திருநெல்வேலியில் 15-ஆவது வன உயிரினச் சரணாலயம் தமிழக முதல்வர் அறிவிப்பு

திருநெல்வேலியில் 15-ஆவது வன உயிரினச் சரணாலயம் தமிழக முதல்வர் அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் உயிர்ப் பன்மை செறிந்துள்ள பகுதிகளை உள்ளடக்கி, நெல்லை வன உயிரினச் சரணாலயம் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இது, மாநிலத்தின் 15-ஆவது வன உயிரினச் சரணாலயமாக விளங்கும் என்று அவர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா 11-8-2014 தேதியன்று படித்தளித்த அறிக்கை:

தமிழகத்தின் சூழல் பாதுகாப்பு, சமூகப் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்யவும், மாநிலத்தை பசுமை மாநிலமாக்கவும், நடப்பாண்டில் உயிர்ப் பன்மை பாதுகாப்பு, அடிப்படை இயற்கை வளங்களைப் பெருக்க தனியார் நிலங்களில் மரங்கள் வளர்த்தல், ஆளுமைத் திறன் மேம்படுத்துதல் போன்ற முக்கியச் செயல்பாடுகளை உள்ளடக்கிய திட்டப் பணிகள் ரூ.110.07 கோடியில் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் பசுமைப் பரப்பு அதிகரித்தல், காடு வளர்ப்பு போன்ற பணிகள் ரூ.35.62 கோடியில் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் இப்போது 14 வன உயிரினச் சரணாலயங்களும், 5 தேசியப் பூங்காக்களும், 14 பறவைகள் சரணாலயங்களும், தலா 4 புலிகள், யானைகள் காப்பகங்களும், 3 உயிர்க்கோள் காப்பகங்களும் உள்ளன.

சுற்றுச்சூழலுடன் இணைந்த உயிர்ப் பன்மை செறிந்துள்ள பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மேலாண்மையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்க உகந்த சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. எனவே, உயிரியல் முக்கியத்துவம் நிறைந்த பகுதிகளை வன உயிரினச் சரணாலயமாக ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உயிர்ப் பன்மை செறிந்துள்ள பகுதிகளை உள்ளடக்கி தமிழகத்தின் 15-ஆவது வன உயிரினச் சரணாலயமாக நெல்லை வன உயிரினச் சரணாலயம் ஏற்படுத்தப்படும். மேலும், இடம்பெயர்ந்து வரும் பல்வேறு பறவையினங்களின் குளிர்கால புகலிடமாக மட்டுமின்றி, உயிர்ப் பன்மை செறிந்ததாகவும் விளங்கும் விழுப்புரம் மாவட்டம் ஓசூடு ஏரிப் பகுதி மாநிலத்தின் 15-ஆவது பறவைகள் சரணாலயமாக உருவாக்கப்படும்.

மேலும், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அட்டகட்டி, முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு பகுதிகளிலுள்ள அடிப்படை பயிற்சி மையங்கள், மேம்படுத்தப்பட்ட வன உயிரின மேலாண்மைப் பயிற்சி மையங்களாக தரம் உயர்த்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *