கார்டோசாட் – 3 செயற்கைக்கோள்

கார்டோசாட் – 3 செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-ஆவது ஏவுதளத்திலிருந்து, PSLV–C 47 ராக்கெட் 2019 நவம்பர் 27 அன்று ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் இந்தியாவின் ’கார்டோசாட்-3 உள்பட 14 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. ராக்கெட் ஏவப்பட்ட 18 நிமிடங்களில் அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்களும் அடுத்தடுத்து வெற்றிகரமாக பிரித்து விடப்பட்டன. முதலில் தகவல் தொடர்புக்கு உதவும் செயற்கைக்கோள் (மெஷ்பட்) பிரித்துவிடப்பட்டது. அதன் பின்னர் மீதமுள்ள அமெரிக்காவின் புவிகண்காணிப்புக்கான 12 செயற்கைக்கோள்களும் அடுத்தடுத்து பிரித்துவிடப்பட்டன. திட்டமிட்டபடி புவியிலிருந்து 509 கி.மீ தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் நுழைக்கப்பட்டுள்ளன.

இந்த ’கார்டோசாட்-3 செயற்கைக்கோள் இதுவரை இஸ்ரோ உருவாக்கிய செயற்கைக்கோளைக் காட்டிலும் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் என்பதோடு, மிகத் தெளிவாகப் படம் பிடிக்கும் திறன் கொண்டதாகும். இந்தத்திட்டத்தைத் தொடர்ந்து, 2020 மார்ச் வரை 13 ராக்கெட் திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. இதில் 6 ராக்கெட் திட்டங்களும், செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் 7 திட்டங்களும் அடங்கும்.

கார்டோசாட்டின் முக்கியத்துவம் :

முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன ’கார்டோசாட்-3 செயற்கைக்கோள், இந்தியா அனுப்பிய கார்டோசாட் செயற்கைக்கோள் தொடரில் 9-ஆவது செயற்கைக்கோளாகும்.

இதுவரை கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 8 கார்டோசாட் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இவையனைத்தும் புவியை மிகத் துல்லியமாக அளவிட்டு படம் பிடித்து அனுப்பும் திறன் கொண்டவை.

ஆனால், இப்போது அனுப்பியிருக்கும் 5 ஆண்டுகள் செயல்படக்கூடிய கார்டோசாட்-3 செயற்கைக்கோளில் புவியை 25 செ.மீ இடைவெளி துல்லியத்தில் அளவிடும் வகையில் திறன்கொண்ட அதிநவீன தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் வானில் மேகக்கூட்டங்கள் இருக்கும் போதும், இரவு நேரத்திலும் மிகத் தெளிவான புகைப்படங்களை நாம் பெறமுடியும்.

இந்த செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு, கிராமப்புற மற்றும் நகர்புற திட்டமிடலுக்கு உதவிகரமாக இருக்கும் என்றாலும், இது பெரும்பாலும் பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்காகவே பயன்படுத்தப்பட உள்ளது.

PSLV–C47  ராக்கெட் சதீஷ்தவன் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஏவப்படும் 74-ஆவது ராக்கெட் திட்டம் என்பதோடு, இஸ்ரோ ஏவிய 49-ஆவது PSLV  ராக்கெட் ஆகும்.

குலசேகரப் பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் தற்போது 2 ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. இந்த ஏவுதளங்களில் இருந்துதான் பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் ஒரு ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கு தகுந்த இடமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப் பட்டினத்தை தேர்வு செய்தது. அதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. ஏவுதளம் அமைக்க தூத்துக்குடியில் 2300 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகளை தற்போத இஸ்ரோ தொடங்கியுள்ளது. இந்த ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தை விட சிறியது.

குலசேகர பட்டினத்தை தேர்ந்தெடுத்தற்கான காரணம் :

நேராக தெற்கு நோக்கி ராக்கெட்டை ஏவுவேண்டுமென்றால், ஏவுதளம் தமிழகத்தின் மையப்பகுதி கடற்பகுதியில் இருந்தால்தான் சாத்தியப்படும்.

அவ்வாறு பார்க்கும்போது குலசேகரப்பட்டினம் சரியான இடமாக உள்ளது.

தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேராக தெற்கு நோக்கி ராக்கெட்டை ஏவ முடியவில்லை.

மற்றொரு முக்கிய காரணம் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ உந்து விசை அமைப்பு மையமாகும்.

இது பிஎஸ்எல்வியின் 2-ஆம் மற்றும் 4-ஆம் நிலை இன்ஜின்களை ஒருங்கிணைக்கிறது.