“நெட்’ தேர்வு நடத்தும் பொறுப்பு சி.பி.எஸ்.இ. வசம் ஒப்படைப்பு

“நெட்’ தேர்வு நடத்தும் பொறுப்பு சி.பி.எஸ்.இ. வசம் ஒப்படைப்பு

கல்லூரிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) நடத்தும் பொறுப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சிபிஎஸ்இ) பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்படைத்தது.

கடந்த மாதம் நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் வரும் டிசம்பர் மாதத்துக்கான “நெட்’ தேர்வை சிபிஎஸ்இ நடத்த உள்ளது.

பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியர் பணியிடங்களில் சேருவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகையைப் பெறுவதற்கும் “நெட்’ தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பர் மாதங்கள் என இரு முறை இந்தத் தேர்வு நடத்தப்படும்.

இதற்கான அறிவிப்பு முறையே மார்ச், செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படும்.

கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்காக மட்டுமே “நெட்’ தேர்வை

நடத்திவந்த யுஜிசி, மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் 1989-ஆம் ஆண்டு முதல், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறவும், கல்லூரிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கும் சேர்த்து

நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பை இப்போது சிபிஎஸ்இ-யிடம் ஒப்படைத்துள்ளது.

இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் கூறியது:

யுஜிசி-யின் பணிச் சுமையைக் குறைக்கும் நோக்கத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் மாதத் தேர்வை சிபிஎஸ்இ-தான் நடத்தப்போகிறது. இந்தத் தேர்வை சிபிஎஸ்இ முதன்முறையாக நடத்த இருப்பதால், கேள்வித்தாள் மாதிரிகளை அளிப்பது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் யுஜிசி செய்துதரும் என்றார் அவர்.

இந்த மாற்றம் காரணமாக, இத் தேர்வை எழுதுபவர்கள் இனி cbse.nic.in என்ற இணையதளத்தையும் மார்ச், செப்டம்பர் மாதங்களில் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, ஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜேஇஇ), அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு (ஏஐபிஎம்டி), மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) என்பன உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை சிபிஎஸ்இ நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x