தமிழகத்தில் நாளை பிளஸ்2 தேர்வு முடிவுகள்.. எஸ்எம்எஸ் வழியாக மதிப்பெண்கள்…!

தமிழகத்தில் நாளை பிளஸ்2 தேர்வு முடிவுகள்.. எஸ்எம்எஸ் வழியாக மதிப்பெண்கள்…!

சென்னை : பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்ட படி நாளை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தேர்வு எழுதிய 9 லட்சம் மாணவ மாணவியர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்கள் செல்போனுக்கு அனுப்பப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பள்ளியிலும் கேட்டு அவர்களது செல்போன் எண்களை வாங்கிவிட்டோம். 95 சதவீத மாணவர்களின் அல்லது பெற்றோரின் செல்போன் எண்கள் கிடைத்துள்ளன.

பிளஸ்2 தேர்வு முடிவு வெளியான 10 நிமிடங்களில் எஸ்எம்எஸ் மூலம் அந்தந்த எண்களுக்கு தேர்வு முடிவும் அவர்களின் மதிப்பெண் பட்டியலும் அனுப்பப்பட்டுவிடும்.

தமிழகத்திற்கு பெருமை

இந்தியாவிலேயே இதுதான் முதன் முறையாக பொதுத்தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலமாக மாணவ மாணவியர்களுக்கு அனுப்பப்படுகிறது. இது தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும் பெருமை சேர்க்கும் நடவடிக்கையாகும் .தேர்வு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் போது அதில் இதுவரை ஆங்கிலத்தில்தான் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு வந்தது.

மதிப்பெண் சான்றிதழ்களில் தமிழில் பெயர்கள்

ஆனால் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை தமிழிலும் அவர்கள் பெயர் குறிப்பிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் இந்த வருடம் முதல் மாணவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். மின் ஆவணக் காப்பகம் மூலம் மாணவர்களின் சான்றிதழை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில மாணவர்களுக்கு சான்றிதழ்கள் கிடைப்பதில்லைல என்பதற்காக அவர்களின் சான்றிதழை பேணிக்காப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் விரைவு நடவடிக்கை

தேர்வு முடிவுகளை இணையதளத்தில் பார்க்கும் போது விரைவாக பார்க்க முடியவில்லை என்ற குறைபாடு உள்ளது. அதை விரைவுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 4 இணையதளங்கள் இதை வழங்க உள்ளன. மேலும் தோல்வி அடையும் மாணவர்களுக்கு 104 போன் எண் மூலம் ஆலோசனை வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கிறது. 25 சதவீத இடஒதுக்கீட்டில் எத்தனை மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது என்பது ஜூன் மாதத்தில் தெரிய வரும். அநத் இட ஒதுக்கீட்டை வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு பரிசீலனை

கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் எடுப்பது பற்றிய குற்றச்சாட்டுகள் சில பள்ளிகள் மீது வந்துள்ளன. அது பற்றி கவனிக்க முதன்னை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலரை பார்வையிடச் சொல்லி அதில் உண்மை இருந்ததால் உரிய நடவடிக்கை எடுக்க கூறியுள்ளோம். நீட் தேர்வு முடிந்துள்ள நிலையில் மாநில பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுபற்றி பரிசீலிததுக் கொண்டிருக்கிறோம். சட்டசபையில் கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது அது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். நீட் தேர்வைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி அரசு பரிசீலிக்கிறது. இதில் கல்வித்துறை செயலாளர் சில கருத்துகளை வழங்கியுள்ளார். அதன்படி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *