அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு – Assam National Register of Citizens

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு – Assam National Register of Citizens

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில், அஸ்ஸாமிகள் மற்றும் அஸ்ஸாமியர்கள் அல்லாதவர்கள் என்ற பிரச்சினை இப்போது உருவானதல்ல. 1950-இல் கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசம்) இருந்து அகதிகள் அதிக எண்ணிக்கையில், அஸ்ஸாமுக்கள் வரத் தொடங்கியதிலிருந்தே இப்பிரச்சினை உருவெடுத்து வருகிறது. 1970-இல் இப்பிரச்சினை தொடர்பாக பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன.

அந்த தருணத்தில் அனைத்து அஸ்ஸாம் மாணவர் ஒன்றியம் (AASU- All Assam Students Union) மற்றும் அனைத்து அஸ்ஸாம் கன சங்கம் பரிஷத் (AAGSP – All Assam Gana Sangam Parishath) தலைமையில் அஸ்ஸாம் கிளர்ச்சி இயக்கமானது, அஸ்ஸாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடித்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தியது. இந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, சட்டவிரோதமாக அஸ்ஸாமிற்குக் குடிபெயர்ந்தவர்களை வெளியேற்றும் நோக்கத்திலான ஒப்பந்தத்தில் 1985-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி கையெழுத்திட்டார். பெருமளவிலான வங்கதேச மக்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியது தொடர்பாக பல போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், மத்திய – மாநில அரசுகள் மற்றும் கிளர்ச்சியில் ஈடுபட்ட மாணவர் அமைப்புகளுக்கும் இடையே 1985-இல் உடன்படிக்கை ஏற்பட்டது. அந்த உடன்படிக்கையில், 1971 மார்ச் 24-க்குப் பிறகு, அஸ்ஸாம் மாநிலத்தில் குடியேறுபவர்கள் ‘சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்கும் பணி 2010-இல் தொடங்கப்பட்டது. ஆனால் அப்பொழுது நடைபெற்ற வன்முறைகள் காரணமாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னர் 2015-ஆம் ஆண்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. அந்தப் பணியை உச்சநீதிமன்றம் கண்காணித்து வந்தது. இதன் வரைவுப் பட்டியலின் ஒரு பகுதி, கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று வெளியானது அதில் 1.9 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியலின் முழு வரைவுப் பகுதியும் வெளியிடப்பட்டது. அதில் 2.9 கோடி பேர் இந்திய குடிமக்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 40 லட்சத்துக்கும் அதிகமானோரின் பெயர்கள் விடுபட்டிருந்தன. இதன் பின்னர் 2019 ஜூன் மாதம் கூடுதல் வரைவுப் பகுதி வெளியிடப்பட்டது. அதில் மேலும் 1.02 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருந்தன. இந்த இரண்டையும் சேர்த்து, மொத்தம் 41 லட்சத்துக்கும் அதிகமானோரின் பெயர்கள், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டிருந்தன. இதைத் தொடர்ந்து, வரைவுப் பட்டியலில் பெயர்கள் இல்லாத 41 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதன்படி, வரைவுப் பட்டியலில் பெயர்கள் இல்லாதோர் அதில் சேர்க்கக் கோரி மீண்டும் விண்ணப்பித்தனர். இதை ஆய்வு செய்து விடுபட்டவர்கள் இந்தியர்கள்தானா என்பது உறுதி செய்யப்பட்டு மீண்டும் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியல் 2019 ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட்டது. 3 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரத்து 661 பேர், என்ஆர்சி-யில் பெயர் சேர்க்கவேண்டி விண்ணப்பித்தனர். அவர்களில் 3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து 4 பேரின் பெயர்கள், என்ஆர்சி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேரின் பெயர்கள் அப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. என்ஆர்சி இறுதிப் பட்டியலில் பெயர் இல்லாதோர், வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களால் (குடிசநபைநேசள கூசரைெயேட) முடிவு அறிவிக்கப்படும் வரை வெளிநாட்டவராக அறிவிக்கப்பட மாட்டார்கள் என அஸ்ஸாம் மாநில அரசு தெரிவித்துள்ளது. எனவே என்ஆர்சி இறுதிப் பட்டியலில் பெயர் இல்லாத நபர்கள் இந்த முடிவை எதிர்த்து வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களில் 120 நாள்களுக்குள் முறையீடு செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய முஸ்லீம்களின் பெயர்கள் அப்பட்டியலில் உள்ளதாகவும், அஸ்ஸாம் பூர்வகுடி மக்கள் ஏராளமானோரின் பெயர்கள் விடுபட்டுள்ளன எனவும் தற்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. மேலும் என்ஆர்சி பட்டியல் தயாரிக்கும் பணி முழுமையும் உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடைபெற்றும் நேர்மையான குடிமக்கள் பலரின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பதும் முக்கிய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.