இரண்டு ஆண்டுகளாக உயர்கிறது பி.எட்., எம்.எட்., படிப்புகள்

இரண்டு ஆண்டுகளாக உயர்கிறது பி.எட்., எம்.எட்., படிப்புகள்

நாடு முழுவதும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும், அந்தந்த மாநிலங்களில் உள்ள, ஆசிரியர் பல்கலையின் கீழ் கொண்டு வரவும், பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்கான கால அளவை இரண்டு ஆண்டுகளாக உயர்த்தவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.

கடந்த 15ம் தேதி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர், ஸ்மிருதி இரானி தலைமையில், கல்வி அதிகாரிகள் கூட்டம் நடந்தது. இதில், அனைத்து மாநிலங்களில் இருந்தும், கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக, ஆசிரியர் கல்வி நிறுவன அதிகாரிகள், கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

இக்கூட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு துறையின் கீழ் இயங்கும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை, அந்தந்த மாநில ஆசிரியர் பல்கலையின் கீழ் கொண்டு வருவது; பி.எட்., எம்.எட்., படிப்பை, இரு ஆண்டுகளாக அதிகரிப்பது; ஆராய்ச்சி திட்டங்களை வலுப்படுத்துவது; இடைநிலைக் கல்வி வகுப்புகளில், தொழிற்கல்வி வகுப்புகளை அறிமுகப்படுத்துவது ஆகிய, நான்கு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில், பி.எட்., எம்.எட்., படிப்புகளை, இரு ஆண்டுகளாக்கும் திட்டத்தில், முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து, பலவகை ஆசிரியர் கல்வி படிப்புகளை, ஆசிரியர் பல்கலையின் கீழ் கொண்டு வர, நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது. தமிழகத்தில், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் என, தனித் துறை இயங்கி வருகிறது. இதன் கீழ், இரு ஆண்டு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிப்பு வழங்கப்படுகிறது. இந்த துறையின் கீழ், 500 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இரு ஆண்டுகளில், அனைத்து ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலையின் கீழ் சென்றுவிடும். அப்போது, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், மூடப்படும் என, கூறப்படுகிறது.

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், ’ஓரிரு ஆண்டுகளில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், ஆசிரியர் பல்கலையின் கீழ் வந்துவிடும். ’டேட்டா என்ட்ரி, கம்ப்யூட்டர் ஆபரேட்டர்’ போன்ற, எளிய வகை தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை, 8, 9ம் வகுப்புகளிலேயே அறிமுகப்படுத்தவும், மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது’ என்றார்.


Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/5/d790946132/htdocs/exammaster.co.in/wp-content/plugins/slickquiz/php/slickquiz-front.php on line 59