பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவுகள்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவுகள்

இந்தியப் பொருளாதார வரலாற்றை பிரதமர் மோடியின் 2016 நவம்பர் 8 அறிவிப்பு பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு, பணமதிப்பு நீக்கத்திற்கு பின்பு என இரண்டாகப்பிரித்து விட்டது. நீண்டகால அடிப்படையில் தொலை நோக்குப்பார்வையுடன் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பலன்களை 100 நாட்களுக்குள்ளாகவே மதிப்பிடுவதென்பது பொருத்தமற்றதாகவே இருக்கும். அதேசமயம் அந்நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட உடனடி விளைவுகளும் புறக்கணிக்கத் தக்கவையல்ல.

கருப்புப்பண ஒழிப்பு, கள்ளநோட்டு ஒழிப்பு, தீவிரவாதிகளுக்கு பணம் செல்வது தடுப்பு, வரி ஏய்ப்பு தடுப்பு ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டு 2016 நவம்பர் 8 அன்று பணமதிப்பு நீக்க அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டவுடன் புழக்கத்திலிருந்த 14.5 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் அதாவது புழக்கத்திலிருந்த 86 சதவிகித ரூபாய் நோட்டுக்கள் வெற்றுக்காகிதங்களாக விட்டன. திடீரென அறிவிக்கப்பட்ட இந்நடவடிக்கை கருப்புப்பணம் வைத்திருந்தவர்கள், முறைகேடானவழிகளில் சொத்து சேர்த்தவர்கள், கள்ளநோட்டு அச்சடித்தவர்கள் மட்டுமின்றி சம்பாதித்து சிறுகச்சிறுக பணம் சேர்த்து வைத்திருந்த சாமானியர்களுக்கும் ஒருவித பதட்டத்தினை ஏற்படுத்தி அவர்களை உடனடியாக வங்கிகளை நோக்கி படையெடுக்கச் செய்துவிட்டது. வங்கிப்பரிமாற்றங்களுக்கு அவ்வப்போது புதிய கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். உண்மையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எத்தகைய இலக்கினைக் கொண்டதாயிருப்பினும் அது நடைமுறை படுத்தப்பட்டவிதம் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. துல்லியமாக திட்டமிடப் படாததால் தற்காலிக குழப்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் வித்திட்டுவிட்டது. திடீரென பணப்புழக்கம் குறைந்ததாலும் புதிதாக வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை 500 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்ததாலும் கடுமையான சில்லரைத் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாயினர். போதிய ரூபாய் நோட்டுக்கள் புதிதாக அச்சிடப்பட்டு வெளியிடப்படாததால் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்தவர்கள் அரசு அறிவித்த குறைந்தபட்ச பணத்தைக் கூடத் திரும்பப் பெற இயலவில்லை. வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் நீண்டவரிசையில் காத்துகிடந்தனர். ஆனால் பெரும் பணக்காரர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தாராளமாகப் புதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைத்தன என்பதை வருமான வரித்துறையினரின் சோதனைகளே பட்டவர்த்தனமாக்கியது.

இதுதவிர கமிஷனுக்கு ரூபாடீநு நோட்டுக்கள் மாற்றித்தரப்படுகிறது என பா.ஜ.கவின் மூத்தத்தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன் சுவாமியே குற்றம் சாட்டினார். 2017 ஜனவரியிலிருந்து இப்பிரச்சனைகள் படிப்படியாக சீரடைந்து வருகின்றன. ஆனால் திடீரென ஏற்பட்ட தற்காலிகப் பணத்தட்டுப்பாட்டால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு வரை 2016-17 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 முதல் 8 சதவிகிதம் வரை இருக்கும் எனப்பல்வேறு அமைப்புகளும் கணித்து வந்தன. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பிறகு பொதுமக்களின் நுகர்வு குறைந்தது, தொழில் நிறுவனங்களின் உற்பத்தி சரிவடைந்தது உள்ளிட்டப்பல்வேறு காரணங்களால் இந்திய அரசு உள்பட பல்வேறு அமைப்புகள், 2016-17 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.8 முதல் 7.1 சதவிகிதம் வரை மட்டுமே வளர்ச்சிகாணும் என தங்களின் கணிப்பை குறைத்துள்ளன. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறை வளர்ச்சி 44 சதவிகிதம் சரிவடைந்துள்ளன. மோட்டார் வாகன விற்பனையும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

