முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் : 3 – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் : 3 – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

உனக்குள் இருக்கும் தளபதியைக் கண்டுபிடி

போர் தந்திரம் 2

நீ ஏற்றுக்கொண்டாலும், இல்லை என்றாலும் வாழ்க்கை என்பது ஒரு போர்களம் தான். ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும், படிப்பாளியாக இருந்தாலும், படிக்காதவனாக இருந்தாலும் தினமும் போர் புரிந்துதான் ஆக வேண்டும். ஆனால் இந்த வாழ்க்கைப் போரின் இறுதியில் மரணம் என்பது உறுதி. மரணம் வரை போராடுபவனுக்குத் தான் வெற்றி கிடைக்கும். நல்ல போர் வீரனுக்கு தினம், தினம் வெற்றிதான், இறுதியில் வெற்றி மீது வெற்றி பெற்று வீரமரணம் அடைவான். போரிடத் தயங்குபவன் தோல்வி மேல் தோல்வியுற்று அவமானப்பட்டு தலைகுனிந்து மரணத்தைத் தழுவுவான். இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களின் பிணங்கள்தான் சரித்திரத்தில் குவிந்து கிடக்கின்றன. அதாவது போரிட தயங்கியவர்கள் வாழவே இல்லை!

ஒரு போட்டித் தேர்வில் கலந்து கொள்ள முடிவு செய்த நீங்கள் ஒரு போர்வீரர் தான் என்பதில் ஐயமில்லை. வெற்றி தோல்வியை பற்றி வீரன் கவலைப்படமாட்டான். தோல்விகளிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் அவமானத்திலிருந்தும் அவன் நல்ல பாடம் பயில்வான். பின் நடக்கும் போரில் புது யுக்திகளைக் கையாண்டு வெற்றி அடைவான். தோல்வியும் வெற்றியும் மாறி மாறி வருவதை அவன் ஒரு இயல்பான, இன்னும் சொல்லப்போனால், ஆரோக்கியமான வாழ்க்கையாகத்தான் கருதுவான்.

ஒரு போர்ப் படைத் தளபதியின் முதல் படைபலமே அவன்தான். போரில் தளபதியின் வீரம், விவேகம் மற்றும் போர் தந்திரம் ஆகியவற்றைப் பொறுத்தே வெற்றி அமையும். ஒரு நல்ல தலைமை ஆசிரியர் அமைந்த பள்ளிக்கூடம் ஒரு நல்ல பல்கலைக்கழகம் போல் செழித்து வளரும். ஒரு நல்ல குடும்பத்தலைவன், போர்க்குணம் உள்ளவன் என்றால், அந்தக் குடும்பம் செழித்து வாழும்.

உனது வாழ்க்கைப் போரின் தளபதி நீ தான். அது வேறு எவரும் இல்லை. படைபலத்தின் பாதி பலம் அந்த படைத் தளபதியின் பலம் தான்.

உனது பலம், பலவீனம், அமைந்த வாய்ப்புகள், உனக்கு இருக்கும் ஆபத்துக்கள், அனைத்தையும் ஆராய வேண்டும். சுய ஆராய்ச்சிகள் உண்மையுள்ளதாக இருத்தல் வேண்டும். இதைத்தான் SWOT analysis என்கிறார்கள் மேலாண்மை வல்லுநர்கள்.

S – Strength; W – Weakness; O – Opportunity; T – Threat.

ஒரு மனிதனை மூன்று பரிமாணத்தில் பார்க்கலாம்.
ஒருவனை மற்றவர்கள் எப்படி காண்கிறார்கள்? (பலர் பலவிதமாகக் காணக்கூடும்).
ஒருவனை அவனே எப்படி காண்கிறான்? (பல வேளைகளில் பல விதமாகக் காணலாம்).
ஒருவன் உண்மையிலேயே யார்? (இது கிட்டத்தட்ட நிரந்தரமானது).

நீ உன்னைக் காண்பது நீ உண்மையிலே யார் என்பதை ஒட்டி இருக்குமானால், மற்றவர்கள் உன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதற்கும், நீ உன்னைப்பற்றி எப்படி நினைக்கிறாய் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது, மற்றவர்கள் ஏன் இப்படி மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள் என்று எண்ணத் தோன்றாது. அல்லது, ஏன் எனக்கு தகுதிக்கு மீறி இவ்வளவு பெரிய அங்கீகாரம் தர வேண்டும் என்றும் தோன்றாது.

உனது பலங்களையும் பலவீனங்களையும் சரியாக நீ தெரிந்திருந்தால் உனது செயலுக்கும் உனது சிந்தனைக்கும் அதிக வேற்றுமை இருக்காது. நான் உண்மையுள்ளவன் என்று நினைத்துக் கொண்டு பல பொய்களைச் சொன்னால் அது மனக்குழப்பத்தை ஏற்படுத்தும். நான் ஒரு சிறந்த உழைப்பாளி என்ற எண்ணம் கொண்டவன் கொஞ்சம் கூட பல்கலைக்கழக தேர்விற்கு படிக்காமல் இருந்தால் அது நினைப்பிற்கும் செயலுக்கும் முரண்பாடு ஏற்படுத்தி மனநிலையை குலைத்துவிடும். Walk the Talk என்பது மனநிலை ஆரோக்கியத்திற்கு அவசியம் ஆகிறது.

போருக்குத் தயாராகும் நீ உன்னிடம் என்ன உள்ளது என்பதை ஆராய வேண்டும். ஏன், உனது ஆற்றல்களைத் துல்லியமாகக் காணவேண்டும் என்றால், எல்லாத் திறமைகளையும் பயிற்சி மூலம் கூர்மையாக்க முடியும் என்பது தான்.

உடல் நலம் (Physical Health) ஒரு படைபலமாக உள்ளது. அது மிகப்பெரிய வலிமை வாய்ந்தது. 6 அடி நீளமுள்ள உடல் அல்ல என்றாலும் நோயில்லாத உடலாக இருக்கிறது. அளவான உணவு, உடற்பயிற்சி, ஓய்வு ஆகியவற்றை மேற்கொண்டு நான் நலம் மிக்க உடலைப் பேணுவேன் என்ற சபதம் எடுக்க வேண்டும்.
சராசரி அறிவுக் கூர்மை எனக்கு உள்ளது. அதை பல நூல்களைப் பயின்றும், பேசியும், எழுதியும் எனது அறிவுக் கூர்மையை மேம்படுத்துவேன் என்ற உறுதிமொழி செய்துக்கொள்ள வேண்டும்.

எனக்கு ஞாபகசக்தி சராசரிதான், ஆனால் ஞாபக சக்தி பயிற்சி மூலம் நான் பெயர்கள், தேதி, எண்கள், ஆகியவற்றை மனதில் நிறுத்துவேன். அடுத்த சத்தியம் செய்து கொள்ளுங்கள்.
முயற்சியில் தோல்வியுற்றால் நான் மனம் சோர்ந்து விடுகிறேன்! ஆனால் அப்படியே விழுந்து கிடக்காமல் மீண்டும் எழுந்துவிட பயிற்சி மேற்கொள்வேன் …..

ஏழைகளுக்கு உதவும் குணம் என்னிடத்தில் அதிகம் உள்ளது. எனவே நான் மற்றவர்களுக்கு உதவும் வகையில் பொருளாதாரம், கல்வி, தொழில்நுட்பம் ஆகியவற்றில் பலம் படைத்தவனாக வேண்டும். விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு இது தெரியும், அங்கு வரும் அறிவிப்பில், ஒரு அவசர சூழ்நிலையில் (Emergency) முதலில் நீங்கள் உங்களுக்கு Oxygen Mask மாட்டி உங்களால் சுவாசம் விடும் நிலை வந்த பிறகு அடுத்த Oxygen Mask ஐ மற்றவர்களுக்கு பொருத்துங்கள் என்பது இதற்காகத்தான். பொருள் இல்லாதவன் எப்படி பொருள் உதவி செய்ய முடியும்? இன்று எனது பொருளாதார பலம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறவர்கள், நம்மிடம் என்ன இல்லை என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.

ஒரு நல்ல போர் வீரன் தம்மிடம் இல்லாதவற்றை இருக்கிறது என்று நம்பமாட்டான். நம்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை, ஏனென்றால் இல்லாதவற்றை ஏற்படுத்திக் கொள்ள அல்லது அவற்றை அடைய அவனிடம் போர் யுக்தி முறைகள் உண்டு.

வெற்றி பெற்றவர்களிடம் அப்படி என்ன தான் இருக்கிறது? ஒரு போர் வீரன் இதைப்பற்றி அதிக நேரம் சிந்திப்பான். ஒரு போர் வீரனிடம் கண்டிப்பாக கீழ்கண்டவை நிச்சயமாக இருக்கும்.
சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது.
வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது.
வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.
அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.
அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது.
வாய்ப்பு எங்கே என்று தேடுகிற தாகம் இருக்கிறது.
வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது.
உணவு, உறக்கம் இவற்றைக் கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது.
தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராளமனம் இருக்கிறது.
அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது.
தங்கள் தகுதிக்கும் திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்ற தேடல் இருக்கிறது.
தொடர்ந்து எந்த வகையிலாவது ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது.
சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்து போகும் அடக்கம் இருக்கிறது.
விமர்சனத்தை சரியான விதத்தில் எடுத்துக் கொள்ளும் விவேகம் இருக்கிறது.
அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் மூளை இருக்கிறது.
குறிக்கோளுடன் கூடிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது.
கடமைகள் காத்துக் கிடக்க, பொழுது போக்குகளில் புத்தியைச் செலுத்தாத பொறுப்பு இருக்கிறது.
நேற்றை விட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆற்றல் இருக்கிறது.
அனைத்துக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது.

இந்த வரிகளை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவரின் தெளிவான கருத்துகள் போற்றப்பட வேண்டும்.

இவை அனைத்தும் உன்னிடம் இருக்கிறது. ஆனால் இந்தப் போர்க் குணங்களைக் கண்டுபிடிப்பது முதல் அவசியமாகிறது. பின்னர் இவ்வரிய குணங்களை ஒரு கத்தியைத் தீட்டுவது போல தீட்டி கூர்மையாக்க வேண்டும்.

தனக்குள் மறைந்து கிடக்கும் அரிய பல போர்க் குணங்களை கண்டுபிடிக்காதவன், அல்லது கண்டு கொள்ளாதவன், எக்காலத்திலும் ஒரு போர் வீரனாக முடியாது. அவன் ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்து செல்வத்தில் கொழித்தாலும் அவனால் போர் புரிய முடியாது. அவன் போர் புரியும் முன்னரே தோற்கடிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முன்னோர்களின் சொத்துக்களை அந்த முன்னோர் கண்முன்னே அவன் பாழடித்து விடுவதை அவர்கள் காணவும் கூடும். போரிடாமலே மாண்ட பலரின் பிணங்கள் தான் பூமியில் அதிகமாகக் குவிந்து கிடக்கின்றன.

ஒருவர் ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து, நீ எத்தனை ஆண்டுகளாக அந்த பெட்டியின் மீது உட்கார்ந்து பிச்சை எடுக்கிறாய்?” என்று கேட்டார். 25 ஆண்டுகளாக”, என்ற அவனிடம் இந்த மரப்பெட்டியை என்றாவது திறந்து பார்த்தாயா?” என்று கேட்க, இல்லை சார்”, என்றான் அவன். அதில் என்ன இருக்கிறது என்று தெரியுமா?” தெரியாது, ஆனால் ஒன்றுமே இருக்காது. நான் 25 ஆண்டுகளாக அதன் மீது தானே உட்கார்ந்து இருக்கிறேன்?” என்றான். திறந்து பார்”, என்றபோது அவன் திறந்து பார்த்தால் அதற்குள் முழுவதும் தங்கக் காசுகள். இத்தனை ஆண்டுகளாக தங்கக் காசு குவியல் மீது அமர்ந்துதான் பிச்சை எடுத்திருக்கிறான்..!

இளைஞர்களே! தங்கக் குவியல் மீது இருந்து பிச்சை எடுப்பது எவ்வளவு பெரிய குற்றம்?
உங்களுக்குள் கிடக்கும் தங்கக்குவியல்களை என்றாவது எட்டிப் பார்த்திருக்கிறீர்களா?
உங்களை ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் விலைமதிப்பற்ற எல்லையில்லா போர்க்குணங்களை உடனே கண்டு பிடியுங்கள். உங்களது பிற உயர்ந்த குணங்கள், ஆற்றல்கள், குறைபாடுகள், சுற்றம் சூழல், வாய்ப்புகள், ஆதரவுகள், எதிர்ப்புகள், எதிரிகள், ஆபத்துகள் ஆகியவற்றை பட்டியலிடுங்கள். இவைகள்தான் உங்கள் தளவாடங்கள்.

உன்னிடம் உள்ள போர்க்குணங்களைக் கூர்மைப்படுத்தி உருமாறுங்கள். அறிவு, சிந்தனை, மனப்பாங்கு, உணர்ச்சி ஆகியவற்றை செழுமையாக்கி ஒரு போர்த்தளபதியாக உருவெடுங்கள். வெற்றிக்கான இரண்டாவது போர்தந்திரம் இதுதான்….
போர்ப்படைத்தளபதியாக அவதாரம் எடுங்கள்.

– அடுத்த இதழில் சந்திப்போம்…

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of