அக்டோபர் 2

காந்தி ஜெயந்தி.

உலக அகிம்சை தினம்.

1904 – இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறப்பு.

1975 – தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் இறப்பு.

லால் பகதூர் சாஸ்திரி

லால் பகதூர் சாஸ்திரி

பிறப்பு : அக்டோபர் 2, 1904
இறப்பு : ஜனவரி 11, 1966

இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார்.

சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாக தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார்.

வரலாற்றில் சாஸ்திரி

  • 1921 ல் ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தி அடிகள் தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
  • 1926 ல் காசி வித்யாபீடத்தில் படிப்பை முடித்ததும் சாஸ்திரி என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது.
  • 1930 ஆம் ஆண்டு உப்பு சத்யாகிரகத்தில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
  • 1937 இல் உத்திரப்பிரதேச நாடாளுமன்ற குழுவின் ஒருங்கிணைப்பு செயலாளராக பணியில் அமர்ந்தார்.
  • 1940 இல் சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாக தனி நபர் சத்யாகிரகம் இருந்ததால் ஓர் ஆண்டு சிறை தண்டனை பெற்றார். இவர் மொத்தமாக ஏறக்குறைய 9 ஆண்டுகள் சிறையில் கழித்தார்.
  • மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழி பெயர்த்தார்.
  • 1951-1956 வரை ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார்.
  • போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது இவரே முதன் முதலில் பெண்களை நடத்துனராக நியமித்தார்.
  • 1956 இல் மெகபூப்நகர் ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததற்குத் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக முன்வந்தார்.
  • இவர் உள்துறை அமைச்சராக இருந்தபொழுது சந்தானம் தலைமையில் ஊழல் தடுப்பு குழு அமைவதற்குக் காரணமாகவிருந்தார்.

பாகிஸ்தானுடனான 22 நாள் போரின் போது லால் பகதூர் சாஸ்திரி ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற முழக்கத்தை உருவாக்கினார். வெண்மைப் புரட்சியையும் ஊக்கப்படுத்தினார். இதன் காரணமாக 1965 இல் தேசிய பால்பண்ணை வளர்ச்சித் துறை குஜராத்தில் அமைக்கப்பட்டது. 1965 செப்டம்பர் மாதம் பெரிய அளவில் பாகிஸ்தான் போர் வீரர்களும் ஆயுததாரிகளும் இந்தியப்பகுதியில் ஊடுருவினர்.

பிரச்னைக்குத் தீர்வு காண சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் சோவியத் ஒன்றியத் தலைவர் அலெக்சி கோசிஜின் அவர்களால் தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.
இந்தியா பாகிஸ்தான் போர் செப்டம்பர் 23, 1965 அன்று ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஆணை மூலம் முடிவுக்கு வந்தது.

ஜனவரி 10, 1966 ல் சாஸ்திரியும் அதிபர் முகமது அயூப் கானும் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்கள். அன்று இரவு, ரஷ்யப் பிரதமர் தந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு தன் அறைக்குத் திரும்பிய சாஸ்திரிக்கு இரவு ஒரு மணிக்கு மேல் இருமல், மார்வலி, மூச்சுத் திணறல் என்று ஆரம்பித்து உயிரே பிரிந்து விட்டது. மாரடைப்பு வந்து நள்ளிரவு 1.32 மணிக்கு இறந்தார் என்று அறிவிக்கப்பட்டது.

பதவியில் இருந்த போது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்தியப் பிரதமர் சாஸ்திரி ஆவார்.

சாஸ்திரி இல்லாமல் உலகமே கொஞ்சம் சிறுத்து விட்டது” என்று அமெரிக்க அதிபர் ஜான்ஸன் தெரிவித்திருக்கிறார். எத்தனையோ பதவிகள் வகித்த சாஸ்திரிக்குச் சொந்தமாக வீடு ஒன்று கிடையாது என்பது வியப்பானது.

காமராஜர்

காமராஜர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி பிறந்தார்.

அவருக்குக் குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை ராஜா” என்றே அழைத்து வந்தார்.

ராஜாஜி தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்யாக்கிரகம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார்.

அதற்காகக் காமராஜ் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

1942-இல் ஆகஸ்ட் புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாக அமராவதி சிறைக்கு அனுப்பப்பட்டார்.

1953-க்குப் பிறகு ராஜாஜிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம் அது.

1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார்.

மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமைச்சரவை மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த, எம்.பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.

அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முக்கியமான இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர்.

முதலமைச்சராக ஆற்றிய பணிகள்

அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கையை 27,000 ஆக உயர்த்தினார். அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும்.

1955 ஆம் ஆண்டு மார்ச் 27ந் தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், சென்னை மாகாண தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாடு நடந்தது. அவர் அருகில் அமர்ந்திருந்த கல்வித்துறை இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் தொடக்கப் பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்குவது பற்றி முதன் முதலாக ஆலோசித்தார்.

1956 ஆம் ஆண்டு பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

• கீழ் பவானித்திட்டம்,
• மேட்டூர் கால்வாய் திட்டம்,
• காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்,
• மணிமுத்தாறு,
• அமராவதி,
• வைகை,
• சாத்தனூர்,
• கிருஷ்ணகிரி,
• ஆரணியாறு
ஆகியவைகளாகும்.

அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத்துறை நிறுவனங்களும், பெருந் தொழிற்சாலைகளும் :

பாரத மிகு மின் நிறுவனம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

மணலி (சென்னை) சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)

இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)

நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை (HPF)

கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை

மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் அனல் மின் திட்டங்களும் இதில் அடங்கும்.

K-PLAN எனப்படும் ’காமராஜர் திட்டம் 02.10.1963

கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டார் நேரு.

இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியைத் துறந்து (02.10.1963) பொறுப்பினைப் பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்தார்.

• லால்பகதூர் சாஸ்திரி,
• மொரார்ஜி தேசாய்
• எஸ்.கே. பாட்டீல்
• ஜெகஜீவன் ராம்
போன்றோர் இவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.

காமராஜ் தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினைகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்”- இந்திரா காந்தி.

1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்த நாள்) உறக்கத்திலேயே உயிர் பிரிந்தது.

அவர் இறந்த போது வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

உலக வன்முறை எதிர்ப்பு தினம் (International Day of Non-Violence)

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 -ஐ ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஜூன் 15, 2007 அன்று அனைத்துலக வன்முறை எதிர்ப்பு தினமாக அறிவித்தது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x