டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு 10,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு 10,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு

டி.என். பி.எஸ்.சியின் ஓராண்டு தேர்வுக்கான கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில், குரூப் 1, குரூப் 2, விஏஓ உள்ளிட்ட 26 வகையான தேர்வுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிஎன்பிஎஸ்சி 2015-16ம் ஆண்டுக்குரிய தேர்வு அட்டவணையை அதன் தலைவர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டார். இதை டிஎன்பிஎஸ்சி செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சோபனா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர், பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டி: 2015-16ம் ஆண்டுக்குரிய தேர்வு அட்டவணையை தயாரித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில், உதவி வேளாண்மை அதிகாரி பணியிடங்களுக்கு 417 பேரும், குரூப் 2 தேர்வில் நேர்முக தேர்வு உள்ள பணியிடங்களுக்கு 904 பேரும், குரூப் 2 தேர்வில் நேர்முக தேர்வு இல்லாத பணியிடங்களுக்கு 564 பணியிடம், குரூப் 1 தேர்வில் 47 பணியிடங்கள் மற்றும் குரூப் 4, குரூப் 3, குரூப் 6, இன்ஜினியர், மீன்வளத்துறை சப்இன்ஸ்பெக்டர், தொழிலாளர் அலுவலர், உதவி ஆணையர் உள்ளிட்ட 26 வகையான பதவிகளில் உள்ள சுமார் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வி.ஏ.ஓ. தேர்வும் நடைபெற உள்ளன.

விஏஓவில் எத்தனை காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுக்கான கால அட்டவணை டிஎன்பிஎஸ்சி இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் இதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். 2000-01ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் கேட்டுள்ள தகவல்கள் எங்களுக்கு வந்துள்ளது. உச்ச நீதிமன்ற ஆணையை நிறைவேற்றும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். கடந்த 2014-15ம் ஆண்டில் சுமார் 14,252 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 2014-15ம் ஆண்டிற்கான கால அட்டவணை யில் குரூப் 2 (1064), மோட்டார் வாகன ஆய்வாளர் (17), நூலகத்துறை (29), சுகாதார அதிகாரி (33) உள்ளிட்ட ஒரு சில தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட வேண்டியது உள்ளது. இந்த முடிவுகள் குறுகிய காலத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.