீனியாரிட்டி அடிப்படையில், ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு நடக்கிறது. இதனால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து மட்டுமே பட்டியலை பெற்று, இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் நியமிக்க வகை செய்யும், தமிழ்நாடு அரசு பணி விதி, அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. அது செல்லாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.ஆர்.சிவகுமார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், வேலை வாய்ப்பகத்தில் இருந்து பட்டியல் பெற்றாலும், இரண்டு பத்திரிகைகளில் (ஒரு பத்திரிகை, அதிகம் விற்பனையாகும் உள்ளூர் மொழி பத்திரிகை) விளம்பரங்களை வெளியிட்டு, பணிக்கு தேர்வுசெய்ய வேண்டும்; கருணை வேலைக்கு, இது பொருந்தாது என, கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை கருத்தில் கொண்டு, இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்கிறோம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து மட்டுமே பட்டியலை பெற்று, பணியிடங்களுக்கு நியமனம் செய்ய, வகை செய்யும் விதி செல்லாது என உத்தரவிடுகிறோம்.

விளம்பரங்கள்

ஏற்கனவே, கடந்த ஆண்டு ஜூன் மாதம், உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவின்படி, விளம்பரங்கள் மூலம் விண்ணப்பங்களை பெற்றும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டியல் பெற்றும், அரசு பணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.