72 ஆயிரம் பேரின் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம்

72 ஆயிரம் பேரின் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரம் பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தச் சான்றிதழ்கள் புதன்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டு தாள்களிலும் சேர்த்து 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவருக்குமான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதோடு, அதற்கு முந்தைய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளாத 180 பேரின் தகுதிச் சான்றிதழ்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களது பதிவெண்ணை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, சான்றிதழில் இடம்பெறும் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அவற்றைச் சரிபார்த்தவுடன் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சான்றிதழ்கள் ஒரு வாரம் வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருக்கும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.