பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் – Regional Comprehensive Economic Partnership

பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் – Regional Comprehensive Economic Partnership

                  – வீ.வீ.கே. சுப்புராஜ் ஐரோப்பிய ஒன்றியத்தை (European Union) நாம் அறிவோம். இது பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய (28 நாடுகள்) ஒரு அரசியல் வர்த்தக கூட்டமைப்பு. இவர்களுக்கிடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளன. இவர்களுக்கென்று ஒரு தனி பார்லிமென்ட் உள்ளது. தலைமையிடம் பிரஸ்ஸெல்ஸ் (பெல்ஜியம்), யூரோ (Euro) என்ற தனி நாணயம் உள்ளது.

இதை ஒத்த ஒரு அமைப்பை ஆசிய நாடுகளுக்கிடையே உருவாக்க வேண்டுமென்ற ஆதங்கம் 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே எழுந்தது. 10 நாடுகளைக் கொண்ட ASEAN (Association of South East Asian Nations)  கூட்டமைப்பு ஏற்கனவே உள்ளது. இந்தக் கூட்டமைப்பு ஆகஸ்ட் 8, 1967 அன்று இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் சேர்ந்து அமைத்தன. பின் காலப்போக்கில் வியட்நாம், மையன்மார், புருனை, கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகள் இதில் இணைந்தன. தற்சமயம் மேலும் ASEAN அமைப்பில் இல்லாத 6 நாடுகள் (சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா) சேர்ந்து இந்த சுஊநுஞ ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்தலாமா? என முனைந்துள்ளன. RCEP சம்பந்தமான பேச்சுவார்த்தை 2012-இல் கம்போடியாவில் நடைபெற்ற ASEAN மாநாட்டில்தான் முன் வைக்கப்பட்டது.

இந்தப் பதினாறு நாடுகளும் RCEP ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் பட்சத்தில், இது உலக மக்கள் தொகையில் பாதியை உள்ளடக்கியதாக இருக்கும். உலக ழுனுஞ-இல் 25 சதவீதத்தைக் கொண்டிருக்கும். உலகவர்த்தகத்தில் 30 சதவீதத்தைக் கொண்டிருக்கும். மேலும் உலகின் 26 சதவீத நேரடி வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்ட அமைப்பாக உருவெடுக்கும்.

இந்தியா எதிர்நோக்கும் சவால்கள் :

இதில் உள்ள நாடுகள் 2012-ஐ அடிப்படை ஆண்டாக எடுத்துக் கொண்டு சுங்கவரி வீதங்களை கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கையை மற்ற RCEP நாடுகள் முன் வைக்கின்றன. ஆனால் இந்தியா 2014-க்குப் பிறகு சுங்கவரிகளை பல இறக்குமதிப் பொருட்களின் மேல் உயர்த்தி உள்ளது. இவை 13 முதல் 17 சதவீதம் அதிகமாகும். எனவே 2019-ஐ அடிப்படை வருடமாக எடுத்துக் கொண்டால், இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும்.

இந்தியா “auto trigger machanism” என்று சொல்லக்கூடிய, அதாவது அளவுக்கு மீறி சில வெளிநாட்டுப் பொருட்கள் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் போது, அதன்மீது சுங்கவரியை தானே உயர்த்திக் கொள்ள இந்தியாவுக்கு உரிமை வேண்டும். அப்பொழுதுதான் இந்தியப் பொருட்களை பாதுகாக்கப்பட முடியும்.

மேலும், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தமான அந்தந்த நாட்டினுடைய தகவல்கள், அந்தந்த நாட்டிலேயே தரவு சேமிப்புகளாக வைக்கப்படவேண்டும். தேவையானால் பகிர்ந்து கொள்ளலாம். இது தேச பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமையும். இல்லையெனில், அது அச்சுறுத்தலாகவே பார்க்கப்படும்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், பின்பு தேவைப்பட்டால், அதை தளர்த்திக் கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். இதை ஆங்கிலத்தில் (Ratchet Obligations) என்று கூறுவர்.

RCEP நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இந்தியத் தொழில்துறை வெகுவாகப் பாதிக்கப்படலாம். சீனாவிலிருந்து ஏற்கனவே இறக்குமதியாகும் மலிவுப் பொருட்கள் இந்தியத் தொழில்துறையை வெகுவாகப் பாதித்திருக்கிறது. RCEP நடைமுறைப்படுத்தப்பட்டால் சொல்லவே வேண்டாம்.

ஆட்டோமொபைல் தொழில் உற்பத்தி அதிகமாகப் பாதிக்கப்படும். ஏனெனில் பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் உற்பத்தி செய்து இந்தியாவில் சந்தைப்படுத்தும் போது, இந்திய வாகனத்துறை அழிந்துபோகும். இதனால் இந்தியாவில் வேலையின்மை உயரும். இந்திய அரசின் “Make in India” யை திட்டம் அதனுடைய அர்த்தத்தை இழந்துவிடும்.

பால் பொருட்கள் இந்தியாவில் நுழையும்போது இந்திய பால் உற்பத்தித்துறையை முற்றிலும் அழித்துவிடும். ஏனெனில் நியூசிலாந்து தன்னுடைய பால் பொருட்களின் உற்பத்தியில் 93.4 சதவீத பால் பவுடர், 94.5 சதவீத வெண்ணெய் 83.6 சதவீத பாலாடைக்கட்டி உற்பத்தியை ஏற்றுமதி செய்கிறது. அதற்கு இந்தியா ஒரு பெரிய வாய்ப்பை ஏற்படுத்திவிடும். உள்நாட்டு பால் உற்பத்தி முடக்கப்படும்.

சீனா, வியட்நாம், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உற்பத்தியாகும் மலிவான துணி ரகங்கள் இந்திய ஜவுளித்துறையை முடக்கிவிடும். ஏற்கனவே சர்வதேச சந்தையில் அவர்களின் போட்டியை இந்திய எதிர்கொள்ள வேண்டி உள்ளதை அனைவரும் அறிவோம்.

அடுத்தபடியாக எஃகு உற்பத்தி. மலிவான சீன இறக்குமதி, இந்திய எஃகு உற்பத்தி ஆலைகளுக்குப் பெரிய சவாலாக அமையும்.

இந்திய விவசாயப் பொருட்களான தேயிலை, ரப்பர், ஏலக்காய், மிளகு போன்றவற்றை வாங்குவதற்கு பதிலாக மலிவான இறக்குமதிப் பொருட்களை மக்கள் வாங்க முனைவர். கடும் போட்டி ஏற்படும் போது, இந்திய விவசாயம் அதிகம் பாதிக்கப்படும். ஏற்கனவே கேரள அரசு தனது கவலையைத் தெரிவித்துள்ளது.

RCEP-இல் இந்தியா கையெழுத்திடுவதற்கு முன்பு, NITI ஆயோக் வெளியிட்ட ஒரு தகவலை மனதில் கொள்ள வேண்டும். ASEAN – China தடையில்லா ஒப்பந்தம் 2010-இல் கையெழுத்தான பின்பு இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் சீனாவுடனான வர்த்தகத்தில் 53 மில்லியன் டாலர் உபரி வர்த்தகத்திலிருந்து (Surplus trade) 54 மில்லியன் பற்றாக்குறை வர்த்தகமாக (Deficit trade) 2016-இல் மாறியுள்ளது. அதுபோல் இந்தியாவின் பற்றாக்குறையும் பன்மடங்கு அதிகரித்துவிடும்.

ஆனால், இந்தியா RCEP சேரவில்லையானால், இந்தியா தனிமைப்படுத்தப்படும். அண்டை நாடுகளான இவற்றுடன் வியாபாரத் தொடர்பு பாதிக்கப்படும். RCEP ஒப்பந்தத்தில் மற்ற நாடுகள் கையெழுத்திட்டபின் அதில் இந்தியா சேரவில்லையானால், இந்த கூட்டமைப்பு நாடுகளுடன் தனித்தனியாக பேரம் பேச முடியாது. ஒட்டுமொத்த எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டி வரும். ஆனால் மற்ற நாடுகள் இந்தியாவை சேர்த்துக் கொள்வதில்தான் ஆர்வம் காட்டும். ஏனெனில் இந்தியா ஒரு பெரிய சந்தை.

ஆனால் தாய்லாந்தில் நவம்பர், 2019-இல் நடைபெற்ற RCEP மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியா, ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு மேற்கூறிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டி உள்ளது.

இந்தியாவில் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்கட்சிகளிடமிருந்தும் ஏற்பட்ட எதிர்ப்பை மனதில் கொண்டு இந்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்றே கூறலாம்.