அத்தியாவசியத் தேவைகளைத் தவிர இதர அனைத்து பொருட்களின் விலையும் பலமடங்கு குறைந்துள்ளன. வங்கிகளில் ஏராளமான தொகை கையிருப்பில் இருப்பினும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கும் போக்கு எதிர்பார்த்தஅளவு அதிகரிக்கவில்லை எனக் கருதப்படுகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட பணப்புழக்கத்தட்டுப்பாட்டுச் சூழலை ஒரு அரியவாய்ப்பாகக்கருதி மின்னணுப் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கப் பல்வேறு சலுகைகளை அறிவித்த போதிலும் அதுகுறித்த போதுமான புரிதல் மக்களுக்கு இல்லாததாலும் மின்னணுக் கருவிகளின்மையாலும் எதிர்பார்த்த அளவிற்கு மின்னணுப் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறவில்லை. ஆனால் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. பிரதமர் மோடி 2017 ஜனவரியில் நடைபெற்ற ‘துடிப்பான குஜராத் எனும் குஜராத் மாநில முதலீட்டாளர் மாநாட்டில் உரையாற்றிய பொழுது, Democracy, Demography, Demand(3D) ஆகியவையே இந்தியாவின் பலம் எனக் குறிப்பிட்டார். ஆனால் அவரின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூன்றில் ஒன்றான இந்திய சந்தையின் தேவையை (Demand) கிட்டத்தட்ட முடக்கிவிட்டிருக்கிறது எனலாம். உலகில் அதிவேகமாக வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தை தற்காலிகமாக பணமதிப்புநீக்க நடவடிக்கை தேக்கமடையச் செய்து விட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமலிலிருந்தபோது பணமதிப்பு நீக்கப்பட்ட 14.5 லட்சம் கோடியில் முறையான வழிகளில் சம்பாதிக்காத, கணக்கில்வராத பணம் குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி அளவிற்காவது இருக்கும் அவை வங்கிகளுக்குத் திரும்பவராது. அதன்மூலம் அரசிற்கு 2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டது. ஒருவேளை இந்தியப்பொருளாதாரத்தின் வளர்ச்சி இந்நடவடிக்கையினால் ஒரு சதவிகிதம் குறைந்தால்கூட இந்த 2 லட்சம் கோடியைக் கொண்டு அதனை ஈடு செய்துவிடலாம் என அரசு கணித்திருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிடிலும் 14 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய்நோட்டுக்கள் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டன எனக் கணிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளவையும் பல்வேறு வழிகளில் வங்கிகளுக்குத் திரும்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்பார்த்த 2 லட்சம் கோடி வருவாய் இல்லாமல் போனது. மேலும் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் சற்றேறக்குறை ஒரு சதவிகிதம் அளவிற்கு குறைய வாய்ப்புள்ளதால் சுமார் Rs.1.3 லட்சம் கோடிகளை (இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு சற்றேறக்குறைய Rs.130 கோடி) இந்தியா இழந்துள்ளது. இத்துடன் கூடுதலாக புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க மற்றும் அவற்றினை ஆங்காங்கு கொண்டு செல்லவும் பெரிய அளவிலான நிதி விரயமாகியிருக்கும். ஆக மொத்தத்தில் சுமார் 2 லட்சம் கோடி அரசுக்கு நட்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என பொருளாதார அறிஞர்கள் கருதுகின்றனர். மேலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் சிறு குறு நிறுவனங்களும் முறைப்படுத்தப்படாத தொழில்களும் மோசமான பாதிப்புகளை சந்திக்கும் எனவும், பெரு நிறுனங்கள் நல்ல பலன்களை பெறும் எனவும் அசோசெம் கருத்து தெரிவித்துள்ளது.

இத்தகைய பாதிப்புகள் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருந்தாலும் சில நேர்மறையான விளைவுகளும் ஏற்படத் துவங்கியுள்ளதையும் நாம் பார்க்க வேண்டும். குறிப்பாக நேர்முக வரி வசூலானது 12 சதவிகிதமும் மறைமுக வரிவசூலானது 25 சதவிகிதமும் முன்கூட்டியே செலுத்தப்படும் வரியானது 14 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. மேலும் இதுநாள்வரை வங்கிக் கணக்கு துவங்காதவர்கள் வங்கிக் கணக்கின் அவசியத்தினை உணர்ந்து துவங்க முனைந்துள்ளனர். வங்கி வழிப்பரிவர்த்தனையின் முக்கியத்துவம் உணரப்பட்டு அதிகரித்துள்ளது. மின்னணுப் பணப்பரிவர்த்தனை படிப்படியாக வளர்ந்து வருகின்றது.

வருமானவரிக் கணக்குத் தாக்கல் செய்யும் மனப்பான்மை பெருகியுள்ளது. சரியாகக் கூற வேண்டுமாயின் வேகமான வளர்ச்சி கண்டுவரும் இந்தியப் பொருளாதாரம் அதிக அளவிலான வங்கிப் பரிவர்த்தனைகள், மின்னணு பணப்பரிவர்த்தனை என நவீன மயமாக்கப்பட்டுள்ளது. ஒரு நாணயத்திற்கு இருவேறு பக்கங்கள் இருப்பதைப்போன்று தற்பொழுதுவரை பணமதிப்பு நீக்க நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்திற்கும், பொதுமக்களுக்கும் இன்னல்களைக் கொடுத்திருந்தாலும் இனிவரும் காலங்களில் அதன் நோக்கங்களை நிறைவேற்றும் என்பதே பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/5/d790946132/htdocs/exammaster.co.in/wp-content/plugins/slickquiz/php/slickquiz-front.php on line 59