பொருளாதார தேக்கநிலை

பொருளாதார தேக்கநிலை

– வீ.வீ.கே. சுப்புராஜ்

2019 டிசம்பரில் சில்லரைப் பணவீக்கம் 7.35 சதவீதம், நாட்டின் GDP என்று சொல்லக்கூடிய ஒட்டுமொத்த வளர்ச்சி 2019-2020-இல் 5 சதவீதத்திற்கும் கீழ், மேலும் வேலையின்மை நாளுக்கு நாள் அதிகரிக்கும் அதிகரிப்பு, தொழிற்சாலைகளில் ஆட்குறைவு, வேலை நாட்கள் குறைப்பு ஆகிய அனைத்தையும் ஒட்டு மொத்தமாக ஒரு தளத்தில் வைத்து நோக்கும் போது, இந்தியப் பொருளாதாரம் ஒரு தேக்கநிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதோ என்ற எண்ணம் வலுக்கிறது.

இந்தியப் பொருளாதாரம் 2018-ஆம் ஆண்டிலிருந்து ஆறு காலாண்டுகளில் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. 2019 செப்டம்பரில் முடிவுற்ற காலாண்டில், பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக இருந்தது என்பது கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம். இந்த நிலைக்கு மக்களிடையே போதுமான தேவை இல்லாததே காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கடந்தகாலங்களில் ஏற்பட்ட வெகுமிதமான பணவீக்கத்திலிருந்து இந்த நிலையைப் புரிந்து கொள்ளலாம். வங்கிகள் தாராளமாகக் கடன்கள் வழங்கியும் இந்த நிலை என்றால், மக்களிடையே அதுவும் குறிப்பாக ஊரகப்பகுதிகளில் தேவை இல்லை. பொதுமக்கள் வங்கிகளிலிருந்து எளிதாகக் கடன் பெறும் பொருட்டு, மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 5 முறைகள் கடந்த ஆண்டு (2019) குறைத்துள்ள போதிலும், வங்கிக் கடன்கள் வாங்குதல் தொய்வான நிலையிலேயே உள்ளது.

வட்டி விகிதங்கள் இவ்வளவு குறைக்கப்பட்டும், கடன்தேவைகள் இல்லாததும் குறைந்த தேவைகளும், உற்பத்தி வீழ்ச்சியும் இந்தியப் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்துவிட்டதோ என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஆனால் அந்த நிலை ஏற்படவில்லை என்பதை உணவுப் பணவீக்கத்தை நீக்கிவிட்டு மையப்பணவீக்கத்தை (Core inflation) மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், தேக்கநிலை இல்லை என்று மனநிறைவைப் பெறலாம். மையப்பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த விகிதத்திலேயே அடங்கி உள்ளது.

பொருளாதாரத் தேக்கநிலை என்பதை நியூசிலாந்தைச் சேர்ந்த ‘வில்லியம் பிலிப் என்பவர் தனது கிராபிக்ஸ் வளைவு மூலமாக உலகிற்கு விளக்கினார். தேக்கநிலை, அமெரிக்காவில் 1970-இல் ஏற்பட்டது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்ததே காரணம். அதுசமயம் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் எண்ணெய் விற்பனையை நிறுத்திவிட்டன.
தேக்கநிலையிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில், ரிசர்வ் வங்கி மேலும் வட்டி வீதத்தைக் குறைத்தால், பணவீக்கம் தற்போதைய 2-6 சதவீதத்திலிருந்து இன்னும் உயரும். இது மேலும் பிரச்சினைகளை உருவாக்கும். வாங்கும் திறன் அதிகரித்தாலும், அதிக விலை கொடுக்க வேண்டி வரும். கடன் கொடுத்து தேவைகளை உருவாக்குவது சரியான பொருளாதாரத் தீர்வு அல்ல.

வேலையின்மை அதிகரித்துக் காணும் இந்த நிலையில் உற்பத்தியைப் பெருக்க வழிவகைகளை ஏற்படுத்த வேண்டுமேயொழிய, வெறுமனே கடன்களை அள்ளிவிடுவது மோசமான நிலைமையை மேலும் மோசமாக்கும் பெயரளவிலான இந்தியப் பொருளாதார வளர்ச்சி (Nominal GDP ) 42 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு 7.5 சதவீதம் என்று குறைந்துள்ளது. பணவீக்கத்தைக் கழித்துப் பார்த்தால், உண்மையான GDP 2.5 சதவீதம் என்ற அளவிலேதான் இருக்கும். கடந்தகாலங்களில் வங்கிகள் வழங்கிய கடன்கள், பண வீக்கத்தை அதிகரித்துள்ளதே தவிர, உற்பத்தியைப் பெருக்க உதவவில்லை.

கடன்வாங்கி அரசாங்கம் செலவழிப்பதும், அதிகமான அளவில் கடன் வழங்குவதும், உற்பத்தி குறைவும், பணவீக்கமும், இந்தியப் பொருளாதாரத்தை தேக்கநிலைக்கும் கீழ்நிலைக்குக் கொண்டு சென்றுவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. 2020-21 நிதிநிலை அறிக்கைதான் இவைகளுக்கு சரியான தீர்வு காணவேண்டும்.