தங்க டெபாசிட் திட்டம்

தங்க டெபாசிட் திட்டம்

தங்க டெபாசிட் திட்டம்

வீ.வீ.கே.சுப்புராசு

நீங்கள், தங்க ஆபரணங்களாகவோ அல்லது தங்க நாணயங்களாகவோ, வீட்டில் சேமித்து வைத்திருக்கும் தங்கம் வெறுமனே பீரோவில் முடங்கிக் கிடக்காமல், உங்களுக்கு ஓரளவிற்கு வருமானத்தையும், லாபத்தையும் ஈட்டித்தந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்! ஆம், இதை சாத்தியமாக்கும் முயற்சியில் மத்திய அரசால் கொண்டுவரப்படவிருக்கும் திட்டம் தான் `தங்க டெபாசிட் திட்டம்’ ஆகும்.

இந்தியாவில், ஏறத்தாழ, 20 ஆயிரம் டன் தங்கம் மக்களிடம் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு, 51 லட்சம் கோடி ரூபாய். இவ்வளவு தொகையும் தங்கத்தின் வடிவில், நிதி சந்தைக்கு வராமல், வீடுகளில் முடங்கிக் கிடக்கிறது. இதில் ஒரு பகுதியையாவது நிதி சந்தைக்குள் வரவழைத்து, தொழில் முதலீடுகளுக்கு கிடைக்கச் செய்வது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. அதே போல், வீடுகளில் உள்ள தங்கத்தை சந்தைக்கு கொண்டுவந்து சுழற்சி ஏற்படுத்தினால், தங்க இறக்குமதிக்கான தேவையும் குறையும் என, மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இதில் தங்கம் டெபாசிட் செய்பவர்களுக்கும் நல்ல லாபம் உள்ளது. வங்கிகளில் இந்த திட்டத்தின்படி, தங்கம் டெபாசிட் செய்யப்பட்டால்…

தங்கம் டெபாசிட் செய்யப்படும் நாளில் உள்ள அதற்கான சந்தை மதிப்பின்படி, டெபாசிட் தொகை கணக்கிடப்படும். அதற்கு குறைந்தபட்சம் ஒரு சதவீதம் வட்டி வழங்கப்பட வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இதற்கு மேலும் வங்கிகள் எவ்வளவு வேண்டுமானாலும் வழங்கலாம் என்ற கருத்தும் உள்ளது. வல்லுனர்களின் கருத்துப்படி, 3ல் இருந்து 4 சதவீதமாக வங்கிகள் வட்டி நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.

அதன்படி ஒருவர், 10 சவரன் ஆபரண தங்கத்தை (குறைந்தபட்சம் 30 கிராமாவது டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்பது திட்டத்தின் விதி) சவரனுக்கு 20 ஆயிரம் ரூபாய் என்ற சந்தை மதிப்பில், இந்த திட்டத்தின் படி வங்கியில் டெபாசிட் செய்தால், அவருக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2,000 ரூபாய் வட்டி கிடைக்கும். வங்கிகளின் வட்டி விகித நிர்ணயம் 4 சதவீதமாக இருக்கும் பட்சத்தில் இது 8,000 ரூபாயாக இருக்கும்.

தங்க டெபாசிட் விதிகளின் படி, குறைந்தபட்சம் ஓராண்டிற்கு தங்கத்தை டெபாசிட் செய்ய வேண்டும். அது முதிர்ச்சி அடையும் போது, அன்றைய நிலையில் தங்கத்தின் சந்தை மதிப்பு எவ்வளவு உள்ளதோ அதற்கேற்ப தங்கமாகவோ, ரொக்கமாகவோ திருப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.

எப்படி திருப்பிப் பெற்றுக்கொண்டால் லாபம்?
மேற்குறிப்பிடப்பட்ட உதாரணத்தின் படி, முதிர்ச்சி நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 18 ஆயிரம் ரூபாய் என குறைந்திருந்தால், ரொக்கமாக பெறுவதில் மூலதன நஷ்டம் ஏற்படும். அதனால், அப்போது தங்கமாகவே பெற்றுக்கொண்டால், இந்த திட்டத்தின் விதிப்படி 10 சவரன் தங்கமும், அதற்கு மேலதிகமாக வட்டிக்கான தங்கமும் திருப்பிக் கிடைக்கும். இதுவே தங்கத்தின் விலை சவரனுக்கு 22 ஆயிரம் ரூபாய் என அதிகரித்து இருந்தால், அதை ரொக்கமாக பெற்றுக்கொண்டு, தங்கத்தின் விலை மீண்டும் குறையும்போது, தங்கத்தை வாங்குவது லாபகரமாக இருக்கும். எப்படி பார்த்தாலும் லாபம் தான்.

ஆனால், இதில் ஒரு சூட்சமம் இருக்கிறது. டெபாசிட் செய்யப்பட்ட தங்கத்தை நாம் எப்படி திருப்பிப்பெற விரும்புகிறோம் என்பதை டெபாசிட் செய்யும் போதே குறிப்பிட வேண்டும்! ஆனால், டெபாசிட்டை நீட்டித்துக் கொள்ளும் வசதி உள்ளதால், இதில் உள்ள இழப்பிற்கான வாய்ப்பு பெரும்பாலும் குறைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுவதாக இருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை;
குறைந்தபட்சம் 30 கிராம் தங்கம் டெபாசிட் செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட, ’ஹால்மார்க்’ மையங்களில் இருந்து உங்கள் தங்கத்திற்கான தரச் சான்றிதழை பெற வேண்டும்.
அசல் மற்றும் வட்டி தங்கத்திலேயே மதிப்பீடு செய்யப்படும்.
நீங்கள் கொடுக்கும் தங்கத்தை உருக்கி, நகைக்கடைகளுக்கு விற்கவோ, லீசுக்கு விடவோ வங்கிக்கு அதிகாரம் உள்ளது. அதனால், நீங்கள் கொடுக்கும் ஆபரணங்கள் அப்படியே திருப்பிக் கிடைக்க வாய்ப்பு இல்லை.

எனவே, சிந்தித்து செயல்பட்டு இந்த தங்க டெபாசிட் திட்டத்தில் இணைந்து சிறப்பான வருமானத்தையும், லாபத்தையும் பெற்று உங்கள் வீட்டிற்கும், நமது நாட்டிற்கும் நன்மை செய்யுங்கள்.