ஜி20 – மாநாடு – G20 Summit 2019

ஜி20 – மாநாடு – G20 Summit 2019

இந்தியா உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உலகின் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அங்கம் வகிக்கும் ஜி20 அமைப்பின் 14-ஆவது மாநாடு, ஜப்பானிலுள்ள ஒசாகா நகரில் 2019 ஜூன் 28, 29-இல் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஜி20 அமைப்பின் உறுப்பு நாடான ஜப்பான், இத்தகைய மாநாட்டை நடத்துவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக, ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். இரண்டு நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில், நிலையான சர்வதேச பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், உலகப் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு, புதிய கண்டுபிடிப்புகள், சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி, வேலை வாய்ப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், மேம்பாடு, சுகாதாரம் ஆகிய 8 தலைப்புகள் பற்றி விவாதம் செய்தனர். இவ்வுச்சிமாநாட்டில் இந்தியாவிற்கான ஆயத்தப் பணிகளை முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு மேற்கொண்டார். இதுவரை நடைபெற்ற அனைத்து ஜி20 உச்சிமாநாட்டிலும் இந்தியா பங்கேற்றுள்ளது. 2022-இல் நடக்கவுள்ள ஜி20 உச்சிமாநாட்டை இந்தியா முதல்முறையாக நடத்தவுள்ளது.

ஜப்பான் பிரதமர் அபே – பிரதமர் மோடி சந்திப்பு :

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபேவை ஒசாகா நகரில் 2019 ஜூன் 27 அன்று சந்தித்து, இம்மாநாட்டில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசித்தார். அப்போது, நிதி மோசடியாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தலைமறைவாவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முந்தைய ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியதை நினைவுகூர்ந்த அபே, அது தொடர்பாக இந்த முறை நல்ல முடிவு எடுக்க ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தார். இது தவிர சர்வதேச அளவில் இப்போதுள்ள பொருளாதார சூழல்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்து ஆலோசனை நடத்தினர். ஜப்பான் உதவியுடன் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் புல்லட் ரயில் திட்டம், வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்புப் பணிகள், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, நிதித்துறையை மின்னணுமயமாக்குவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் மோடியும், அபேவும் ஆலோசித்தனர்.

ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் பொருளாதார தடைகள் பற்றி :

கடந்த எட்டு மாதங்களில் ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகள் மட்டுமே 20 புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக உலக வர்த்தக அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் பல்வேறு காரணங்களால் நெருக்கடியான நிலையை எட்டியுள்ளது. இதற்கு நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதார பதற்றமே காரணம் என்று உலக வர்த்தக அமைப்பு கூறியுள்ளது. கடந்த 2018 அக்டோபர் முதல் 2019 மே மாதம் வரையிலான எட்டு மாதங்களில் ஜி20 நாடுகளில் வரி உயர்வு, வர்த்தகத் தடை, சுங்க நடவடிக்கைகளில் கெடுபிடி என 20 புதிய பொருளாதார தடை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதில் முக்கியமானதாக உள்ளவை அமெரிக்கா – ஈரான் மற்றும் அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர். இவை இரண்டும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால் ஜி20 நாடுகளின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் இரண்டுமே வெகுவாகப் பாதித்திருக்கிறது. ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்தி மோடி, இரண்டு முக்கியமான குழுக் கூட்டங்களிலும் பங்கேற்றார். ரஷ்யா – இந்தியா – சீனா முத்தரப்புக் கூட்டம், அதைத் தொடர்ந்து ஜப்பான் – அமெரிக்கா – இந்தியா முத்தரப்புக் கூட்டம்.

பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் இடையிலான சந்திப்பு :

எல்லா ஆசிய நாடுகளும் பொருளாதாரத்தில் தங்களை வளர்த்துக் கொண்டிருப்பதன் பின்னணியில் அவர்களது ஏற்றுமதி காணப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக இந்தியாவின் ஏற்றுமதியில் தேக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வர்த்தகப் போரில் சீனப் பொருள்களின் மீது கடுமையான தடைகளை அமெரிக்கா விதித்திருக்கும் நிலையில், சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்க முற்படுவதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். இந்தப் பின்னணியில்தான் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபரைச் சந்தித்தார். தேர்தலில் மிகப் பெரிய வெற்றியடைந்து இரண்டாவது முறையாகப் பதவிக்கு வந்திருக்கும் பிரதமர் மோடியை, விரைவில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் டொனால்ட் டிரம்ப் சந்தித்தார் என்கிற பின்னணியில்தான் அவர்களது சந்திப்பை அணுக வேண்டும். பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு சுமுகமாகவும், இந்தியாவுக்குச் சாதகமாகவும் இருக்கிறது என்பதைப் பொருத்து, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அமையப் போகிறது. அதானல், ஒசாகா சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

சவூதி இளவரசருடன் சந்திப்பு :

ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இரு தரப்பு வர்த்தகம், முதலீடு, எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலையும் பிரதமர் மோடி ஒசாகா நகரில் சந்தித்துப் பேசினார். அப்போது செயற்கை நுண்ணறிவு, இணையவழி ஊடுருவல்களுக்கு எதிரான பாதுகாப்பு தொடர்பாக இணைந்து செயல்படுவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவில் ரயில்வே துறையை நவீனமயமாக்குவதில் ஜெர்மனியின் ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு உள்ளிட்டவை குறித்தும் மோடி-ஏஞ்சலா மெர்கல் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னையும் மோடி சந்தித்தார். அப்போது வர்த்தகம், பொருளாதாரம், இரு நாட்டு மக்களிடையே தொடர்பை அதிகரிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

பிரிக்ஸ் நாடுகளின் கூட்டம் :

இந்த மாநாட்டையொட்டி, ’பிரிக்ஸ்’ (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற திட்டமிடப்படாத கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங், தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா, பிரேசில் அதிபர் மிஷெல் டெமர் ஆகியோர் பங்கேற்றனர். சர்வதேச அரசியல் சூழல், பாதுகாப்பு, உலக பொருளாதார – நிதி விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து அவர்கள் விரிவாக விவாதித்தனர். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதம் உள்பட உலகம் எதிர்கொண்டுள்ள பொதுவான சவால்களை குறிப்பிட்டதுடன், அதற்கான 5 அகிச அணுகுமுறையையும் முன்வைத்தார். பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட அனைத்து நாடுகளின் முழுமையான ஒத்துழைப்பை பெற வேண்டியுள்ளது. இதற்காக, பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச மாநாட்டை நடத்த வேண்டும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

5 அம்ச அணுகுமுறை :

  • சர்வதேச நிதி அமைப்புகளின் பாரபட்சமான முடிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்வதற்கு, பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் ;
  • சர்வதேச நிதி, வர்த்தக அமைப்புகளில் அனைத்து நாடுகளின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் தேவையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
  • நிலையான பொருளாதார வளர்ச்சிக்காக, கச்சா எண்ணெய், எரிவாயு போன்றவை குறைந்த விலையில் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • பிரிக்ஸ் நாடுகளால் நிறுவப்பட்ட வளர்ச்சி வங்கியானது, உறுப்பு நாடுகளின் உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து முதலீடுகளை வழங்க வேண்டும்.
  • பேரிடர் மீள்கட்டமைப்புக்கான சர்வதேச கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியை இந்தியா முன்னெடுத்துள்ளது. இந்த கூட்டமைப்பில் பிரிக்ஸ் நாடுகள் இணைய வேண்டும்.

இதுவரை நடைப்பெற்ற ஜி 20 – மாநாடுகள் :

Advertisement
Tagged with