தப்பிக்க முயற்சிக்கும் போலி ஆசிரியர்கள் – உடனடி நடவடிக்கை பாயுமா?

தப்பிக்க முயற்சிக்கும் போலி ஆசிரியர்கள் – உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் போலி சான்றிதழ் ஆசிரியர்களை, களையெடுக்கும் முயற்சியை மாநகராட்சி கைவிட்டுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதற்குள், மாநகராட்சி பள்ளிகளை விட்டு, பணி மாறுதல் பெற, போலி ஆசிரியர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில், 122 துவக்க பள்ளிகள் உள்ளன. இதற்காக, 2,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

2 பேர் நீக்கம்

இதில், பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள், கடந்த, 1995ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பல்வேறு கட்டங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள். அப்போது, இடைநிலை ஆசிரியர் பயிற்சி, கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அப்போது பணி நியமனம் பெற்ற பலர், முறையான ஆசிரியர் பயிற்சி பெறாமல் 8, 10ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் போலியாக சான்றிதழ் பெற்று, அதன்மூலம் பணியில் சேர்ந்திருப்பதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து, அடிக்கடி சர்ச்சை எழுவதும், மாநகராட்சி கல்வித்துறை அவ்வப்போது நடவடிக்கை எடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமார், மாநகராட்சி கமிஷனராக இருந்தபோது, இந்த விவகாரத்தில் இரண்டு பேரை பணிநீக்கம் செய்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு இப்பிரச்னை வெடித்தது.

தொடர்கிறது

அப்போது ஒன்பது பேர் மீது புகார் நிரூபிக்கப்பட்டு, எட்டு பேரை, தற்போதைய மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் பணிநீக்கம் செய்தார். ஒருவரின் சான்றிதழ் உண்மையானது என்று கூறி, அந்த ஆசிரியர் மட்டும் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், 2,000 ஆசிரியர்களின் சான்றிதழ்களையும் ஆய்வுசெய்து, போலி ஆசிரியர்களை முழுமையாக களையெடுக்க, மேயர் சைதை துரைசாமி உத்தரவிட்டார்.

இதற்காக 2,000 ஆசிரியர்களின் சான்றிதழ் நகல்களை, மாநகராட்சி கல்வித்துறை பெற்றது. ஆய்வின் அடிப்படையில், தற்போது பணிபுரியும் ஆசிரியர்களில் யாரும் போலி சான்றிதழ் பெற்றவர்கள் இல்லை என்ற முடிவுக்கு மாநகராட்சி வந்துள்ளது. ஆனால், தற்போதும் 50க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ் ஆசிரியர்கள் பணியில் இருப்பதாக விவரம் அறிந்த மாநகராட்சி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த போலி சான்றிதழ் ஆசிரியர்கள், தங்கள் பணியை காப்பாற்றிக்கொள்ள, மேலிடங்களுக்கு பணம் கொடுத்து சரிக்கட்ட, ஆட்களை பிடிக்கும் வேலையில் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனி குழு தேவை

சமீபத்தில் புதுச்சேரி அரசு பள்ளியில், போலி சான்றிதழ் ஆசிரியர்கள் சிக்கியதைத் தொடர்ந்து, மாநகராட்சி இந்த விஷயத்தை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் கையில் எடுக்கலாம் என்று கருதப்படுவதால், சில ஆசிரியர்கள், மாநகராட்சி பள்ளியில் இருந்து வெளி இடத்திற்கு பணி மாறுதல் பெற முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக தடையில்லா சான்று கேட்டு சில ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விஷயத்தில் மாநகராட்சி விஜிலென்ஸ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் விசாரணையை மட்டும் நம்பாமல், போலி ஆசிரியர்களை களையெடுக்க, அரசு தனி குழுவை அமைக்க வேண்டும் என்றும், இதற்கு மேயர் சைதை துரைசாமி ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *