குரூப் 1 தேர்வு அறிவிக்கை வெளியீடு: விண்ணப்பிக்க டிசம்பர் 8 கடைசி

குரூப் 1 தேர்வு அறிவிக்கை வெளியீடு: விண்ணப்பிக்க டிசம்பர் 8 கடைசி

குரூப் 1 எழுத்துத் தேர்வுக்கான அறிவிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8 ஆம் தேதி கடைசியாகும்.
எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பதவியிடங்கள் குரூப் 1 தொகுதியின் கீழ் வருகின்றன. இந்த குரூப் 1 தொகுதியில் 85 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வின் அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
துணை ஆட்சியர் 29, துணை காவல் கண்காணிப்பாளர் (நிலை 1) 34, உதவி ஆணையர் (வணிக வரித் துறை) 8, மாவட்டப் பதிவாளர் -1, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 5 மற்றும் மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்) 8 என மொத்தம் 85 பதவியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி பட்டப் படிப்பு தேர்ச்சியாகும். தேர்வை எதிர்கொள்ள குறைந்தபட்ச வயது 21. தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (டிசம்பர்) 8 ஆம் தேதி கடைசி நாளாகும்.
எழுத்துத் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கென 32 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்ற விவரம், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் கட்டணத்தை, கடன் அட்டை- பற்று அட்டை அல்லது இணைய வங்கிச் சேவை ஆகிய முறையில் செலுத்தலாம். இந்தியன் வங்கிக் கிளைகள், பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகள், அஞ்சலகங்களில் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்ப பிரச்னைகளோ எழ வாய்ப்புள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி கட்ட நாட்களில் சமர்ப்பிக்க முடியாமல் போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பாகாது.
சந்தேகங்களுக்கு விளக்கம்:
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது எழும் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெற 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாத தொலைபேசி எண்: 1800-425-1002-ல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரருக்கான அறிவுரைகள் தேர்வாணையத்தால் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. அவை தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திருத்தியமைக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கான அறிவுரைகள் இந்த குரூப் 1 தேர்வுக்கு பொருந்தும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x